இமயமலைத் தொடங்கி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் வரை தட்பவெட்ப நிலைக்கேற்ப பல வகையான காடுகள் இந்தியாவில் அமைந்துள்ளன. அவை என்னென்ன காடுகள்? அங்கு மழைப் பொழிவு எப்படி? அது எவ்வாறு பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகின்றன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பசுமை இலை காடுகள்: இவை அசாம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், இமயமலை அடிவாரம் மற்றும் அந்தமான் தீவுகள் அடங்கிய இடங்களில் உள்ளன. இங்கு ஆண்டின் சராசரி மழையின் அளவு 90 அங்குலத்திற்கு மேலாக இருப்பதால் மிக உயரமான மரங்களை உடைய அடர்த்தியான காடுகள் இப்பகுதியில் உள்ளன. ரோஸ்வுட், பிசப்வுட், பேம்பூஸ், ஹோபியா, டைபோஸ், பைராஸ், மூங்கில்கள் போன்ற மரங்களும் பெரணி போன்ற புதர் செடிகளும் காணப்படுகின்றன.
சதுப்பு நிலக்காடுகள்: இக்காடுகள் மேற்கு கடற்கரை முழுவதிலும், வங்காளத்திலும், மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, கங்கை போன்ற ஆறுகளின் டெல்டா பகுதிகளிலும் காணப்படுகிறது. கங்கை டெல்டாவின் மாங்குரோவ் பகுதிகள் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தென்னிந்தியாவில் பிச்சாவரம் பகுதியில் காணப்படுகின்றன. இங்கு சதுப்பு நில தாவரங்களான அபிசினியா, நீபா, சோமேரேசியோ போன்றவை வளர்கின்றன.
பூக நண்டு, புழுக்கள், பாம்புகள், ஓணான், நீண்டவால் குரங்குகள், பச்சைப் புறாக்கள், கடல் கழுகு, மீன்கொத்தி ஆகிய விலங்கினங்களும் பறவைகளும் இங்கு வாழ்கின்றன. வலசை போகும் பறவைகளும் சில வகை கொசுக்கள், பூச்சி இனங்கள், நீர் பூச்சிகள், வண்டுகள் ஆகியவையும் இக்காடுகளில் காணப்படுகின்றன.
இலையுதிர் காடுகள்: ஆண்டுதோறும் பெய்யும் சராசரி மழை அளவு 40 முதல் 80 அங்குலம் வரை உள்ள காடுகள் இலையுதிர் காடுகள் என்றும் 30ல் இருந்து 40 மற்றும் 20 அங்குலங்களுக்கு கீழே மழை அளவு உள்ளவை வறண்ட இலையுதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இமயமலைத் தொடரின் கீழ்ப்பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலை, பீகார், ஒரிசா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இங்கு மறிமான் கூட்டங்கள், காட்டுப் பூனை, நரி, கீரிகள், ஓநாய், சீட்டா, அணில், முயல், எலி, கரடி மற்றும் காட்டு நாய்கள் ஆகிய விலங்குகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் லெமூர் குரங்குகள், நீலகிரி அணில், மலபார் புணுகுப் பூனை ஆகியவை உள்ளன.
முட் காடுகள்: இக்காடுகள் திருநெல்வேலியில் இருந்து நெல்லூர் வரையிலும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. பால் போன்ற சாறு உள்ள செடிகள் புதர்களாக முளைத்திருக்கும். தரை பல வகை புற்களாலும், கொடிகளாலும் மூடப்பட்டிருக்கும். ஆங்காங்கே மரங்களும், பூண்டு தாவரங்களும் காணப்படுகின்றன. இங்கு மறிமான் கூட்டங்கள், காட்டுப் பூனை, நரி, கீரிகள், ஓனாய், அணில், முயல், சுண்டெலி ஆகிய விலங்குகளும் பலவித பூச்சிகள் மற்றும் வண்டினங்களும் வாழ்கின்றன.
பாலைவனக் காடுகள்: மழைக்குறைவாலும், பெருங்காற்றாலும் பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் உருவானவையே இந்திய பாலைவனப் பகுதிகள். சிந்து, ராஜஸ்தான் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. காக்டி, யுபோர்பியாஸ், பாபுல் முதலிய தாவரங்களும் சிங்கம், சீட்டா, பாந்தர், ஒட்டகம், பல்லிகள், பாம்புகள் ஆகிய விலங்குகளும் இக்காடுகளில் வாழ்கின்றன.
ஊசி இலை காடுகள்: இவை இமயமலை பகுதியின் உயரத்திற்கு ஏற்றாற்போல் பலவித தட்பவெட்ப நிலைகளைக் கொண்டுள்ளன. ஐயாயிரம் மீட்டர் உயரத்திற்கு கீழ் உலர் வகை தாவரங்களும், ஐயாயிரம் மீட்டர் முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை அல்பைன் போன்ற ஊசி இலை மரங்களும் உள்ளன. இங்கு தாவரங்களின் இனப்பெருக்கம் ஓரிரு மாதங்களில் நடைபெறுகின்றன. இங்கு மார்மெட் எலி, யாக் எருமை, திபேத் ஆடுகள், நரி ஆகிய விலங்குகளும் ஒருவித ஆந்தை இனப் பறவைகளும் வாழ்கின்றன.
இப்படி இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலையில் வளரும்/வாழும் உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு 33 சதவிகிதம் பூக்கும் தாவரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 53 சதவிகிதம் நன்னீர் மீன்கள், 60 சதவிகிதம் இருவாழ்விகளும், 33 சதவிகிதம் ஊர்வனவும் 10 சதவிகிதம் பாலூட்டிகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆதலால் இவை அனைத்தும் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.