மன அழுத்தம் இல்லாமல் நாம் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அப்படி வாழ்வது என்பது ஒரு சவாலான விஷயம்தான். மன அழுத்தம் நம் உடல் முழுவதையுமே பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் ‘மன அழுத்தம்தானே’ என்று அதை சாதாரணமாக நினைப்போம். ஆனால், நம் உடலில் மிக முக்கியமான பாகங்களை இந்த மன அழுத்தம் கடுமையாக பாதிக்கிறது. இதனால் நாம் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு ஆளாகிறோம்.
வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லாமல் வாழக் கற்றுக்கொண்டாலே அதுவே ஆரோக்கியமான வாழ்வு. சுருக்கமாக சொல்லப்போனால், ‘டேக் இட் ஈசி பாலிசி’ என்று ரிலாக்ஸாக இருங்கள். மன அழுத்தம் ஏற்படுவதால் நம் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடலில் அழற்சியை உண்டாக்கும்: நீண்டகால மன அழுத்தம் ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் அட்ரீனல் சுரப்பிகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் தொடர்ச்சியான மாற்றங்களைத் தருகிறது. இதனால்தான் நம் மனதில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் உண்டாகிறது. நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இரண்டும் உடலில் அழற்சியை ஏற்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல விஞ்ஞானிகள் நாள்பட்ட அழற்சி மனச்சோர்வால்தான் ஏற்படுகிறதா என்பதை மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
உடல் எடையில் மாற்றத்தை உண்டாக்கும்: மனச்சோர்வின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று பசியில் மாற்றங்கள் ஏற்படும். மனச்சோர்வு உள்ளவர்கள் மிகக் குறைவாக சாப்பிடலாம் அல்லது அதிகமாக சாப்பிடலாம். இதன் காரணமாக, அவர்கள் எடையில் திடீர் ஏற்ற, இறக்கங்களை சந்திக்க நேரிடலாம். இது இதயத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும், கருவுறுதலை பாதிக்கும் மற்றும் பிற உடல்நல நோய்களுக்கு ஏராளமான பாதிப்புகளைக் கொடுக்கும்.
இதயத்திற்கு மோசமானது: நீங்கள் தொடர்ந்து மனச்சோர்வில் இருக்கும்போது உடல் கார்டிசோல் என்ற ஹார்மோனை உண்டாக்குகிறது. இது இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கிறது. இவையனைத்தும் பாதிக்கப்படும்போது இருதய பாதிப்புக்கான ஆபத்துக்கள் அதிகம்.
பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது: மனச்சோர்வு உடையவர்களின் பாலியல் வாழ்க்கை ஆர்வம் இன்றி காணப்படும். ஆனால், எப்படி மனச்சோர்வு ஆண்மையை பாதிக்கிறது என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை.
ஜீரண மண்டலம்: உங்கள் வயிறு மற்றும் குடலின் செயல்பாட்டில் மூளைக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. பதற்றமாக இருக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணமாக இதுவே இருக்கலாம்.