
இறைவனின் படைப்பில் மனிதர்கள் மட்டுமின்றி, பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள் என பல வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் அவை வாழுமிடம், அவற்றின் உடலமைப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவற்றிற்கு ஒத்துப்போகும் வகையில் அவற்றின் உடல் உறுப்புகள் அமைந்திருக்கும்.
நாக்கு என்பது சுவை அறிவதற்கு பயன்படும் ஓர் உறுப்பு. சில விலங்குகளுக்கு நாக்கு மிக நீளமாக இருக்கும். அவை தனக்கு இரையாகப் பயன்படக்கூடிய பூச்சி இனங்களைப் பிடிக்கவும் தமது நாக்கை உபயோகப்படுத்துகின்றன. அவ்வாறு நீண்ட நாக்கு வைத்திருக்கும் 11 விலங்குகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. பச்சோந்தி: இதன் நாக்கு அதன் உடலின் நீளத்தை விட அதிக நீளமுடையது. ஒட்டும் தன்மை கொண்டது. தூரத்தில் இருந்தே, இரையைப் பார்த்தவுடன் மின்னல் வேகத்தில் நாக்கை நீட்டி அதை இழுத்து வாய்க்குள் திணித்துக் கொள்ளும்.
2. ராட்சத எறும்பு உண்ணி: இதற்கு பற்களோ தாடையோ கிடையாது. ஒட்டும் தன்மையுடைய நீண்ட நாக்கை வைத்து இரையாகப் பயன்படும் பூச்சிகளை லாவகமாக இழுத்து உண்ணக் கூடிய திறமை கொண்டது.
3. ஒட்டகச் சிவிங்கி: இதன் கழுத்தும் நாக்கும் மிக நீளமானவை. தடிமனான நாக்கை நீட்டி மரக் கிளைகளையும் இலைகளையும் வளைத்துப் பிடித்து இழுத்து இலைகளை உட்கொள்வது இதன் சாமர்த்தியம்.
4. ஒகாபி: ஒகாபிகளின் நாக்கு சுமார் 14 இன்ச் அளவில் அதன் முகத்தின் அளவை விட நீளமாக இருக்கும். ஒட்டகச் சிவிங்கி போலவே அடர்ந்த காட்டிற்குள் உயரமான மரத்தின் கிளைகளை நாவினால் வளைத்து இலைகளை உண்ணும்.
5. பச்சை நிற மரங்கொத்திப் பறவை: இது தனது நீண்ட அலகினால் மரப் பட்டையை கொத்திப் பிளக்கும். அப்போது அதன் நீண்ட நாக்கு பட்டைக்கு உள்ளே இருக்கும் பூச்சிகளைப் பிடித்து உணவாக உட்கொள்ள உதவும். மற்ற நேரங்களில் நாக்கை சுருட்டி மண்டை எலும்பின் ஒரு ஓரப் பகுதியில் வைத்துக் கொள்ளும்.
6. பங்கோலின் (Pangolin): உடல் முழுக்க செதில்கள் நிறைந்து பயங்கரமான தோற்றத்தில் காணப்படுவது. நீண்ட மெல்லிதான நாக்கைக் கொண்ட விலங்கு இது.
7. சூரியக் கரடி (Sun Bear): சாதாரண Grizzly bear போன்ற தோற்றமுடையது. ஆனால், மெல்லிதாகவும் ஒல்லியாகவும் தோற்றமளிக்கும். Grizzly bear போல இல்லாமல் இதன் நாக்கு நீளமாக நெகிழ்ச்சித் தன்மையும் நீட்சித் தன்மையும் கொண்டிருக்கும்.
8. நீலத் திமிங்கலம் (Blue Whale): இதன் நாக்கு மற்ற நீண்ட நாக்குடைய விலங்குகளின் நாக்கின் அளவுக்கு நீளம் உடையதல்ல. எனினும், விதிவிலக்காக இதன் நாக்கு அதிக எடை கொண்டு பெரியதாக உள்ளது.
9. எசிட்னா: உடல் முழுக்க நீண்ட முட்கள் நிறைந்த அமைப்பு கொண்டது இந்த விலங்கு. இதன் நீண்ட நாக்கு ஆழமான குழிகளுக்கு உட்சென்று பூச்சிகளைப் பிடித்து வந்து உட்கொள்ள வைப்பது இதன் முக்கியமான வேலை.
10. ஸ்வாலொவ் டெய்ல் (Swallow tail) பட்டர்ஃபிளை: ஸ்வாலொவ் டெய்ல் பட்டர்ஃபிளையின் நாக்கு மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும். இதைப் பயன்படுத்தி பூக்களின் உள்ளே இருக்கும் தேனை உட்கொண்டு பசியாறும் இந்த ஸ்வாலொவ் டெய்ல் பட்டர்ஃபிளை.
11. ஈக்வெடர் வௌவால்: இதன் நாக்கு இதன் உடலை விட ஒன்றரை மடங்கு நீளமானது. இதைப் பயன்படுத்தி பூக்களுக்கு உள்ளே இருக்கும் தேனை உறிஞ்சி எடுத்து உட்கொள்ளும் இந்த சிறிய வௌவால். மற்ற நேரங்களில் நாக்கை சுருட்டி விலா எலும்புகளுக்கு இடையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும்.