
சுபா புல் என்று அழைக்கப்படும் சவுண்டல் மர இலைகள், எப்படி மண்ணின் தரத்தை மேம்படுத்துகின்றன. அதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சுபா புல் சிறப்பியல்புகள்: இந்த வகை மரம் மெக்ஸிகோ, கௌதிமாலா, ஹாண்டுராஸ் மற்றும் எல்சால்வடார் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. பிறகு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் தீவனம் மற்றும் பல்வேறு வகையான பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகின்றது. இம்மரம் 3 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மர வகையாகும். வெப்ப மண்டலங்களில் நிலவும் அதிகமான வெப்பநிலையைத் தாங்கி வளரக்கூடியது. ஆயிரம் முதல் 3000 மில்லி மீட்டர் வருட மழையளவு உள்ள பகுதிகளில் நன்கு வளரும். இருப்பினும் 8 முதல் 10 மாதங்கள் வரை வறட்சியான சீதோஷ்ண நிலையையும் தாங்கி வளரக்கூடியது.
இம்மரத்தின் இலைகள் உதிர்ந்து விரைவில் மக்கி மரத்தின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் உரமாக விளங்குகிறது. மேலும், தழைச்சத்தை கிரகித்து நிலத்தின் சத்து தன்மையை உயர்த்தக்கூடிய மரமாகும் இது. நல்ல வண்டல் மண், களிமண், செம்மண், கரிசல் மண் மற்றும் மணற்பாங்கான இடங்களிலும் இது நன்கு வளரும். இம்மரத்தின் பட்டைகள் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. நன்கு வளர்ந்த ஆழமான வேர் அமைப்பு கொண்ட இம்மரமானது பல்வகை பயன்பாட்டுப் பொருட்களைச் செய்யும் மரமாகக் கருதப்படுகின்றது. இதற்கு தமிழ் பெயர் சவுண்டல் என்பது.
மகசூல்: சவுண்டல் மரங்களை தோப்புகளாக நடும் பட்சத்தில் மூன்று வருடங்களில் இவை அறுவடைக்குத் தயாராகின்றன. மூன்று வருடங்களில் 20லிருந்து 30 சென்டி மீட்டர் சுற்றளவும் 13 மீட்டர் முதல் பதினைந்து மீட்டர் உயரமும் கொண்ட மரங்களை வெட்டுவதால் ஒரு ஹெக்டேருக்கு 150 முதல் 80 டன் வரை மகசூல் பெறலாம்.
பயன்கள்:
சவுண்டல் மரங்கள் அதிக செல்லுலோஸ் கொண்டுள்ளதால் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு முக்கியமான மூலப் பொருளாக இது பயன்படுகிறது.
இம்மரத்தின் இலைகள் கால்நடைகள் மிகவும் விரும்பி உட்கொள்ளும் உணவாக உள்ளன. அதிக அளவு தழைச்சத்துக்கள் மிக்க தீவனமாக இவை காணப்படுகின்றன.
சவுண்டல் மரமானது சிறந்த எரிசக்தி திறன் கொண்ட கட்டையாக பயன்படுகின்றது. இதன் எரிசக்தி திறனின் மதிப்பு 4600 கலோரி கிலோ கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சவுண்டல் மரக்கட்டைகள் வெளிக்கட்டை வெளிர் மஞ்சள் நிறத்திலும், உட்கட்டையானது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. மரச்சாமான்கள், தளவாடங்கள் போன்ற பொருட்கள் தயாரிப்பதற்கு இது பெரிதும் பயன்படுகின்றன.