
மாறிவரும் காலநிலைகள் சுற்றுச்சுழல் அமைப்பில் மாறுதலை ஏற்படுத்தி வருகின்றன. உலகில் உள்ள 14 பெரிய பாலைவனங்களில், தார், அரேபியன், நெகேவ் மற்றும் கிழக்கு கோபி பாலைவனம் மட்டுமே, 2001–2023 ஆண்டு வாக்கில் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. நமீப் பாலைவனம் மழைப்பொழிவில் கணிசமான சரிவை சந்தித்தது. மீதமுள்ள 9 பெரிய பாலைவனங்கள் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றம் அடையவில்லை.
உலகின் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட தார் பாலைவனம் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலம்வரை பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையைக் கடந்து தென்கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் 200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மற்ற பாலைவனப் பகுதியைக் காட்டிலும் இந்தப் பகுதி அதிக மக்கள் தொகை வளர்ச்சியைக் அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
கடந்த இருபது வருடங்களாக இந்தியாவில் உள்ள தார் பாலைவனம் ஆண்டுதோறும் 38 % பசுமை மயமாகி வருகிறது.இது பருவமழை மற்றும் விவசாய விரிவாக்கத்தினால் தோன்றியதாக ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது. பாசன நோக்கங்களுக்காக நிலத்தடி நீரை இறைத்தல், நீர்ப்பாசன உள்கட்டமைப்பை உருவாக்கியது, பெரிய அளவிலான பருவமழை மாற்றங்கள் தார் பாலைவனத்தில் பசுமை காரணிகளாக உள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களின் பங்களிப்பினால் தார் பாலைவனத்தின் நீர் வரத்து அதிகரிக்கப்பட்டது.நிலத்தடி நீர் வளங்களும் தாவரங்களின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. கடந்த ஆண்டில் நிலத்தடி நீர் 55 % பங்களிப்பும், மழைப்பொழிவு 45% பங்களிப்பும் பசுமை மயமாதலில் கொண்டுள்ளது.
தார் பாலைவனத்தில் வறண்ட பகுதிகளின் விரிவை மீறி 2001- 2023 ஆண்டுக்கு இடையில் மழைப்பொழிவில் 64 % அதிகரிப்பை சந்தித்தது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டுக்கு 4.4 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் மழைப் பொழிவு அதிகரித்து வருவதாக அறிக்கை காட்டுகிறது. தார் பகுதி முழுவதும், குறிப்பாக வடமேற்கில் கோடை பருவமழை அதிகரித்துள்ளது.
புவியியல் ஆய்வாளர்கள் அதிகரித்த மழைப்பொழிவை "காலநிலை மாற்றத்தின் எதிர் விளைவுகள்" என்று அழைத்தனர். இந்த மாற்றங்கள் பாலைவனங்களில் தாவர வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன.
2001–2023 காலகட்டத்தில் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ள நான்கு முக்கிய பாலைவனங்களிலும் தாவரங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியதாக ஆய்வு தெரிவிக்கிறது. 1985-2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தாருக்குள் உள்ள பல பகுதிகளின் மக்கள் தொகை 50% முதல் 800% வரை அதிகரித்துள்ளது.
தார் பாலைவனத்தில் பெரிய அளவிலான விவசாய விரிவாக்கம் நிலத்தடி நீர் குறைவை ஏற்படுத்துகிறது.1980–2015 காலகட்டத்தில் பயிர் பரப்பளவு 74 %, பாசனப் பரப்பளவு 24 % அதிகரித்து, இந்தப் பகுதி குறிப்பிடத்தக்க விவசாய விரிவாக்கத்தை சந்தித்தது.
விவசாய நடவடிக்கைகள் விரிவடைந்ததால், நிலத்தடி நீரின் தீவிர பயன்பாடு தாரில் நிலத்தடி நீர் குறைவை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நிலத்தடி நீர் கிணறுகள் நீர் மட்டத்தில் சரிவை அடைந்துள்ளது. குறிப்பாக வட மத்திய பிராந்தியத்தில் பருவமழை மற்றும் குளிர்காலங்களில் தாவர பசுமை கணிசமாக அதிகரித்துள்ளது.
2000-2020 காலகட்டத்தில் தார் பாலைவனத்தின் மக்கள்தொகை வளர்ச்சியைத் தொடர்ந்து அரேபிய பாலைவனத்திலும் மக்கள்தொகை அதிகரித்தது. உண்மையில், கடந்த சில தசாப்தங்களில் மக்கள் தொகை, மழைப்பொழிவு மற்றும் பசுமை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்ட உலகின் ஒரே பாலைவனம் தார் மட்டுமே என்று ஐஐடி காந்திநகர் மற்றும் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி பூங்காவின் விரிகுடா பகுதி சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.