
சட்ட விரோத வனவிலங்கு வர்த்தகத்திற்கு அடர்ந்த காடுகளில் உள்ள விலங்குகள் பற்றிப் பரப்பப்படும் கட்டுக் கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள் காரணமாக இருக்கின்றன. கள்ள சந்தையில் கோடிக்கணக்கில் விலைபோகும் அரிய வகை உயிரினங்கள் காடுகளில் உயிர் வாழ்கின்றன. அந்த வகையில் கள்ள சந்தையில் 25 கோடி வரை விலைபோகும் பாம்பு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
‘ரெட் சாண்ட் போவா’ என்ற விஷமற்ற பாம்பு பல மாநிலங்களிலும் பீகாரில் உள்ள வால்மீகி புலிகள் சரணாலயத்திலும் உள்ளன. கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களுக்குப் பெயர் போனதாக அறியப்படும் இரண்டு தலை பாம்பு என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்தப் பாம்பை சட்டவிரோதமாக கடத்துவது அதிகரித்துள்ளது.
ரெட் சாண்ட் போவா இரண்டு தலை பாம்பு என்று பிரபலமாக அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்தப் பாம்புக்கு இரண்டு தலைகள் அல்லது வாய்கள் இருக்காது. ஆனால், பாம்பினுடைய வால் இயற்கையாகவே அதன் தலையை ஒத்து இருப்பதால் வேட்டையாடுபவர்களை குழப்பி இரண்டு தலை பாம்பு என்று அழைக்க வைக்கிறது. ஆனால், இந்த அமைப்பு பின்னால் இருந்து வரும் தாக்குதல்களை தடுக்க உதவும் ஒரு பாதுகாப்பு முறையாகும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
'டபுள் என்ஜின் பாம்புகள்' என்று அறிவியல் சமூகத்தில் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பாம்புகள் முற்றிலும் பாதிப்பில்லாதவை என்று இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கத்தின் திட்ட மேலாளரும் வனவிலங்கு நிபுணருமான அபிஷேக்கின் கூற்றாக உள்ளது. அரிதாகவே மனிதத் தொடர்புக்கு வரும் இந்த பாம்புகள் அடக்கமானவையாக இருப்பதால் சட்டவிரோத சந்தைகளில் அனைவரும் விரும்பும் ஒன்றாக மாறி இருக்கிறது.
கள்ளச் சந்தையில் ரெட் சாண்ட் போவாக்களுக்கான மதிப்பு 2 கோடி ரூபாய் முதல் 25 கோடி ரூபாய் வரை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்த பாம்புக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருக்கிறது என்ற ஆதாரமற்ற நம்பிக்கைதான்.
மகத்தான செல்வத்தையும் வெற்றியையும் ரெட் சாண்ட் போவா பாம்புகள் தருவதோடு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்றும் வலியுறுத்துகின்றனர். ஆனால், இந்தப் பாம்புக்கு உண்மையான வணிக அல்லது மருத்துவ மதிப்பு எதுவும் இல்லை என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். பல பகுதிகளில் தொழில் வளர இந்த பாம்புகள் பலியிடப்படும் அளவிற்கு மூடநம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அவை அமானுஷ்ய நடைமுறைகள், சூனியம் மற்றும் தாந்த்ரீக சடங்குகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் மருத்துவத் தொழில்களில் அவற்றின் பயன்பாடு குறித்த வதந்திகள் காரணமாக இவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூற்றுகள் எல்லாம் ஆதாரமற்றவை என்பதோடு, எலிகள், தவளைகள் மற்றும் சிறிய பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு இந்த ரெட் சாண்ட் போவோ பாம்புகளுக்கு உள்ளது என்று அபிஷேக் கூறுகிறார்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரெட் சாண்ட் ரோபோக்களை வேட்டையாடுவது, பிடிப்பது கடுமையான குற்றமாகும் .சட்டவிரோத வர்த்தகத்தை கடுமையாக குறைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகளை அதிகாரிகள் விதித்து வருகின்றனர். என்னதான் சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் பேராசை, கட்டுக்கதைகள் காரணமாக குருட்டு நம்பிக்கையுடன் இதுபோன்ற கள்ளச் சந்தை வர்த்தகம் தொடரத்தான் செய்கிறது.