காலநிலை மாற்றமும்,  துருவப் பகுதிகளும்!

Polar Region
Impact of Climate Change on the Polar Regions
Published on

வடக்கில் ஆர்டிக் மற்றும் தெற்கில் அண்டார்டிகா உள்ளடக்கிய துருவப் பகுதிகள் காலநிலை மாற்றத்தால் மிக விரைவான மாற்றங்களை சந்தித்து வருகின்றன. உயரும் வெப்பநிலை, உருகும் பனி மற்றும் சுற்றுச்சூழல் மாறுதல்கள் ஆகியவை காலநிலை மாற்றத்தினாலே ஏற்படுகின்றன.  இந்தப் பதிவில் துருவப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகளைப் பற்றி பார்க்கலாம். 

துருவப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மிகவும் ஆபத்தான விளைவுகளில் ஒன்று, பனி உருகுவதாகும். குறிப்பாக ஆர்டிக் பகுதிகளில் பனியின் அளவு குறைந்து வருகிறது. இது துருவக் கரடிகள் மற்றும் துருவ பகுதியில் வாழும் சில உயிரினங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. மேலும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதால் உலக அளவில் கடல் மட்டம் உயர்ந்து கடலோர சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. 

துருவப் பகுதிகளில் பனியின் அளவு குறையும்போது அது உணவுச் சங்கலியை சீர்குலைத்து மீன்கள், கடல் பறவைகள் மற்றும் கடல் பாலூட்டிகளை பெரிதளவில் பாதிக்கிறது. இந்த மாற்றங்களால் விலங்குகள் மட்டுமின்றி, அந்த விலங்குகளை நம்பி இருக்கும் உயிரினங்கள் மீதும் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும். 

துருவப் பகுதிகளில் பனி உருகுவதால் கடல் நீரோட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு உள்ளிட்ட உலகளாவிய காலநிலை முறைகளை ஒழுங்குபடுத்துவதில் கடல் நீரோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நீரோட்டங்களில் ஏற்படும் இடையூறால், வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு தீவிர வானிலை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள நேரலாம். 

துருவப் பகுதிகள் அதிக அளவிலான கார்பனை சேமித்து வைத்திருக்கின்றன. வெப்பநிலை அதிகரிக்கும்போது பனிக்கட்டிகள் கரைந்து மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. இதனால் வளிமண்டலம் மேலும் வெப்பமடைந்து காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தி வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
வீட்டில் அகர்பத்தி ஏற்றுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Polar Region

துருவப் பகுதிகளே காலநிலைகளை கட்டுப்படுத்துகின்றன. இதில் ஏற்படும் பாதிப்புகளால் வானிலை மற்றும் வளிமண்டலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதால், இது நீண்ட கால விளைவுகளை பூமியில் ஏற்படுத்தும். துருவப் பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பத்தால் மற்ற இடங்களில் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் புயல்கள் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படலாம். 

இப்படி காலநிலை மாற்றத்தால் துருவப் பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மேலும் மோசமாக்கும். எனவே காலநிலை மாற்றத்தை தணிக்கவும், பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைக்கவும் துருவப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com