நெதர்லாந்து நாட்டின் ‘சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை’ எனும் அமைப்பு தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கடற்கரைகளுக்கு, ‘நீலக்கொடி விருது’ (Blue Flag Award) வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
நீலக் கொடி என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சுகாதாரமான வசதிகளுடன் சுத்தமான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் ஒரு தன்னார்வக் குறிச்சொல் ஆகும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி நடைமுறைகள் மூலம் சுற்றுலாத் துறையில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் சூழல் சுற்றுலா மாதிரியின் ஒரு பகுதியாகவும் நீலக்கொடி விருது உள்ளது.
நீலக் கொடி திட்டம் 1985 ஆம் ஆண்டில் பிரான்சில் தொடங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவிலும், 2001ஆம் ஆண்டு முதல் ஐரோப்பாவிற்கு வெளியேயும் செயல்படுத்தப்பட்டது. ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் நீலக் கொடி கடற்கரைகளைக் கொண்ட முதல் ஆசிய நாடுகள் ஆகும்.
இந்த ஆண்டு வரை நீலக்கொடி விருதினை 51 நாடுகளைச் சேர்ந்த 5195 கடற்கரைகள் பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் குஜராத் மாநிலம், துவாரகாவிலுள்ள சிவராஜ்பூர் கடற்கரை, ஒடிசா மாநிலம், பூரியிலுள்ள கோல்டன் கடற்கரை, டையூ பகுதியிலுள்ள கோக்லா கடற்கரை, கர்நாடக மாநிலம், உத்தர கன்னடத்திலுள்ள காசர்கோடு கடற்கரை, கர்நாடகா மாநிலம், உடுப்பியிலுள்ள படுபித்ரி கடற்கரை, ஆந்திரப்பிரதேசம், விசாகப்பட்டினம் ருஷி கொண்டா கடற்கரை, அந்தமான் & நிக்கோபர் தீவுகள் பகுதியிலுள்ள ஹேவ்லாக் தீவிலுள்ள ராதாநகர் கடற்கரை, தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள கோவளம் கடற்கரை, புதுச்சேரியிலுள்ள ஈடன் கடற்கரை, லட்சத்தீவுகளிலுள்ள மினிக்காய் துண்டி கடற்கரை மற்றும் கத்மத் கடற்கரை, கேரள மாநிலம், கோழிக்கோட்டிலுள்ள கப்பாடு கடற்கரை, கேரளா மாநிலம், கண்ணூரிலுள்ள சால் கடற்கரை என்று மொத்தம் 13 கடற்கரைகளுக்கு நீலக்கொடி விருது வழங்கப் பெற்றுள்ளது. இந்த விருது பெற்ற கடற்கரைகளை, ‘நீலக்கொடி கடற்கரை’ (Blue Flag beach Blue) என்று அழைக்கின்றனர்.
கடற்கரை நீலக்கொடி விருது மற்றும் அதற்கான இலச்சினை பெறுவதற்கு, கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
நீலக் கொடி கடற்கரை என்பது சிறந்த குளியலுக்குத் தரமான நீரைக் கொண்டிருக்க வேண்டும்.
அனைத்து சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளிலும் குறைந்தபட்சம் ஒரு நீலக்கொடி தகவல் பலகை இருக்க வேண்டும். குளியல் நீரின் தரம் குறித்த தகவல் பலகையில் காட்டப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நடத்தக்கூடிய கடற்கரைகளுக்கு மட்டுமே நீலக் கொடி அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
நீலக்கொடி கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், பாதைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் அணுகல் பாதைகள் ஆகியவை சுத்தமாகவும் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.
மேலும் இப்பகுதியில் குப்பைகள் குவிவதை அனுமதிக்கக்கூடாது. கடற்கரையில் கழிப்பறைகள் அல்லது ஓய்வறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இருத்தல் வேண்டும் மற்றும் பலகைகள் மூலம் எளிதாகக் கண்டறிய வசதிகள் இருக்க வேண்டும். அனுமதியின்றி முகாமிடுதல், வாகனம் ஓட்டுதல் மற்றும் குப்பை கொட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் உதவிக்கான நாய்களைத் தவிர செல்லப்பிராணிகள், நீலக் கொடி கடற்கரையில் அனுமதிக்கக்கூடாது.
அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்ட நீலக் கொடி கடற்கரையானது தகுதிவாய்ந்த மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய உயிர்காப்பாளர்களால் ரோந்து செல்லப்பட வேண்டும். தனிப்பட்ட மிதக்கும் சாதனம் (லைப் ஜாக்கெட்), முதலுதவி உபகரணங்கள் கடற்கரையில் இருக்க வேண்டும். உணவு விடுதி இருத்தல் வேண்டும். மேலும் நீலக்கொடி கடற்கரைகளுக்கு கட்டணமில்லாமல் அனுமதி அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் கடற்கரைகளை அணுகக்கூடிய வகையில் சாய்வுதளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
என்கிற நிபந்தனைகளை நிறைவு செய்திட வேண்டும். நீலக்கொடி விருது பெற்ற கடற்கரைகளில் மட்டுமே நீலக்கொடியை பறக்க விடவேண்டும் என்கிற நிபந்தனையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்தியாவின் மூன்று பகுதிகளில் கடல் நீர் சூழப்பட்டு, மிக அதிக அளவிலான கடற்கரைப் பகுதிகள் இருந்த போதிலும் 13 கடற்கரைகள் மட்டுமே நீலக்கொடி விருது பெற்றிருக்கிறது என்பது மிகமிகக் குறைவு என்றேச் சொல்லலாம். இந்தியக் கடற்கரைகள் சுற்றுச்சூழ்லுக்கேற்ற வகையில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, அதிக அளவிலான நீலக்கொடி விருதுகளைப் பெற்றிட வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.