
பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால், அந்தப் பாம்புகள் கூட தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பல தந்திர வழிகளைக் கையாள்கின்றன. சில வகை பாம்புகளின் அந்த தந்திர குணாதிசயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நாகப்பாம்பு: தனக்கு ஆபத்து நேரும்போது தற்காத்துக் கொள்வதில் இந்தப் பாம்புகள் கில்லாடி. தனது தலையை மிகப்பெரிதாக விரிக்கும். ‘புஸ் புஸ்’ என்று சத்தம் போடும். தன்னை மற்றவர் தாக்கினால் தாக்குவதற்கு தானும் தயார் என்பது போல் அது இருக்கும். இந்த பாம்புகள் சாதாரணமாக எந்த வம்புக்கும் போவதில்லை. இது கடித்தால் விஷம் உடனே உடலில் ஏறும்.
ஹாக்நோஸ் பாம்பு: இந்த பாம்பு டிராமா பண்ணுவதில் கை தேர்ந்தது. இது தன்னை யாராவது தாக்க வந்தால் இறந்த நிலையில் கிடப்பது போன்று இருக்கும். மேலும், வாயை அகலமாகத் திறந்து நாற்றமடிக்கக்கூடிய நீரை வெளிப்படுத்தும். இந்த மாதிரி இறந்தது போல் பல நிமிடங்கள் இதனால் இருக்க முடியும். மேலும், வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீர் இறந்த ஒரு உயிரினத்தின் நாற்றம் வருவதால் எதிரிகளை தாங்கள் இறந்தது போன்ற நிலையில் இருந்து ஏமாற்றி தப்பித்துக் கொள்கிறது.
ராட்டில் பாம்பு: இந்த வகை பாம்பு தனது வாலை நன்கு சத்தமாகத் தட்டும். ஆபத்து நேரும் காலத்தில் இது இப்படிச் செய்கிறது. இந்த பெரும் சத்தத்தினால் எதிரிகளை அச்சுறுத்துகிறது. வாலைத் தட்டி ஒலி எழுப்பியும் தனது தலையை மேலே தூக்கி தன்னை சுருட்டிக் கொண்டு தாக்கத் தயாராக இருக்கும். ஆபத்தான உயிரினங்களிடமிருந்து இப்படி தன்னை தற்காத்துக் கொள்ளும்.
துப்பும் மலைப்பாம்பு: இந்த வகை பாம்பு விஷத்தைக் கக்குவதில் தனித் தன்மை வாய்ந்தது. பார்வை குறைபாட்டை ஏற்படுத்தித் தப்பிக்கும் தன்மையுடன் விளங்குகிறது. மற்ற பாம்புகள் கடிப்பதன் மூலம் விஷத்தை வெளியேற்றும். ஆனால், இந்த வகை பாம்புகள் தனது கோரைப் பற்களால் எதிரிகளின் கண்களில் விஷத்தை துப்பும். இதன் மூலம் எதிரிக்கு கண் பார்வை அரிப்பை ஏற்படுத்தி கண்களை செயலிழக்கச் செய்து தப்பிக்கும்.
போவா கன்ஸ்ட்ரிக்டர்: இந்த வகை பாம்பிற்கு விஷத்தன்மை கிடையாது. இது தனது உடல் பலத்தால் தப்பிக்கும். இது தன்னைத் தாக்க வருபவர்களை நன்றாக சுற்றிக் கொண்டு அதற்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இதனால் மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படும் பெரிய உயிரினங்கள் மற்றும் மனிதர்களால் தாக்கப்படும்போது இப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது.
பவளப் பாம்பு: இந்த வகை பாம்பின் உடல் பவழம் போன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்து காணப்படும். மேலும், ஆங்காங்கு கருப்பு வளையம் காணப்படும். இவை தங்கள் உடல் நிறத்தையே தற்காப்பு சாதனமாக ஆக்குகிறது. இது மட்டுமல்லாமல், பால் பாம்பு என்ற வகையும் இந்த மாதிரி தனது நிறத்தை பயன்படுத்துகிறது. இவை விஷத்தன்மை நிறைந்தது என்று எண்ணி எதிரிகள் அருகே வராது. இதன் நிறமே அச்சுறுத்தும் வகையில் இதைக் காக்கிறது.
இப்படிப் பல வழிகளில் பாம்புகள் தங்களை தற்காத்துக் கொள்ளும் தந்திரங்களைக் கையாள்வது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.