
நல்ல தாய் மரத்தை தேர்வு செய்தால்தான் நாற்றங்காலில் வீரியம் உள்ள செடிகளை வளர்ப்பதற்கும், அதிகமான மகசூல் கிடைப்பதற்கும் வழிவகுக்கும். அதற்கு தேர்வு முறை ஒரு முக்கியமான காரணியாகும். சீரியத் தேர்வு முறைகளின் மூலம் இத்தகைய பயன்களை நாம் அடைய முடியும். இவ்வாறு தேர்வு செய்த தாய் மரத்திலிருந்து பெறப்பட்ட விதைகள் மூலம் உருவாக்கப்பட்ட நாற்றுகள் மற்றும் குச்சிகள் அதிக வீரியம் உடையவையாகவும் தாய் மரத்தைப் போலவும் தோற்றமளிக்கும். பல்வேறு வகையான மரங்களுக்கான தாய் மரத் தேர்வு முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், விதையில்லா பயிர் பெருக்க முறைகளைப் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
தைல மரம்: 10 முதல் 20 வயதுக்குள் இதற்கான தாய் மரம் இருக்க வேண்டும். நல்ல உயரமும் சுற்றளவும் கொண்ட மரமாக இருக்க வேண்டும். மரத்தின் உச்சி குறுகலாக இருக்க வேண்டும். உச்சந்தலையில் இலைகள் அடர்த்தியாக இருக்க வேண்டும். கிளைகள் சிறியவையாகவும் முதன்மை தண்டுடன் குறுகிய கோணத்தினைக் கொண்டதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். விதைகள் நல்ல முளைப்புத் திறன் உடையனவாக இருக்க வேண்டும்.
சவுக்கு மரம்: தாய் மரம் 10 முதல் 15 வயதிற்குள் இருக்க வேண்டும். மரத்தின் உயரம் குறைந்து 30 முதல் 40 மீட்டர் இருக்க வேண்டும். மரத்தின் சுற்றளவு 6 முதல் 8 வருடங்கள் வரை மாதத்திற்கு ஒரு சென்டி மீட்டர் அதிகரிக்க வேண்டும். தண்டு, அழுகல் நோய் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். இது போன்ற தன்மை உள்ள தாய் மரத்தினை தேர்வு செய்தால் சவுக்கு மரம் நல்ல மகசூல் தரும் விதைகளைக் கொடுக்கும்.
வேம்பு: தாய் மரத்தின் வயது 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மூன்று மீட்டர் முதல் 7 மீட்டர் வரை பக்கக் கிளைகள் இல்லாமல் மரத்தின் தண்டு நேராக இருக்க வேண்டும். மரத்தின் விதானம் அகலமாக விரிந்து காணப்பட வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். மரத்தின் உயரம் 12ல் இருந்து15 மீட்டர் வரையிலும் சுற்றளவு ஒரு மீட்டருக்கு மேல் உடையதாகவும் இருக்க வேண்டும். விதையில் எண்ணெய் சத்து 30 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
தேக்கு: தாய் மரத்தின் வயது 30 வருடத்திற்கு மேல் இருக்க வேண்டும். மரம் வீரியமாக வளரக்கூடியதாகவும் சுற்றியுள்ள மரங்களைக் காட்டிலும் உயரத்திலும் சுற்றளவிலும் அதிகமாக இருக்க வேண்டும். மரத்தின் சுற்றளவு 120 சென்டி மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். கிளைகள் அடர்த்தியாக இல்லாமலும், குறுகியதாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும். நல்ல பூக்கும் மற்றும் காய்க்கும் மரமாக இருக்க வேண்டும். மரத்தின் கீழ் மட்டத்தில் இருக்கும் கிளைகள் தானாகவே உதிரும் தன்மை கொண்டு இருக்க வேண்டும். நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும்.
விதை இல்லா பயிர்பெருக்க முறைகள்: இம்முறையில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள் தாய் மாரத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உயர் விளைச்சல் ரகங்களை அவற்றின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் மாறாத வகையில் உற்பத்தி செய்ய இது ஒரு சிறந்த முறையாகும்.
விதைக் கன்றுகளை நடுவதால் கன்றுகள் பலன் கொடுப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால், விதையில்லா பயிர் பெருக்கத்தின் மூலம் உற்பத்தி செய்த கன்றுகள் விரைவில் பலன் கொடுக்கும்.
விதையில்லா முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகள் ஒரே மாதிரியாக இருக்கும். அனைத்து கன்றுகளும் வளர்ச்சியிலும் பூப்பதிலும் காய்ப்பதிலும் ஒரே தருணத்தில் ஒத்த குணத்துடன் காணப்படும். இதனால் பயிர் பராமரிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு மேற்கொள்வது மிகவும் எளிதாகும்.
இவ்வாறு பல வழிகளில் நன்மை தரும். விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான தைலம், சவுக்கு, அயிலை, செஞ்சந்தனம், மலைவேம்பு, இலவம், தேக்கு, சந்தனம், சிசு, வேம்பு, சொர்க்க மரம், இலுப்பை மரம் மற்றும் மூங்கில் போன்ற இனங்கள் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.