
இந்தியாவில் பல வகை மைனாக்கள் உள்ளன. புத்திசாலியாகக் கருதப்படும் இவை வெகு விரைவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. இவை மனிதர்களுடன் பழகுவதை விரும்பும். பண்டைய கிரேக்க மொழியில் மைனா ஒரு பிரபுத்துவ செல்லப் பிராணியாகக் கருதப்பட்டது. இந்திய மைனாக்கள் இனப்பெருக்கக் காலத்தைத் தவிர, பெரும்பாலான நேரங்களில் அமைதியானவை. கூட்டமாக வாழும் தன்மை கொண்ட மைனா பறவையின் இரு பாலினங்களும் ஒரே மாதிரியானவை. ஆண், பெண் என்று வேறுபடுத்திப் பார்க்க தெளிவான வழி இல்லை. இளம் மைனாக்கள் பிறந்த 4 வாரங்களுக்குள் தங்கள் கூட்டை விட்டு வெளியேறுகின்றன. மைனாக்கள் 100 வார்த்தைகள் வரை கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை. மைனாக்களின் வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கொலார்ட் மைனா (Colard Myna): இது மிகவும் அரிதாகக் காணப்படும் வகையாகும். அருணாசலப்பிரதேச பகுதிகளில் இவற்றைக் காணலாம். கழுத்தில் வெண்மையாகவும் உடல் நல்ல கருப்பு நிறத்துடனும் காணப்படும். இது நகரங்களை விட, காட்டுப்பகுதிகளையே விரும்பும். இந்த வகை இனம் அழிந்து வருகிறது வருத்தத்திற்குரியது.
காமன் மைனா (Common myna): இவற்றை சாதாரணமாக தெருக்கள், ரயில் நிலையங்கள் மற்றும் வயல்வெளிகளில் காணலாம். ப்ரௌன் நிற உடலும், கண்கள் மஞ்சளாகவும் காணப்படும். கூட்டமாக இவை இருக்கும். இவை எளிதாக சுற்றுச்சூழலுக்கு பழக்கப்பட்டுவிடும்.
பாங்க் மைனா (Bank myna): இந்த வகை மைனா வடக்கு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் காணப்படும். நதிக்கரை மற்றும் கிராமப்புறங்களில் இவற்றை சாதாரணமாகக் காணலாம். இவற்றின் கண்ணுக்கு அருகே சிவப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த திட்டுக்கள் இருக்கும். இவை கூட்டமாக வாழக்கூடியது.
கோல்டன் க்ரஸ்டட் மைனா (Golden crusted myna): இந்த வகை மைனாக்களை வடகிழக்கு இந்தியா, அருணாசலப்பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் காணலாம். கருப்பு நிற இறகுகளுடன் தலையில் மஞ்சள் கொண்டை போன்ற அமைப்புடன் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். இவற்றை அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பார்க்கலாம். அழிந்து வரும் இனமாக இது கருதப்படுகிறது.
க்ரேட் மைனா (Great myna): இது மற்ற மைனாக்களை விட பெரியதாக இருக்கும். ஹிமாலயா பகுதியில் இவற்றைக் காணலாம். கருப்பு உடலும், வாலின் அடிப்பகுதி வெண்மையாகவும் மஞ்சள் வால் மற்றும் கால்களுடன் இவற்றைக் காணலாம். இவை நன்கு சத்தம் போடக்கூடியது. வயல்வெளி மற்றும் காடுகளில் இவற்றைக் காணலாம்.
சதர்சன் ஹில் மைனா (Southern hill myna): மிகவும் அரிதாகக் காணப்படும் இந்த அழகு மைனா மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் குரல் இனிமையாக இருக்கும். இது மனிதக் குரலைக் காப்பி அடிக்கும். பளபளவென்று கருப்பு உடல், ஆரஞ்சு நிற அலகுடன் இவற்றை சுலபமாக அடையாளம் காணலாம். அழிந்து வரும் இனமாக இது உள்ளது.
காமன் ஹில் மைனா (Common hill myna): இவற்றை ஹிமாலயப் பகுதி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணலாம். இது புல்லாங்குழல் ஊதுவது போன்ற குரலைப் பெற்றுள்ளது. காட்டுப்பகுதி மற்று நதிக்கரை பக்கம் பார்க்கலாம். இதன் குரலுக்காக இதை பலர் வீட்டில் வளர்க்க விரும்புவர்.
ஜங்கிள் மைனா (Jungle myna): ஹிமாலயப் பகுதிகளில் இவற்றைப் பார்க்கலாம். நகரங்களில் இவற்றைக் காண முடியாது. இதன் தலையின் முன்பகுதியில் அடர்த்தியாக இறகுகள் இருக்கும். இது பழங்கள், பூச்சிகளை உண்ணும். மற்ற மைனாக்களைப் போல் சகஜமாக இவற்றைக் காண முடியாது.