
இந்தியாவில் மஹாராஷ்ர மாநிலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில், வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள், கொங்கன் கடற்கரை போன்ற அழகிய இடங்களை பார்த்து ரசித்தவர்கள், கட்டாயம் செல்ல வேண்டிய இடம் தான் லோனார் ஏரியாகும். விண்கல் விழுந்து உருவான இந்த அதிசய ஏரியைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பூமியில் உள்ள எரிமலை பாறைகளால் ஆன பகுதியில் விண்கல் விழுந்து உருவான ஏரியாகும். அதனால் இந்த ஏரி சிறப்பு வாய்ந்ததாகவும், அதிசயம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல் எரிமலைப் பாறைகளை தாக்கி 1.8 கிலோ மீட்டர் அகலமும், 150 மீட்டர் ஆழமும் கொண்ட குழியை உருவாக்கியது. பிறகு மழைநீர் அந்த குழியில் தேங்கி இன்று நாம் காணக்கூடிய லோனார் ஏரியாக உருவானது.
சில ஆய்வுகளில் லோனார் ஏரி 5.76 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று சொல்லப்படுகிறது. எரிக்கல்லின் வேதியல் அமைப்பாலும், அது தாக்கியதால் ஏற்பட்ட மாற்றத்தாலும் இந்த ஏரி அதிக உப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட ஏரியாக இருக்கிறது. இந்த அசாதாரண காரணத்தால் மிகவும் மோசமான சூழ்நிலையில் கூட தாக்குப்பிடித்து உயிர்வாழக்கூடிய நுண்ணுயிர்கள் இங்கு காணப்படுகின்றன.
காரம் அதிகம் உள்ள நீரில் வளரக்கூடிய பாசி, பேக்டீரியா மற்றும் இதர உயிரினங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த ஏரி மண்ணில் காணப்படும் சில கனிமங்கள் அப்பலோ விண்வெளி பயணத்தின் போது கொண்டுவரப்பட்ட கனிமங்களுடன் ஒத்துப்போவதாக சொல்லப்படுகிறது. நாசா மற்றும் ISRO ஆகிய அமைப்புகள் இந்த ஏரியை நிலவின் புவியியல் மாதிரியாக வைத்து விண்வெளி ஆய்வை மேற்க்கொள்கிறது.
2020 ஆம் ஆண்டு அதிசயமாக லோனார் ஏரியின் நீரின் நிறம் இளம்சிவப்பாக மாறியது. இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பலருக்கு பயத்தை ஏற்படுத்தியது. பிறகு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால், உப்புத்தன்மை நிறைந்த நீரில் சிலவகை பாசிக்கள் அதிகமான காரணத்தால் இவ்வாறு மாறியதாக சொல்லப்படுகிறது.
இந்த லோனார் ஏரியில் 160க்கும் மேற்பட்ட பறவைகள்,12 பாலூட்டி உயிரினம், 46 வகை ஊர்வன இனங்கள் வாழ்கின்றன. இந்த ஏரியின் கரையில் 'தைத்யசூதனார் கோவில்' அமைந்துள்ளது. இக்கோவிலில் இருக்கும் விஷ்ணு பகவான் அரகன் லோனாசுரனை அழித்ததாக புராணக்கதை சொல்லப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு லோனார் ஏரி ராம்சர் சதுப்புநிலமாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த ஏரி நிறைய சவலான சுற்றுப்புற சூழ்நிலை பிரச்னையை எதிர்க்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு, கழிவுநீர் பிரச்னை ஏரியின் இயற்கையான அமைப்பை பாதிக்கும் நிலையில் உள்ளது. இதை பாதுகாக்க வேண்டியது மக்களாகிய நம்முடைய முக்கிய பொறுப்பாகும்.