
யானைகள் தங்களின் பெரிய உருவத்திற்கும் கம்பீரமான நடைக்கும் புகழ்பெற்றது. காட்டு விலங்குகளில் அதிக பலம் கொண்ட யானைக்கு தனி ரசிகர் குழுவும் உண்டு. இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் யானையை ஆன்மீக விலங்காகவும் பார்க்கின்றனர். தாய்லாந்து நாட்டில் யானைகள் கடவுளுக்கு நிகராக அதிகம் மதிக்கப்படுகிறது. இந்தியாவில் கூட யானைக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. ஆன்மீக செயல்களிலும் அதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.
உலகளவில் யானைகளின் எண்ணிக்கை பற்றி கேள்வி எழுந்தால், நாம் பொதுவாக அது ஆப்பிரிக்க கண்டத்தில்தான் அதிகம் உள்ளது என்பதை அறிவோம். ஆயினும் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். பலரது மனதில் இந்தியா அல்லது தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையில் இருக்க கூடுமோ என்று ரீல்ஸ் அதிகம் பார்ப்பவர்கள் நினைக்கலாம்.
வட ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும்பாலும் சஹாரா பாலைவனத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக, அங்கு யானை போன்ற பெரிய விலங்குகள் வாழ்வது கடினமாகிறது. யானைகள் பொதுவாக நிறைந்து இருப்பது ஆப்பிரிக்காவின் வளமான தெற்குப் பகுதியில் தான். ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாடுதான், உலகிலேயே அதிகளவு யானைகளைக் கொண்டுள்ளது. இந்த நாட்டில் மட்டும் 1,30,00 யானைகள் நடமாட்டத்தில் உள்ளது. மொத்த ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் 3 இல் 1 பங்கு போட்ஸ்வானாவில்தான் உள்ளது.
யானைகள் அதிகம் இருக்கும் நாடுகள் இயற்கை வளங்களையும் தன்னகத்தே மிகுதியாக கொண்டிருக்கும். பரந்த புல்வெளிகள் மற்றும் காடுகளைக்கொண்ட சவான்னாக்கள், சோப் தேசிய பூங்கா ஆகிய இடங்கள் யானைகளுக்கு புகலிடமாக விளங்குகிறது. யானைகளின் எண்ணிக்கையும் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. நகர மயமாக்கல், வேட்டையாடுதல் காரணமாக யானைகள் வாழ்க்கைக்கு ஏராளமான இடையூறுகள் உள்ளன.
உலக அளவில் யானைகள் மிகுதியாக வாழ்வது ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில்தான். அதற்கு அடுத்தபடியாக ஆசிய கண்டத்திலும் யானைகள் மிகுதியாக காணப்படுகிறது. பொதுவாக இந்தியா, பர்மா, இலங்கை, தாய்லாந்து இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் யானைகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவிற்கும் நிலத்தொடர்பு ஒரு காலத்தில் சாத்தியகமாக இருந்தாலும் கூட, யானைகள் ஆப்பிரிக்காவின் வழியே ஆசியாவிற்கு வரவில்லை.
ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளைவிட உருவத்திலும் குணத்திலும் மாறுபட்டவை. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா இணையும் எகிப்து மற்றும் அரபு நாடுகளில் நிலங்கள் பெருமளவில் பாலைவனமாக இருப்பதால், யானைகள் போன்ற பெரிய விலங்குகள் வாழ சாத்தியக்கூறுகள் குறைவுதான். ஐரோப்பிய கண்டத்திலும் அமெரிக்காவிலும் காடுகளில் யானைகள் இருப்பதில்லை. அங்கு இருப்பது எல்லாம் மிருகக்காட்சி சாலையில் பரமாரிக்கப்படுபவை.
யானைகளின் எண்ணிக்கை:
உலகளவில் யானைகளின் எண்ணிக்கையை உள்ளூர் அரசாங்கமும், விலங்கு நல ஆர்வலர்களும் இணைந்து கணக்கெடுத்துள்ளனர். இதில் அளவுகள் தோராயமாக கணிக்கப்படுகிறது. யானைகள் இடம்பெயரும் தன்மை கொண்ட விலங்குகள். அவை எல்லையோர நாடுகளுக்கும் அடிக்கடி இடம்பெயர்வதை குடியுரிமை அதிகாரிகளால் தடுக்கவும் முடியாது. இதனால் யானைகளின் எண்ணிக்கையில் கூர்மையான தரவை எடுப்பது கடினம் என்றாலும், ஒப்பீட்டளவில் சரியான எண்ணிக்கையை மதிப்பிடுகின்றனர்.
2021 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகில் அதிக யானைகள் வாழும் நாடாக 1,30,000 யானைகளுடன் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. சுமார் 1,00,000 யானைகளுடன் ஜிம்பாப்வே இரண்டாம் இடத்திலும், 60,000 யானைகளுடன் தான்சானியா 3 இடத்திலும் உள்ளது. கென்யா 35,500 யானைகளுடன் 4 வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 24,000 யானைகளுடன் 5 வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் யானைகள்:
ஆசியக் கண்டத்தைப் பொறுத்த வரையில் இந்தியா 17,000 யானைகளுடன் கண்டத்தில் முதலிடம் பெறுகிறது, உலகளவில் எட்டாவது இடம் பெற்றுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியாவில் மட்டுமே 10 லட்சம் யானைகள் வாழ்ந்து வந்துள்ளன. இன்றைய உலகில், அனைத்து யானைகளின் எண்ணிக்கையை சேர்ந்தால் கூட அவ்வளவு வராது.