
இறைவனின் அபூர்வமான கொடைகளில் ஒன்று பறவை மற்றும் விலங்கினங்கள் என்று கூறலாம். இவையனைத்தும் விதவிதமான நிறங்களில் தோற்றமளிப்பது இன்னும் புதுமை. குளிர்ப் பிரதேசங்களில் வாழும் விலங்குகள், பனி படர்ந்த சுற்றுப்புற சூழலோடு ஒத்துப்போக ஏதுவாக வெண்மை நிறம் கொண்டு காட்சியளிக்கின்றன. உலகின் எந்தப் பகுதிகளில் அவற்றைக் காண முடியும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஆர்க்டிக் நரி (Arctic Fox): பனி சூழ்ந்த மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த நரியின் உடல், அடர்ந்த வெண்ணிற உரோமங்களால் கோட் போல மூடப்பட்டுள்ளது. எந்தவித குளிரையும் தாங்கி, - 50°C வெப்ப நிலையிலும் உயிர் வாழக்கூடியது. ஐஸ்லாண்ட், க்ரீன்லாண்ட், கனடா மற்றும் ஸ்கான்டினேவியாவின் சில பகுதிகளிலும் இதைக் காணலாம்.
2. பெலுகா திமிங்கலம் (Beluga Whale): கடல்வாழ் விலங்குகளில் மிகப்பெரிய, முற்றிலும் வெண்ணிறம், உயர்ந்த குரல் வளம் கொண்ட விலங்கு இந்தத் திமிங்கலம். கடலில் ஐஸ் கட்டிகள் மிதக்கும் பரப்பின் அடியில் நீரோட்டத்துடன் மெதுவாக நீந்திக் கொண்டிருக்கும். அலாஸ்காவின் நீர்வரத்துப் பகுதி, கனடாவின் சர்ச்சில் நதி, ரஷ்யாவின் ஒயிட் ஸீ ஆகிய இடங்களில் பெலுகா திமிங்கலத்தைக் காண முடியும்.
3. எர்மைன் (Ermine): கவர்ச்சிகரமான தோற்றமுடைய மற்றொரு விலங்கு இது. குளிர் காலங்களில் தனது உருவத்தை முற்றிலும் வெண்மையாக மாற்றிக்கொள்ளும். அளவில் சிறியதாக இருந்தாலும், தனக்கு இரையாகக்கூடிய உயிரினங்களை அசுரத்தனமாக வேட்டையாடுவதில் நிகரற்றது. யூரோப், நார்த் அமெரிக்கா மற்றும் நார்த் ஆசியா போன்ற இடங்களில் இதைக் காண முடியும்.
4. பனி ஆந்தை (Snowy Owl): ஹாரி பாட்டர் நாவலில் ஹாரியின் வளர்ப்புப் பிராணியாக பலர் இதை அறிந்திருக்கக் கூடும். இந்த ஆந்தையை அலாஸ்கா, கனடா, யூரோப் மற்றும் அமெரிக்காவில் குளிர் காலங்களில் காணலாம்.
5. போலார் கரடி (Polar Bear): தரையில் வாழும் ஊன் உண்ணி மிருகங்களில் மிகப் பெரிய உருவமுடையது போலார் கரடி. அடர்த்தியான வெள்ளை நிற உரோமங்கள் போர்த்திய உடலமைப்பு கொண்டது. உணவுக்காக மற்ற உயிரினங்களை வேட்டையாடிப் பிடிப்பதில் இணையற்ற திறமை கொண்டது. கடலில் மிதக்கும் பனிக்கட்டிகளில் அமர்ந்தும், தண்ணீருக்குள் விரைவாக நீந்தியும் ஸீல் (Seal) வகை மீன்களை சுலபமாகப் பிடித்துவிடும். கனடா, ரஷ்யா, நார்வேயில் ஸ்வல்பார்டு போன்ற இடங்களில் போலார் கரடியைக் காண முடியும்.
6. மலை ஆடு (Mountain Goat): அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் பாறைகள் நிறைந்த மலைப் பகுதிகள் இந்த ஆடுகளின் வசிப்பிடம். இந்த ஆடுகளின் கால்கள், ஆழமான, பனி மூடிய செங்குத்துப் பாறைகள் மீது நடந்து செல்வதற்குத் தகுந்தவாறு அமைக்கப் பட்டுள்ளன. இந்த வகை ஆடுகளை பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்ட்டா மற்றும் மோன்டானா (Montana)வின் கிளேஸியர் நேஷனல் பார்க்கிலும் பார்க்க முடியும்.
7. லியூசிஸ்ட்டிக் வெள்ளை மயில் (Leucistic White Peacock): பொதுவாக, ஒரு மயிலைப் பார்ப்பதென்பதே அழகு. அதிலும் ஒரு லியூசிஸ்ட்டிக் வெள்ளை மயிலைப் பார்ப்பது மிகவும் சிறப்பு. சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமி இந்த வெள்ளை நிற மயிலின் உடலில் சுரப்பதில்லை. இதன் வெண்மையான நிறமும் கம்பீரமான நடையும் இதை ஒரு புனிதமான பறவையாகத் தோற்றமளிக்க உதவுகின்றன. இந்தியாவிலுள்ள சில முக்கியமான கோயில்கள் மற்றும் உயிரியல் பூங்காக்களில் இந்த வெள்ளை நிற மயிலைக் காணலாம்.
8. வெள்ளை பெங்கால் புலி (White Bengal Tiger): இந்த வகைப் புலியை இந்தியாவில் ஒருசில குறிப்பிட்ட மிருகக்காட்சிசாலைகளில் காணலாம். இதன் வெள்ளை நிற உடலில் ஆங்காங்கே காணப்படும் கிரே கலர் கோடுகள் இதற்கு ஒரு பிரம்மிப்பான தோற்றத்தைத் தருகின்றன. இதன் குட்டிகள் மிக ஆழகாக இருக்கும். இந்த வகை பெங்கால் புலிகளைக் காடுகளில் காண்பது முடியாததென்றாகி விட்டது. இருந்தபோதும் இந்தியாவில், நந்தன்கானன் உயிரியல் பூங்கா, டெல்லி உயிரியல் பூங்கா மற்றும் லக்னோ உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் இதைக் காண முடியும்.