‘சிவனார் வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாஞ்…' என்பது சிவனார் வேம்பு தாவரத்துக்கான அடையாளத்தை சுட்டிக்காட்டும் பாடல். சிவனார் வேம்பானது காந்தாரி, அன்னெரிஞ்சான் பூண்டு இறைவன வேம்பு ஆகிய வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரத்தைப் பறித்து உலர்த்தும் அன்றே எரித்தால் புகையை கக்கும் மூலிகை என்ற காரணத்தினால் இதை ‘அன்று எரிந்தான் பூண்டு’ என்று அழைத்துள்ளனர். இதுவே மருவி, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’ ஆகிவிட்டது.
சிவன் என்றால் நெருப்பு என்ற ஆன்மிகத் தத்துவத்தின் அடிப்படையில் எரியும் தன்மை உடையதால் சிவனார் வேம்பு என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வேப்ப மரத்திற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.
இதன் தண்டில் வெள்ளி தூவியதை போன்ற ரோம வளரிகள் காணப்படும். மிகச் சிறிய வடிவிலான முட்டை வடிவ இலைகளோடு செம்மண், மணற்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும். இதன் தாவரவியல் பெயர் 'இண்டிகோஃ பெரா அஸ்பலதாய்ட்ஸ்.' பீனால்கள், டேனின்கள் போன்ற நோய்களைத் தடுக்கும் வேதிப் பொருட்களைக் கொண்டுள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்: முழு தாவரத்தையும் காயவைத்து பொடித்து சம அளவு கற்கண்டு சேர்த்து அரைத் தேக்கரண்டி அளவு பாலில் கலந்து பருக, நாட்பட்ட நோய்கள் நீங்கி ஆயுள் கூடும் என்கிறது சித்த மருத்துவ குறிப்பு. இதன் வேரை வாயிலிட்டு சுவைக்க வாய்ப்புண், பல் வலி மறையும்.
நாயுருவி வேரைப் போலவே இதன் வேரையும் பற்குச்சியாகப் பயன்படுத்தலாம். இலைகள், பூக்களை உலர்த்தி குடிநீராகக் காய்ச்சி பயன்படுத்தும்போது சருமத்தில் உண்டாகும் பெரும்பாலான உபாதைகள் நம்மை விட்டு விலகும். ஆஸ்துமா நோயின் வீரியத்தை கட்டுப்படுத்த முழு தாவரத்தையும் ஒன்றிரண்டாக இடித்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துப் பருகலாம்.
மருத்துவ குணங்கள்: இதில் இருக்கும் ஆன்டி_ஆக்ஸிகரணிப் பொருட்கள் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு காரணமாவது விலங்குகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவு குறிப்பிடுகிறது. கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் அரணாகவும் சிவனார் வேம்பு செயல்படுகிறது. காயம் ஏற்பட்ட இடத்தில் நிகழ வேண்டிய நுணுக்கமான மீள் உருவாக்கப் பணிகளை சிவனார் வேம்பின் சாரங்கள் விரைவுபடுத்துவதாக ஆய்வில் அறியப்படுகிறது.
பாக்டீரியாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் செயல்பாடும் இதற்கு இருக்கிறது. சரும நோய்களில் உண்டாகும் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றலும் ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. மேலும், வலி நிவாரணி மூலம் நோய்களுக்கன மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்.
சிவனார் வேம்பு குழித்தைலம்: இதன் வேரோடு வாலுழுவை அரிசி சேர்த்து, கருடன் கிழங்கு சாற்றில் அரைத்து வில்லைகளாகச் செய்து குழிதைல முறைப்படி தயாரிக்கப்படும் சிவனார் வேம்பு குழித்தைலம், கரப்பான், தேமல், சொறி, சிரங்கு, காளாஞ்சகப் படை என பல்வேறு வகையான சரும நோய்களுக்கு அருமருந்து. குழிக்குள் மூலிகை ஏந்திய பானையை வைத்துச் சுற்றி எருவாக்கி புடம் போட்டு வடித்தெடுக்கப்படும் குழித்தைல தயாரிப்பு முறை சித்த மருத்துவத்தின் சிறப்பு. அதில் சிவனார் வேம்பு குழித்தைலம் நோய்களுக்கான கோடரி!
சிவனார் வேம்பு சூரணம்: சிவனார் வேம்பு, பரங்கிப்பட்டை என்னும் மூலிகையும் சேர்த்துக் கொண்டால் போதும், சரும நோய்கள் அண்ட விடாமல் துரத்தலாம். சிவனார் வேம்பை பால் விட்டு அரைத்து பாலில் கலந்து பருக நீண்ட நாட்களாக படுத்தும் பாத வெடிப்பு, நீர் கரப்பான் மறையும். இதன் வேரை நல்லெண்ணெயோடு அறுகம்புல் சாறு சேர்த்து காய்ச்சி சிரங்கு நோய்களுக்கு பூச தேகத்தில் புது விடியல் பிறக்கும். மொத்தத்தில் சிவனார் வேம்பு நோய்களை விரட்டும் மூலிகை அம்பு ஆகும்.