
மனித குலத்தையே அச்சத்தில் ஆழ்த்திவரும் புவி வெப்பமயமாதலுக்குக் (global warming) காரணம் என்ன? இது பற்றி ஒவ்வொருவரும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். பழைய காலத்தில் எரிமலை வெடிப்பு உள்ளிட்ட காரணங்கள் பூமியின் வெப்பத்தைச் சிறிது அதிகரிக்க வைத்தன. இது பெரிதாக மனித வாழ்க்கையை பாதிக்கவில்லை. ஆனால், தொழில் புரட்சிக்குப் பின்னர் மனிதர்களே புவியின் வெப்பத்தை உயர வைக்கின்றனர் என்பது நிரூபணமாகி விட்டது. 1950க்குப் பின்னர் இயந்திரமய உலகில் பூமியின் வெப்பம் பயம்கொள்ள வைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1880லிருந்து இன்று வரையுள்ள காலகட்டத்தில் பூமியின் வெப்பம் ஒரு டிகிரி செல்ஸியஸ் உயர்ந்து விட்டது. இதனால் பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. இதனால் கடல் மட்டம் உயர்கிறது. கடல் மட்டம் உயர்ந்தால் கடலோரப் பகுதிகள் தண்ணீரில் மூழ்க ஆரம்பிக்கும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழப்பர். அதுமட்டுமின்றி, புவி வெப்பம் உயர்வதானது காலநிலை மாற்றத்தை உருவாக்கும். பருவ மழை பெய்யாது. பஞ்சம் அதிகரிக்கும். மனிதர்கள் பட்டினியால் இறப்பர். பூமியின் வெப்பம் உயர்வதால் மனிதர்கள் வாழ்வது பல பகுதிகளில் இயலாத ஒன்றாக ஆகி விடும். சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும்.
அடுத்து, சுற்றுச்சூழல் அமைப்பு பாழ்படும். இதனால் அரிய வகை தாவரங்கள் வளராது. பல வன விலங்குகள் முற்றிலுமாக அழிந்து விடும். வெப்பமும், ஈரப்பதமும் மாறுபடும். இதனால் கொரானா போன்ற வியாதிகள் தோன்றும். இது மட்டுமின்றி, விநோதமான வியாதிகளைப் பரப்பும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். புவி வெப்பமயமாவதால் பல விலங்குகள், பறவைகள் தங்கள் வாழ்விடத்தை இழக்க நேரிடும். பல இனங்கள் எங்கு போவது என்று தெரியாமல் அழிந்துவிடும்.
பனிப்பாறைகள் உருகுதலானது பல அபாய விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல தூய நீரை உள்ளடக்கி வைத்திருக்கும் இவை காலப்போக்கில் குறைந்துவிட்டால் நல்ல நீருக்குப் பஞ்சம் ஏற்படும். காற்றை விட மிக அதிகமான உஷ்ணத்தையும் கார்பன் டை ஆக்ஸைடையும் கடல் நீரே உறிஞ்சுகிறது. புவி வெப்பம் கூடினால் கடல் நீர் சூடாகும். அமிலத்தன்மை அதிகமாகும். பவளப்பாறைகள் உள்ளிட்டவை அழிந்து விடும். இதனால் பலவிதமான மீன் வகைகள் முற்றிலுமாக அழியும்.
இந்தப் புவி வெப்பமயமாதலுக்குக் காரணம் பெரும்பாலும் மனிதர்கள்தான்! காடுகளை மனிதர்கள் அழித்துக்கொண்டே இருக்கிறார்கள். தாவரங்களே உயிர் வாழ மனிதர்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆக்ஸிஜனுக்கு ஆதாரம். அதையே அழித்தால் நம்மை நாமே அழித்துக்கொள்வது போலத்தான்!
இதேபோல, க்ரீன் ஹவுஸ் கேஸ்களின் அச்சுறுத்தல் ஒரு புறம்! வாகனப் பயன்பாடு, படிம எரிபொருளைப் பயன்படுத்துவதால் நச்சு வாயுக்களை சுற்றுப்புறமெங்கும் எவ்வளவு பரப்புகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். டீஸல், பெட்ரோல் ஆகிய படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்! சி.எஃப்.சி. எனப்படும் க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் வாயு ஏர்கண்டிஷனர்கள், ப்ரீஸர் உள்ளிட்டவற்றிலிருந்து வந்து வளிமண்டலத்தை நச்சு மயம் ஆக்குகிறது! இவற்றின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.
தொழிலகம் வெளியேற்றும் நச்சு வாயுக்கள் எத்தனை எத்தனை! அவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரை ஆற்றுடனும், நல்ல நீர் தரும் ஓடைகள், வாய்க்கால், ஏரிகளுடன் கலக்க விடலாமா? விவசாயத்தில் இன்று பல இடங்களில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீதேன் வாயுவை வெளியேற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன! இதை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இறுதியாக, அதிகமான ஜனத்தொகை! 820 கோடியை எட்டி விட்டது உலக ஜனத்தொகை! அதில் இந்தியர்கள் 146.39 கோடி பேர்! இதை எண்ணிப் பெருமைப் படுவதா அல்லது பயப்படுவதா? வளி மண்டலத்தைச் சுத்தமாக்க மொத்த இந்தியாவும் கிளம்பிவிட்டால் நமது ஜனத்தொகை பற்றி நாம் பெருமையே படலாம்! பூமிக்கு அபாயம் வந்து விட்டது! அதைப் போக்கும் உபாயமும் தெரிந்து விட்டது! மாற்றி யோசித்து செயல்படுவோமா?