

தற்காலத்தில் நம்மைச் சுற்றி ஒரே பாலிதீன் மயமாக இருக்கிறது. எங்கும் பாலிதீன் எதிலும் பாலிதீன் என்றாகி விட்டது. வெறும் கையை வீசிக்கொண்டு கடைகளுக்குச் சென்று பத்து பதினைந்து பாலிதீன் பைகளோடு மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பும் நிலை சர்வ சாதாரணமாகிவிட்டது. பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இவை ஒருபோதும் சுலபத்தில் மக்காத ஒரு வேதிப்பொருள். இதை நாம் விளையாட்டாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எழுபது எண்பதுகளில் ஓட்டல்களில், பட்சணக் கடைகளில் உணவுப் பொருட்களை மடித்துத் தர மந்தாரை இலைகளே பயன்படுத்தப்பட்டன. இரண்டு பெரிய நீள்வட்ட அளவில் இருக்கும் இந்த இலையின் பயன்பாடு அக்காலத்தில் மிகுதியாக இருந்தது. இது எளிதில் மக்கக்கூடியது. இதை எவ்வளவு பயன்படுத்தினாலும் கேடும் இல்லை. கவலையும் இல்லை. சுகாதாரமும் கூட.
உண்மையில் சொல்லப்போனால் இந்த மந்தாரை இலை பலருக்கும் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் மந்தாரை இலையில் சாப்பிடும் வழக்கம் இருந்தது. கடைகளில் கிலோ கணக்கில் மந்தாரை இலைகளை வாங்கி வந்து பூந்துடைப்பக் குச்சியை இரண்டாகப் பிளந்து வைத்துக் கொண்டு மந்தாரை இலைகளை லாவகமாக இணைத்து வட்ட வடிவில் தைப்பார்கள். நான்கு அல்லது ஐந்து இலைகளைக் கொண்டு தைத்த பின்னர் பார்ப்பதற்கு ஒரு பெரிய வட்ட வடிவ தட்டு போல அது காணப்படும். மந்தாரை இலையை தைத்து நூறு என்ற எண்ணிக்கையில் மளிகைக் கடைகளில் கொடுத்தால் அதை காசு கொடுத்து வாங்கி அவர்கள் சிறிது லாபம் வைத்து கேட்பவர்களுக்கு விற்பார்கள். பெரும்பாலான வீடுகளில் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு மந்தாரை இலையைப் போட்டுத்தான் உணவினைப் பரிமாறுவார்கள்.
அடுத்தபடியாக, வாழை இலை உணவகங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. வீடுகளில் சாப்பிட வாழை இலை பயன்படுத்தப்பட்டது. இதுவும் இயற்கையாகக் கிடைக்கும் இலை என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் ஏற்படுத்தவில்லை. உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு இயற்கையான விஷயமாகும். இன்றும் கூட ஓட்டல்கள் மற்றும் வீட்டு விசேஷங்களில் வாழை இலை சாப்பாடு நடைமுறையில் உள்ளது. தற்காலத்தில் வாழை இலை செயற்கையாக பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கடைகளில் செய்தித்தாள்களை விலைக்கு வாங்கி அதைக் கிழித்து பொட்டலமாக மளிகைப் பொருட்களைக் கட்டித் தருவார்கள். செய்தித்தாளை ஒரு கூம்பு வடிவத்தில் சுருட்டி அதில் நாம் கேட்கும் பொருளைப் போட்டு சணல் நூலால் கட்டித்தருவார்கள். சணல் நூலும் மக்கும் தன்மை கொண்டது. ஆனால், தற்காலத்தில் பாலிதீன் கவர்களில் பொருட்களைப் போட்டு ஒட்டி வைத்து விற்பனை செய்கிறார்கள். கயிறுக்கு பதிலாக ரப்பர்பேண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ரப்பர்பேண்டும் ஆபத்தானது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பது.
முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்றால் கையில் ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு செல்லுவார்கள். பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் முதலானவை அவ்வளவாக உபயோகத்தில் அப்போது இல்லை. அக்காலத்தில் பால் கூட கண்ணாடி பாட்டில்களில் அடைத்தே விநியோகம் செய்யப்பட்டன. எண்பதுகளுக்குப் பிறகே பாலிதீன் பாக்கெட்டுகளில் பால் விற்பனை தொடங்கியது.
அக்காலத்தில் எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் பாத்திரங்களைக் கொண்டு செல்லுவார்கள். இந்தப் பாத்திரத்தை தூக்கு பாத்திரம் என்று கூறுவர். செக்குகளில் எண்ணெயை ஆட்டி கடைகளில் டின்களில் ஊற்றி வைத்து அரை லிட்டர் ஒரு லிட்டர் என அளந்து விற்பனை செய்வார்கள். இவ்வாறாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த காரணத்தினால் அக்காலத்தில் நோய்நொடியின்றி சிறப்பாக நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.
இனி, நாமும் கூடுமானவரை பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து நம் முன்னோர்கள் கடைபிடித்த நல்ல பழக்க வழக்கங்களை மெல்ல மெல்ல கடைபிடிக்கத் தொடங்கி நல்வாழ்வு பெறுவோம்!