இன்றைய காலகட்டத்தில், விவசாயம் என்பது எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயத்தில் இனி பழமையை கடைப்பிடித்தால் சரி வராது என்பதால் தான் விவசாயத்தில், குறிப்பாக காய்கறிகள் விளைவிப்பதில், உற்பத்தியில், விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகளோடு இணைந்து புதுமைகளை புகுத்தி வருகிறார்கள்.
அனைத்து காய்கறிகளுமே முன்பெல்லாம் ஒரு ரகம் அல்லது இரண்டு ரகம் இருக்கும். இப்பொழுது அப்படி அல்ல. பல ரகங்களில் அதுவும் வித்தியாசமான நிறங்களில், காலிஃபிளவர் கூட கலர் கலராக வரத் தொடங்கிவிட்டது.
நாம் வழக்கமாக சாப்பிடும் காலிஃபிளவர் வெள்ளை நிறத்தில் இருப்பதை தான் பார்த்திருப்போம். ஆனால் ஒரு விவசாயி தனது நிலத்தில் வித்தியாசமான முறையில் மஞ்சள், பச்சை மற்றும் ஊதா நிற காலிஃபிளவரை விளைவித்து பிரபலம் அடைந்துள்ளார்.
ப்ரோக்கோலி பற்றி தற்போது ஓரளவிற்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கடைகளில் ப்ரோக்கோலியை பார்த்தால் தாராளமாக வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, மஞ்சள் மற்றும் ஊதா நிற காலிஃபிளவர் இந்திய சந்தையில் பிரபலமாகி வருகிறது.
இந்த காலிஃபிளவர் வழக்கமான காலிஃபிளவர் போன்று பயிரிடப்படுகிறதா அல்லது அதன் மேலே ஏதும் சாயம் பூசப்படுகிறதா என்பது பலருக்கும் புரியவில்லை.
சந்தையில் விற்கப்படும் வழக்கமான காலிஃபிளவர் போலவே இந்த மஞ்சள் மற்றும் ஊதா நிற காலிஃபிளவர்களும் பயிரிடப்படுகின்றன. பயிரிடும் முறையில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இந்த வகை, அதாவது வண்ணமயமான காலிஃபிளவரை மிகக் குறைந்த விவசாயிகள் மட்டுமே பயிரிடுகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர் கோலாகாட்டில் உள்ள பிருந்தாவஞ்சக் பகுதியை சேர்ந்த பிரமாத் மாஜி என்ற விவசாயி, இந்த வண்ணமயமான காலிஃபிளவரை பயிரிட்டு அப்பகுதி மக்களைக் கவர்ந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வண்ணமயமான காலிபிளவர் பயிரிட்டு விற்பனை செய்து வருகிறார்.
தன்னுடைய நிலத்தில் ஒரு பக்கம் சாதாரண காலிஃபிளவர், ப்ரோக்கோலி பயிரிட்டுள்ள பிரமாத் மாஜி, அவற்றுக்கு அடுத்ததாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணமயமான காலிஃபிளவர்களையும் பயிரிட்டுள்ளார். வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்து வருகிறார். இந்த வண்ணமயமான காலிஃபிளவருக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது என்கிறார். இந்த வண்ணமயமான காலிஃபிளவர் அதன் சுவை மற்றும் தரத்திற்காக மிகவும் பாராட்டப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.