
ராட்சத பசிபிக் ஆக்டோபஸ் உலகின் மிகப்பெரிய ஆக்டோபஸ் இனத்தைச் சேர்ந்தது. இது புத்திசாலித்தனம் மற்றும் தனித்துவமான தோற்றத்திற்குப் பெயர் பெற்றது. இது மூன்று இதயங்கள், 7 முதல் 16 அடி வரையிலான கரங்கள் மற்றும் சிவப்பு - பழுப்பு நிறத் தலை மற்றும் உடலைக் கொண்டுள்ளது. ராட்சத பசிபிக் ஆக்டோபஸ் பாறைகளில் மறைந்து வாழும்.
இது 270 கிலோ கிராம் வரை எடை உள்ளதாகவும், இதனுடைய ஒரு கை நுனியில் இருந்து மற்றொரு கை நுனி வரை 9 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியதாகவும் இருக்கும். ராட்சத பசிபிக் ஆக்டோபஸின் உடல் மென்மையாகவும், வட்டமாகவும், பை போன்ற அமைப்பிலும் இருப்பதால் இதனால் சிறிய இடைவெளிகளைக் கூட கடந்து செல்ல முடியும்.
குமிழ் போன்ற அமைப்பில் உள்ள இதனுடைய தலை, ‘மேண்டில்’ என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு, பழுப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இரண்டு பெரிய கண்கள் உள்ளன. எட்டு நீண்ட வலுவான கைகளையும் கொண்டுள்ளன. எட்டுக் கைகள் ஒவ்வொன்றிலும் 200க்கும் மேற்பட்ட உறிஞ்சும் கோப்பைகள் போன்ற அமைப்பு உள்ளது. இவற்றின் உதவியால் ஆக்டோபஸ்களால் பாறைகளைப் பிடிக்கவும், ஓடுகளைத் திறக்கவும் அல்லது இரையைப் பிடிக்கவும் முடிகின்றன.
இந்த ராட்சத பசிபிக் ஆக்டோபஸின் உடல் ஜெல்லி போன்ற அமைப்பில் மென்மையாக இருப்பதால் இதற்கு எலும்புகள் இல்லை. தன்னுடைய மொத்த உடலை மடித்துக் கொள்ளவும், நீட்டிக் கொள்ளவும், சுருக்கிக் கொள்ளவும் இதனால் முடியும். மிகப்பெரிய உருவத்தில் இருக்கும் ஆக்டோபஸினால் சின்ன சின்னத் துளைகள் வழியாக நுழைந்து அதற்குள் தனது உடலை மடித்துக்கொள்ள முடியும்.
இந்த ஆக்டோபஸினால் தன்னுடைய நிறத்தையும், உடலின் அமைப்பையும் மாற்றிக் கொள்ள முடியும். இதனை வேட்டையாட வரும் பெரிய கடல் விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தன்னுடைய உடலையும், நிறத்தையும் மாற்றிக் கொண்டு தப்பிக்கின்றன. பாறைகள், மணல்வெளிகள், கடற்பாசிகள் போன்றவற்றில் இவை ஒட்டிக்கொண்டு தன்னை பாதுகாத்துக் கொள்கின்றன.
தனது கைகளை இயக்கத்திற்கு மட்டுமல்ல, அதன் சுற்றுச்சூழலை ஆராய்வதற்கும், பொருட்களை கையாள்வதற்கும் பயன்படுத்துகிறது. ஆக்டோபஸ் பாறைகளில் இருந்து குகைகளை உருவாக்குகிறது. சில சமயங்களில் பாதுகாப்பிற்காக குகை நுழைவாயிலைத் தடுக்க ஓடுகளைப் பயன்படுத்துகிறது.
ராட்சத பசிபிக் ஆக்டோபஸ்கள் நண்டுகள், இறால்கள், மீன்கள், சிறிய சுறாக்களைக் கூட சாப்பிடுகின்றன. இவை வலுவான அலகு போன்ற வாயைக் கொண்டுள்ளன. இதனால் கடினமான ஓடுகளை உடைக்க அல்லது இரையைக் கடிக்க இந்த அலகு பயன்படுகிறது. பெரும்பாலான ராட்சத பசிபிக் ஆக்டோபஸ்கள் சுமார் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
வடக்கு பசிபிக் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக அலாஸ்கா, கலிபோர்னியா, ஜப்பான் மற்றும் கொரியாவில் இவை காணப்படுகின்றன. வடக்கு பசிபிக் பெருங்கடலின் குளிர்ந்த நீர் ராட்சத பசிபிக் ஆக்டோபஸ்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. பெரும்பாலும் கடலின் அடிப்பகுதிக்கு அருகில் உள்ள பாறைப் பிளவுகள் அல்லது குகைகளில் இவை ஒளிந்து கொள்கின்றன.
இந்த ஆக்டோபஸ்கள் அதீத புத்திசாலித்தனமும் சிக்கலான நரம்பியல் அமைப்பையும் கொண்டவை. இவற்றிற்கு 300 மில்லியன் நியூரான்கள் உண்டு. அவற்றின் உதவியால் இந்த ராட்சத ஆக்டோபஸ்களின் ஞாபகத்திறன் அதிகமாக இருக்கும். அதனுடைய எட்டுக் கைகளிலும் தனித்தனியாக நரம்பு முடிச்சுகள் உள்ளன. அவை சிறிய மூளைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றால் சிந்தனை செய்யவும், தனித்து இயங்கவும், உணரவும் முடியும். எட்டு கைகளையும் பல்வேறு திசைகளில் துழாவி, சுற்றுப்புறத்தை ஆராயவும், ஏதாவது பொருட்கள் தடையாக இருந்தால் அவற்றை எடுத்து எறியவும் இவற்றால் முடியும்.