
செடிகள் பெரும்பாலும் தண்ணீர் உண்டு வளரும். ஆனால், சில செடிகள் பூச்சிகள் மற்றும் சில உயிரினங்களைத் தின்று வளருகின்றன என்பது வியப்பாக இருக்கிறதல்லவா? இந்த மாதிரி செடிகளை ‘கார்னிவரஸ்’ செடிகள் என்று கூறுவர். இது போன்று தனது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அந்தச் செடிகள் தங்கள் இலைகள் மற்றும் தொடு உணர்ச்சியை பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட சில வகை செடிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. வீனஸ் ஃப்ளைட் ராப்: இந்தச் செடியின் இலைகள் வாயைப் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்த இலையில் பூச்சிகள் வந்து உட்காரும்போது இலை மூடிக் கொள்ளும். பிறகு அந்தப் பூச்சியை நிதானமாக உண்ணும்.
2. பிட்சர் செடி: இந்தச் செடிகளுக்கு ட்யூப் போன்ற இலைகள் காணப்படும். மேலும், இதில் ஒருவித நீர்த்தன்மை இருக்கும். இது வாசனையாக இருப்பதால் பூச்சிகள் இதில் அமரும்போது வழுக்கி உள்ளே விழும். நீர்த்தன்மையில் பூச்சிகள் மூழ்க, செடி இதன் சந்தை உறிஞ்சும்.
3. சன்ட்யூ செடி: இந்தச் செடிகளின் இலைகளில் பனித்துளி போன்று பளபளப்பான திவலைகள் காணப்படும். இதில் பூச்சிகள் அமரும்போது அவை அந்தப் பனித்துளியில் ஒட்டிக்கொள்ளும். இதற்குப் பிறகு இலை சுருண்டு அதை உண்கிறது.
4. ப்ளாடர் ஆர்ட் (bladder wort): இந்த வகைச் செடிகள் நீரில் காணப்படும். இதற்கு ப்ளாடர் போன்ற அமைப்பு இருப்பதால் நீர் பூச்சிகள் உள்ளே மாட்டிக்கொள்ளும்.
5. பட்டர் ஒர்ட்: இந்த வகை செடிகளுக்கு இலைகள் அகன்றும் மற்றும் ஒட்டிக் கொள்ளும் தன்மையுடன் விளங்குவதால் இதில் வந்து உட்காரும் பூச்சிகள் மாட்டிக் கொள்ளும். மேலும், இச்செடி செரிமானத்திற்காக நீரை உமிழ்ந்து பூச்சிகளை தங்களுக்கு இரையாக்கிக் கொள்கிறது.
6. கோப்ரா லில்லி: இந்த வகைச் செடியை காண்பதற்கு பச்சை பசேலென்று நாகப்பாம்பு போன்று தோற்றமளிக்கும். இதன் ட்யூப் போன்ற இலைகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதால் பூச்சிகள் உள்ளே போனால் வெளியே வர முடியாது. செடிக்கு இரையாக வேண்டியதுதான்.
7. வாட்டர் வீல் செடி: இந்த வகை செடி நீரில் காணப்படும். இதன் இலை சக்கரம் போன்ற அமைப்பு கொண்டதால் பூச்சிகள் வந்ததும் அவை மூடிக் கொள்ளும்.
8. அல்பானிய பிட்சர் செடி: இதை ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணலாம். இதற்கு வளைந்த குடம் போன்ற அமைப்பு இருக்கும். இதன் தேன் சுவைக்காக பூச்சிகள் இதில் அமரும்போது வழுக்கி உள்ளே விழ, அவை இந்தச் செடியால் ஜீரணிக்கப்படுகிறது.
9. மங்கி கப் (Tropical nepenthes): நீண்ட குடம் போன்ற அமைப்பைக் கொண்ட இந்தச் செடி பூச்சிகளை மட்டுமல்ல, தவளை மற்றும் பல்லிகளையும் இரையாக்கிக் கொள்ளும். இந்தக் குடம் போன்ற அமைப்பில் செரிமானத்திற்கான நீர் சுரக்கப்படுகிறது.