
மேக வெடிப்பு என்றால் என்வென்று பலருக்கும் தெரியாது. திடீர் மழை பொழிவு 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அதற்கு மேலும் மழை பெய்தால் அதற்கு ‘மேக வெடிப்பு’ என்று பெயர். குறுகிய காலத்தில் பெய்யும் ஆக்ரோஷமான மழை, இடியுடன் தொடர்பு கொண்டது மேக வெடிப்பு.
மழை மற்றும் புயலின்போது மேல் நோக்கிச் செல்லும் காற்றில் உள்ள நீரோட்டங்களை மேகங்கள் தாங்கிக் கொள்கின்றன. மேகங்களின் விரைவான ஒடுக்கம் காரணமாக மேக வெடிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் மேக வெடிப்பு என்பது பாலைவனம், மலைப்பகுதி, பரந்த நிலப்பரப்பு மற்றும் மலை சரிவு போன்ற இடங்களில் ஏற்படும்.
நீர் நிறைந்த திடமான பொருளை மேகம் கொண்டு இருக்கும். அதிக வலுவான வெப்ப காலங்களில் ஈரப்பதம் நிறைந்த காற்றை உருவாக்கி குமுலு நிம்பஸ் எனப்படும் மேகங்களை உருவாக்கி மூர்க்கத்துடன் தன்னிடம் உள்ள கட்டியான நீரை மேகம் விரைவாக வெளியேற்றத் தொடங்கும். செங்குத்தான மலைப்பகுதிகளில் இது அதிகம் காணப்படும். மிக விலை உயர்ந்த ரேடார் மூலம் இதனைக் கண்டறியலாம்.
ஒரு மணி நேரத்தில் பத்து சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்தால் அதற்கு மேக வெடிப்பு காரணமாக இருக்கலாம். மேகத்தில் தங்கி இருக்கும் தடிமனான தண்ணீர் பூமியில் உள்ள வெப்ப அழுத்தம் காரணமாகவும் காற்றின் வேகம் சேரும்போது மேக அழுத்தம் தாங்காமல் தன்னிடம் தேக்கி உள்ள நீரை மிகவும் ஆக்ரோஷத்துடன் வெளியேற்றுகிறது.
பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் இது அதிக அளவில் நடைபெறும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், லடாக், நேபாளம் போன்ற இடங்களில் இந்த நிகழ்வு அடிக்கடி நடைபெறுகிறது. இதன் தாக்கம் வானத்திலிருந்து ஒரு பெரிய நீர் தொட்டியைக் கவிழ்த்து அதில் இருந்து நீரை வெளியேறுவது போன்று இருக்கும். 2000 முதல் 5000 மீட்டர் உயரத்திலிருந்து வெளியேறும் மேக நீரானது மணிக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கிப் பாயும்.
மலைப்பிரதேசங்களில் அடிக்கடி நடைபெறும் இந்த நிகழ்வால் பாறை சரிவுகள், மலைச்சரிவு மற்றும் குப்பைக் கழிவுகள் அசுர வேகத்தில் அடித்து செல்லப்பட்டு அருகில் இருக்கும் கிராமங்களை மூழ்கடித்து விடும். இதனால் பெருத்த சேதத்தை உண்டாக்கும். மண்ணரிப்பு காரணமாக வீடுகள் தரை மட்டமாக ஆகிவிடும். இந்த செயல்களுக்கு மேக வெடிப்பு மழையே காரணமாகிறது.