இந்திய நிலப்பரப்பு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலப் பரப்பாலும் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரியது, உயர்ந்தது இமயமலைத் தொடர். எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயர்ந்த சிகரங்கள் இம்மலைத்தொடரில்தான் அமைந்துள்ளது. உறைபனியால் மூடப்பட்டு, வெண்பனி மலையாய் காட்சியளிக்கும் இமயமலை இந்தியாவின் வட எல்லை ஆகும்.
இமயமலைத் தொடர்கள் அவற்றின் தனித்துவமான அழகு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெயர் பெற்றவை. இந்த மலைத்தொடர்கள் அப்பகுதியின் காலநிலையை பாதிக்கின்றன மற்றும் பல ஆறுகள் உற்பத்தியாகும் இடமாகவும் விளங்குகிறது. மேலும், இந்தப் பகுதியில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தப் பகுதி முக்கியமானது.
இமயமலைத் தொடர் இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அடங்கும். இமயமலைத் தொடர் உலகின் மிக உயரமான மலைத்தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பூமி ஒரே திடப்பொருள் கிடையாது. பல துண்டுகளாக தட்டு போன்று நகர்ந்து கொண்டே இருக்கின்றது. 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மற்றும் யுரேசிய தட்டுகளின் மோதலால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இமயமலை உருவானது. அவற்றின் தொடர்ச்சியான உயர்வுக்கு கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) முக்கியக் காரணமாக அமைந்தது.
எவரெஸ்ட் பகுதியிலிருந்து 75 கி.மீ. (47 மைல்) தொலைவில் உள்ள அருண் நதிப் படுகையில் ஏற்படும் நிலப்பரப்பு இழப்பின் காரணமாக, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 2 மி.மீ. வரை உயர்கிறது என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (University College London- யுசிஎல்) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
உலகிலேயே மிகப்பெரிய. மலையான இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்தது. நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தற்போது இமயமலை இருக்கும் பகுதியில் ‘பெத்தீஸ்’ என்ற கடல் இருந்தது என்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்.
இமயமலைத் தொடர் ஐந்து நாடுகளில் பரவியுள்ளது. பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவாகும் .அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைச் சிகரங்கள் உள்ளன. அதில் எவரெஸ்ட் போன்ற உயரமான சிகரங்கள் இருப்பது நேபாள நாட்டில்தான்.
எவரெஸ்ட் சிகர சாகசப் பயணத்திற்காக வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் நோக்கத்தில் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரம் தொட்ட எட்மண்ட் ஹிலாரி 1965ம் ஆண்டு உருவாக்கியதுதான் தற்போது நேபாள நாட்டில் உள்ள விமான நிலையம். இது கடல் மட்டத்திலிருந்து 9825 அடி உயரத்தில் உள்ளது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு ஒரு நபருக்கு சராசரியாக 50,000 டாலர்கள் செலவாகிறது.
வருடந்தோறும் சராசரியாக 600 பேர் எவரெஸ்ட் சாகச பயணத்திற்காக நேபாள நாட்டிற்கு வருகிறார்கள். இதன் மூலம் நேபாளம் தங்களது வருடாந்திர மொத்த வருமானத்தில் 43 சதவீதத்தை சம்பாதிக்கிறதாம். 2015ம் ஆண்டு நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் 3 செ.மீ. நகர்ந்து விட்டது.