பூமியின் நிலப்பரப்பில் 27 சதவிகிதம் மலைகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி உலக மக்கள் தொகையில் 15 சதவிகிதம் மலைகளில் வாழ்கின்றனர். உலகின் நிலப்பரப்பில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் நான்கில் ஒரு பங்கு மலைகளில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள மலைகள் உலக மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு நன்னீரை வழங்குகின்றன. உலகின் மிக முக்கியமான உணவுப் பயிர்களில் ஆறு வகையானவை மலைகளில் விளைகின்றன.
சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் சமநிலையைப் பராமரிப்பதில் மலைகளின் பங்கு: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், காலநிலை, பல்லுயிர்ப் பெருக்கம், நீர் வளங்கள் மற்றும் மனித செயல்பாடுகளில் மலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
காலநிலை ஒழுங்குமுறை: மலைகள் உள்ளூர் மற்றும் பிராந்தியக் காலநிலை முறைகளை கணிசமாக பாதிக்கின்றன. மலைத்தொடரின் ஒரு பகுதியில் மழை பெய்தால் எதிர்ப்புறம் வறண்டு இருக்கும். இது பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்மை செய்கிறது. எடுத்துக்காட்டாக சியரா நெவாடா மலைகளின் மேற்கு சரிவுகளில் ஈரமான சூழலை உருவாக்கும் அதேநேரத்தில், கிழக்கு அடிவாரத்தில் வறண்ட நிலைமைகள் இருக்கின்றன. இது இருபுறமும் சரிசமமான தட்பவெப்பம் நிலவ உதவுகிறது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகள்: நன்னீர் வளங்களுக்கான முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக மலைகள் விளங்குகின்றன. மலைப்பகுதிகளில் சேமிக்கப்பட்டுள்ள பனி மற்றும் பனிப்பாறைகள் படிப்படியாக உருகி ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடி நீருக்கு நிலையான நீர் வளங்களை அளிக்கின்றன. இது வனவிலங்குகள் மற்றும் மனித சமூகங்களை ஆதரிக்கின்றன. இமயமலையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்திரா போன்ற ஆசியாவின் முக்கிய நதிகள் மூலம் இவை நீர் தருகின்றன.
பல்லுயிர் வளம்: வேறு எங்கும் இல்லாத பல தனித்துவமான உயிரினங்கள் மலைகளில் உள்ளன. பல்வேறு வகையான பல்லுயிர் வளங்களை மலைகள் கொண்டிருக்கின்றன. பல்வேறு உயரங்கள், தட்பவெப்ப நிலைகள் மற்றும் வாழ்விடங்கள் பல்வேறு உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடங்களாகவும் வாழ்வாதார வளத்தையும் தருகின்றன. ஆண்டஸ் மலைகள் உயரமான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்ற இடமாக இருக்கின்றன. இந்த பல்லுயிர், சுற்றுச்சூழல் சமநிலைக்கு மட்டுமல்ல, விவசாய மற்றும் மருத்துவத்திற்கான மரபணு வளங்களுக்கும் அவசியமாகின்றது.
மண் பாதுகாப்பு மற்றும் வளம்: மலைச்சரிவுகள் பாறைகளின் வானிலை மற்றும் கரிமப் பொருட்களின் குவிப்பு மூலம் மண் உருவாவதற்கு பங்களிக்கின்றன. இந்த சரிவுகளில் உள்ள காடுகள் மற்றும் தாவரங்கள் மண்ணை நிலைப்படுத்தி அரிப்பைக் குறைத்து மண் வளத்தைப் பராமரிக்கின்றன. இது ஆரோக்கியமான விவசாயத்தை ஆதரிக்கிறது மற்றும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வண்டல் குறைகிறது. இது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்மை செய்வதாக அமையும்.
மழைக்காடுகள்: மழைக்காடுகள் கார்பன் மூழ்கிகளாக செயல்படுகின்றன. வளிமண்டலத்திலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி உயிரியலில் சேமிக்கின்றன. இந்த செயல்முறை பசுமை இல்ல வாயுக்களின் செறிவை குறைப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை தணிக்க உதவுகிறது. மலை சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பது இந்த செயல்பாட்டை மேம்படுத்தி காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவுகிறது.
கலாசார முக்கியத்துவம்: மலைகள் பல சமூகங்களுக்கு கலாசார முக்கியத்துவத்தை அளிக்கின்றன. பெரும்பாலும் உள்ளூர் மரபுகள், ஆன்மிகம் மற்றும் வாழ்வாதாரங்களில் இடம்பெறுகின்றன. பொழுதுபோக்குப் பிரதேசங்களாக விளங்குகின்றன. மலைப்பகுதிகளில் நிலையான சுற்றுலா வருவாய் ஈட்ட முடியும்.
இயற்கைத் தடைகள்: மலைகள் மனித நடவடிக்கைகளுக்கு இயற்கையான தடைகளாக செயல்படுகின்றன. சில பகுதிகளில் அதிகப்படியான சுரண்டல் மற்றும் வாழ்விட அழிவிலிருந்து பாதுகாக்கின்றன. இவை ஆக்கிரமிப்பு இனங்களின் பரவலைக் கட்டுப்படுத்தி தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்க உதவுகின்றன. துண்டு துண்டான நிலப்பரப்புகளில் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு இந்தப் பங்கு முக்கியமானது.
பேரிடர் தணிப்பு: ஆரோக்கியமான மலை, சுற்றுச்சூழல் அமைப்பு, இயற்கைப் பேரழிவுகளை குறைக்க உதவும். காடுகள் நிறைந்த மலைகள் மண் சரிவுகளை நிலை நிறுத்தலாம். நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்கலாம். அதேசமயம் ஈர நிலங்கள் மற்றும் நதி அமைப்புகள் குறிப்பாக கணிசமான மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் வெள்ளத்தைத் தடுக்கலாம்.