

‘ஹலாரி கழுதை’ என்பது குஜராத்தில் காணப்படும் ஒரு அரிதான இனக் கழுதை வகையாகும். இக்கழுதை இனமானது பால் உற்பத்திக்கு பெயர் பெற்றது. குஜராத்தில் உள்நாட்டு இனமான ஹலாரி இனக் கழுதையின் பால் அதிக மதிப்பை பெற்றுள்ளது. ‘திரவத் தங்கம்’ எனப் போற்றப்படும் கழுதைப் பாலில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த வகை இனக் கழுதையின் பால் ஒரு லிட்டர் விலை 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உலகிலேயே விலை உயர்ந்த பால் இதுதான். பால் உற்பத்திக்கான அதிக தேவை காரணமாக, இந்த இனத்தின் வணிக சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
வெண்மை நிற ஹலாரி கழுதைகள் வலிமையான தசைகள் கொண்டவை. பொதிகளை சுமந்து கொண்டு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை பயணிக்கக் கூடியவை. இக்கழுதைகளை வளர்ப்பவர்கள், ‘மால்தாரி’ என்று அழைக்கப்படுகிறார்கள். மால் என்றால் குஜராத்தியில் கால்நடைகள், தாரி என்றால் பாதுகாவலர்கள் மற்றும் வளர்ப்பவர்கள் என்று பொருள்.
பிரபல அழகியான கிளியோபாட்ரா தன்னுடைய இளமை மற்றும் அழகை பாதுகாப்பதற்கு கழுதைப் பாலில் குளித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? கழுதை பாலில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இளமையாக வைத்திருக்க உதவும் இந்த கழுதைப் பால் குழந்தைகளுக்கு எந்தவிதமான ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.
ஹரியானாவின் ஹிசாரில், குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCE) இந்தியாவில் முதல் கழுதைப் பால் பண்ணையை தொடங்கியுள்ளது. இந்தப் பண்ணையின் முக்கிய நோக்கம், கழுதைப் பால் பண்ணையை உருவாக்குவதும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் கழுதைப் பாலை விற்பனை செய்வதுமாகும்.
இந்தியாவின் முதல் கழுதைப் பால் பண்ணை ஹரியானாவின் ஹிசார் பகுதியில் உள்ளது. அருகி வரும் ஹலாரி கழுதைகளை வாங்கி இனப்பெருக்கம் செய்து பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை குறைவதற்கான காரணம் கழுதைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாததுதான். பெரும்பாலான மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறிவிட்டதால் ஹலாரி கழுதைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
இந்தக் கழுதைகளின் பால் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. புற்றுநோய், உடல் பருமன், ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது. இந்தக் கழுதையின் பால் ஒரு லிட்டர் 2000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. கழுதைப் பால் மூலம் அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இது சோப், லிப் பாம், பாடி லோஷன் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கழுதைப் பாலில் செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் விலை கூட அதிகம்தான்.