
இயற்கையால் படைக்கப்பட்டு இன்புற்று வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான பறவைகள் மற்றும் விலங்குகள் இனத்தில் சில வகை இன்று இல்லாமல் போய், முற்றிலுமாக அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அழிந்துபோய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பின்பும் அவற்றைப் பற்றிய நினைவுகளை அவை விட்டுச் சென்றிருக்கின்றன. அப்படிப்பட்ட உயிரினங்களில் 8 வகை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. டோடோ பர்ட் (DoDo Bird): பறக்கும் திறனின்றி இவ்வகைப் பறவைகள் மொரிஷியஸ் தீவுகளில் தரையிலேயே வாழ்ந்து வந்துள்ளன. இவை அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலும், வேறு வகைப் பறவைகள் இத்தீவுகளுக்குள் படையெடுத்து வந்த காரணத்தாலும், 17ம் நூற்றாண்டில் முற்றிலுமாக இவை இல்லாமல் போய்விட்டிருகின்றன.
2. தாஸ்மேனியன் டைகர் (Thylacine): இவை ஆஸ்திரேலியாவின் முக்கியப் பகுதியான தாஸ்மேனியா, நியூ கினியா தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. மிகவும் வெட்கப்படக்கூடிய விலங்கு. சின்ன அதிர்ச்சியைக் கூட இவற்றால் தாங்க முடியாமல் இறந்துவிடும் குணம் கொண்டது. அதிகளவில் வேட்டையாடப்பட்டதே இதன் அழிவிற்குக் காரணம். 1936ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி, ஹோபர்ட்டில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இந்த, வயிற்றில் பையுடைய பாலூட்டி இனத்தின் கடைசி டைகர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
3. பாஸன்ஜர் பீஜியன் (Passenger Pigeon): ஒரு காலத்தில் வட அமெரிக்காவில் கைவிடப்பட்ட பறவையாக இது இருந்துள்ளது. இந்த இனப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்பட்டதாலும் வாழ்வாதாரம் குறைந்ததாலும் இவை முற்றிலும் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. கடைசி பாஸன்ஜர் பீஜியன் 1914ல் இறந்துள்ளது.
4. உல்லி மம்மோத் (Woolly Mammoth): இந்தக் கரடு முரடான நீண்ட அடர்ந்த முடியுடைய ஜயண்ட் சைஸ் யானைகள் பனி யுகத்தில், சைபீரியா மற்றும் வட அமெரிக்காவின் சமவெளிப் பரப்புகளில் வாழ்ந்து கொண்டிருந்தன. சீதோஷ்ண நிலையில் மாற்றம் மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்பட்ட காரணங்களால் இவை 4000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக அழிந்துவிட்டிருக்கின்றன.
5. குவாகா (Quagga): பாதி குதிரை, பாதி வரிக்குதிரை ஆகிய இரண்டின் கலவையை கொண்ட தோற்றமாகக் கொண்ட இது, தெற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்தது. மனிதர்களால் அதிகளவில் வேட்டையாடப்பட்ட காரணத்தினால் அழிவின் விளிம்பிற்கு சென்று, 1883ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆம்ஸ்டர்டாம் மிருகக்காட்சிசாலையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த கடைசி குவாகா உயிரைத் துறந்து தனது இனத்தின் அழிவை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது.
6. பெரிய ஆக் (Great Auk): இது ஒரு பறக்க இயலாத கடற்பறவை இனத்தை சேர்ந்தது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியின் கடலோரங்களில் வாழ்ந்து வந்த பறவை. இதன் இறகுகள், இறைச்சி மற்றும் எண்ணெய் தயாரிப்பு போன்ற தேவைகளுக்காக இப்பறவைகள் அதிகளவில் வேட்டையாடப்பட்டு, 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில். முற்றிலுமாக அழிந்துவிட்டன.
7. சாபர் டூத்ட் டைகர் (Saber Toothed Tiger): பனி யுகக் காலத்தில் நீண்ட காலம் பூமியில் வாழ்ந்து வந்த மிருகம் இது. மிகப்பெரிய உருவம் கொண்டது. ஜயண்ட் சைஸில் கூர்மையான கோரைப் பற்களை உடைய இந்த விலங்கு, அதிக பலமுடன் மற்ற தாவர உண்ணிகளை வேட்டையாடிப் பிடித்து உணவாக்கிக் கொள்வதில் பிரபலமானது. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது.
8. கரோலினா பாராகீட் (Carolina Parakeet): வட அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட கிளி இனத்தை சேர்ந்த பறவை இது. கூட்டம் கூட்டமாக, வெவ்வேறு வகையான ஒலி எழுப்பியபடி பறந்து சென்று கொண்டிருக்கும். வாழ்வாதார இழப்பு மற்றும் இறகுகளுக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்ட காரணங்களினால் இவை 1939ம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.