
இயற்கை சமநிலையில் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு பொறுப்பைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சுற்றுச்சுழல் அமைப்பில் பட்டாம்பூச்சிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் பட்டாம்பூச்சிகள் அமெரிக்காவில் அதன் மொத்த எண்ணிக்கையில் 22% சரிவைக் கண்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 554 பட்டாம்பூச்சி இனங்களில், மூன்றில் இரண்டு பங்கு அழிந்துபோய் உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு 12.6 மில்லியன் பட்டாம்பூச்சிகளை பகுப்பாய்வு செய்தது, 2000 இலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு இடையில் 35 கண்காணிப்பு திட்டங்களில், 2478 தனித்துவமான இடங்களில் இருந்து 76,000 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்திருந்தனர்.
பட்டாம்பூச்சிகள் சுற்றுச்சுழல் இயற்கை சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரும்பங்கு ஆற்றுகின்றன. மகரந்த சேர்க்கையினால் தாவரங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்கின்றன.
மகரந்த சேர்க்கையின் அடுத்த சூழல் காய் மற்றும் கனிகளை உருவாக்குதல், இதனால் சிறு உயிர்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் வரை உணவுச்சங்கிலியில் பயன் பெறுகின்றனர். ஏராளமான பட்டாம்பூச்சி இனங்கள் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது. பட்டாம்பூச்சியின் 107 இனங்கள் 50% அதிகமான சரிவைச் சந்தித்து வருகின்றன.இதில் 22 இனங்கள் 90% அதிகமான எண்ணிக்கையை இழந்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள 650 பட்டாம்பூச்சி இனங்களில், 554 இனங்கள் மட்டுமே ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும் 342 இனங்கள் மட்டுமே பகுப்பாய்விற்கு போதுமான தரவைக் கொண்டிருந்தன. அனைத்து பட்டாம்பூச்சி குடும்பங்களிலும் சரிவு கண்டறியப்பட்டது. ஒவ்வொரு பட்டாம்பூச்சி குடும்பத்திலும் 60 முதல் 75% இனங்கள் குறைந்து வருகின்றன என்று ஆய்வு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நியூசிலாந்தில் கூட மோனார்க் பட்டாம்பூச்சிகள் பெருமளவு குறைந்து வருகின்றன.
பகுப்பாய்வு செய்யப்பட்ட பட்டாம்பூச்சிகளில் கூட முழுமையாக அவற்றின் வாழியல் சூழல்களை கண்டறிய முடியவில்லை. இதனால் மதிப்பிடப்பட்டதை விட அதிகமான பட்டாம்பூச்சிகளை இழந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வரையறுக்கப்பட்ட தரவுகளைக் கொண்ட இனங்கள் ஏற்கனவே அரிதானவை.சிறிய எண்ணிக்கை கொண்ட பட்டாம்பூச்சிகள் சிறப்பு வாழ்விடங்களில் வாழ்கின்றன.
காலநிலை மாற்றத்தால், வட அமெரிக்காவின் தெற்கு எல்லைகள் மிகவும் வெப்பமடைந்து வருகிறது. இதனால் இங்கு மிகுதியாக இருந்த பட்டாம்பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. அதே நேரத்தில் வடக்கு பகுதிகள் பட்டாம்பூச்சிகள் வாழிட சூழலை எளிதாக்குகிறது. வாழ்விட இழப்பு அதிகரித்துவரும் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்ததில் கிழக்கு,மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் வாழும் எண்ணிக்கையை கண்காணித்து வந்தனர். இதில் வடக்குப் பகுதியில் பட்டாம்பூச்சிகள் மிகுதியாக வாழ்ந்து வருகின்றன. அவற்றின் எண்ணிக்கை அந்தப் பகுதியில் குறைவில்லாமல் இருந்தது.
பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைய பூச்சிக் கொல்லிகள் அதிக பங்கு வகிக்கின்றன என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. சமீபத்திய ஆய்வுகள்படி கலிபோர்னியா மற்றும் மத்திய மேற்கு அமெரிக்காவின் பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவிற்கு வழி வகுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பூச்சிக் கொல்லிகளை கட்டுப்படுத்த பல சட்டங்கள் உள்ளன. அதனால் அப்பகுதியில் பறவைகளும், பூச்சி இனங்களும் அழிவில் இருந்து மீண்டு வருகின்றன. இது போன்ற கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசும் விதித்து அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
காலநிலை மாற்றங்களை உடனடியாக மனிதர்களால் செயல்பாட்டிற்கு கொண்டு வரமுடியாது என்றாலும் பூச்சிக் கொல்லிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை உயர்த்தலாம்.