
பாம்புக்குப் பயப்படாத மனிதர்கள் மிகவும் குறைவு. பாம்புகள் தீண்டினால் மரணம் நேரும் என்கிற அச்சம் காரணமாகவே மனிதர்களுக்கு பாம்பு என்றால் நடுக்கம். ஆனால், எல்லா பாம்புகளும் விஷமுள்ளவை அல்ல. நிலத்தில் வாழும் பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவை. அவற்றின் வினோதமான விந்தை நடத்தைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
விஷப் பாம்புகளைப் போல நடித்தல்: விஷமற்ற சில பாம்புகள் விஷப் பாம்புகளைப் போலவே தங்களை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள நடிக்கின்றன. இவை தங்கள் தலையையும் உடலையும் தட்டையாக்கி வாலை அதிர்வுறச் செய்கின்றன. எலிப் பாம்புகள் இந்த முறையைத்தான் கையாளுகின்றன.
இரையைப் பிடிக்கும் டெக்னிக்: சில பாம்புகள் தங்கள் இரையைப் பிடிக்க ஒரு டெக்னிக்கைப் பயன்படுத்துகின்றன. அவை பல்லிகள் மற்றும் பறவைகளைப் போல தங்கள் வால் பகுதிகளை அசைக்கின்றன. அதைப் புழு என்று தவறாகப் புரிந்து கொண்டு அருகில் வரும் ஜீவராசிகளான தவளை போன்றவற்றை பிடித்து உண்ணுகின்றன.
உரு மறைப்பு மற்றும் பதுங்கி இருந்து வேட்டையாடுதல்: விஷமுள்ள பாம்புகளைப் போலவே விஷமற்ற பாம்புகளும் தங்களை, தம் சுற்றுப்புறங்களுடன் மறைத்துக் கொள்கின்றன. செடி கொடிகளின் பின்னால் பதுங்கி இருந்து தங்கள் உருவத்தை மறைத்துக் கொள்கின்றன. இதனால் அருகில் வரும் இரையைப் பிடித்துத் தின்கின்றன. நீண்ட நேரம் அசையாமல் தங்கள் இரை அருகே வரும் வரை காத்திருக்கும். சில பாம்புகள் இரையைப் பிடிக்க பல மணி நேரம் வரை கூட காத்திருக்குமாம்.
இரையை விழுங்கும் முறை: பாம்புகள் நெகிழ்வான தாடைகள் மற்றும் மண்டை ஓடுகளைக் கொண்டுள்ளன. அதனால் அவற்றால் இரையை முழுவதுமாக விழுங்க முடியும். சில சமயம் தங்கள் வாயை விடப் பெரிய இரையைக் கூட இவை விழுங்குகின்றன.
கேட்கும் திறன்: பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்றாலும் அவற்றின் தாடைகள் மற்றும் எலும்புகள் வழியாக ஒலி அதிர்வுகளைக் கேட்க முடியும்.
நாக்கை அசைத்தல்: பாம்புகள் காற்றிலும் தரையிலும் உள்ள வாசனைகளை ருசித்துப் பார்க்க தங்கள் முட்கரண்டி போன்ற நாக்குகளைப் பயன்படுத்துகின்றன.
முட்டையிடுதல்: பெரும்பான்மையான விஷமற்ற பாம்புகள் முட்டையிடும் தன்மை கொண்டவை.
தோற்றம்: விஷமற்ற பாம்புகளின் தலை பொதுவாக குறுகியதாகவும் நீளமாகவும் இருக்கும். இவை பிரகாசமான தோற்றத்தில் இருக்காது. விஷமற்ற பாம்புகளுக்கு பொதுவாக பற்கள் இருக்காது, விதிவிலக்காக சில பாம்புகளுக்கு இருக்கலாம். எடுத்துக்காட்டாக மலைப்பாம்புகள் விஷமற்றவை. ஆனால், அவற்றுக்குப் பற்கள் வரிசையாக இருக்கும்.
மலைப்பாம்பின் நடவடிக்கைகள்: மிகப் பெரிய பாம்புகளில் ஒன்றான மலைப்பாம்புகள் தங்கள் இரையைப் பிடிக்க பொறுமையாக நீண்ட நேரம் பதுங்கி இருக்கும். பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றை தங்கள் உடலால் இறுக்கிப் பிடித்து நொறுக்கி அவற்றை விழுங்குகின்றன. அவை தங்கள் உடலால் இரையைச் சுற்றிக் கொண்டு அழுத்துகின்றன. படிப்படியாக அதன் இரத்த விநியோகத்தைத் துண்டித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகின்றன. அதிக அளவு அல்லது வயிறு நிறைய உண்டு விட்டால் மலைப்பாம்புகள் நீண்ட நாட்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும். ஏனென்றால், அவற்றின் உடலில் வளர்சிதை மாற்றம் காரணமாக அவற்றுக்கு பசி எடுப்பதில்லை.
தண்ணீர் பாம்பின் நடவடிக்கைகள்: தண்ணீர் பாம்புகள் நீர்நிலைகளுக்கு அருகில் காணப்படும். அவை மீன் மற்றும் தவளைகளை உண்ணும். நாகப்பாம்பை போலவே தலையையும் கழுத்தையும் தட்டையாக வைத்து உடலின் முன் பகுதியை உயர்த்தி தன்னை வேட்டையாட வரும் பிற விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ளும்.
மணல் பாம்புகள்: மணல் பாம்புகள் மண்ணில் துளையிடுவதற்கு ஏற்றவாறு தடிமனான உடல் வாகைக் கொண்டவை. நிலத்திற்கு அடியில் கணிசமான நேரத்தை செலவிடுகின்றன. வால் பகுதி மழுங்கி போய் தலையை போலவே இருக்கும். இதனால் மணல் பாம்பை இரண்டு தலைப் பாம்பு என்று சிலர் குழப்பிக் கொள்வார்கள்.