
சோழவேங்கை (Bischofia Javanica) என்பது பி பிலேகாபா பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை மரமாகும். இதற்கு மலைப் பூவரசு, மிலச்சடையான், மூலா மரம் என்ற வேறு சில பெயர்களும் உண்டு. இந்தியா உள்ளிட்ட தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் பொலினீசியா வரையுள்ள பகுதிகளில் இம்மரம் அதிக அளவில் இருக்கின்றன.
இந்த மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரமான பகுதிகளில் நன்கு வளர்கின்றன. சோலைக்காடுகளில் மிகவும் வயதான மரங்களைக் காணலாம். இந்த மரங்கள் 12 முதல் 50 மீட்டர் உயரம் வரை வளரும். எப்போதும் பசுமையாகக் காணப்படும். இம்மரத்தில் பச்சை நிறத்தில் பூக்களும், இளம் சிவப்பு பழுப்பு நிறத்தில் கொத்தாகப் பழங்களும் இருக்கும். இந்த மரங்கள் அதிகபட்சமாக 10 அடி விட்டமும், 20 அடி சுற்றளவும் கொண்டவையாக இருக்கும். இதைவிட அதிகச் சுற்றளவு கொண்ட மரங்களும் சில இடங்களில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஏற்காடு மலையிலுள்ள அசம்பூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய ஒரு பழமையான மரம் இருக்கிறது. இம்மரத்தின் தூண் பகுதியானது 15 மீட்டர் உயரம்வரை உள்ளது. அதன் பிறகேக் கிளைகள் பிரிகின்றன. மரத்தூண் பகுதியானது அடியில் பெருத்தும், மேலேச் செல்லச் செல்லப் புணல் வடிவிலும் உள்ளது.
அடிப்பகுதி மிகவும் அகன்று இருக்கிறது. தரையுடன் ஒட்டிய பகுதியின் சுற்றளவு 66 அடி கொண்டதாக, 10 பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவுக்கு இந்த மரம் மிகப்பெரியதாக இருக்கிறது.
சிவப்பு நிறம் கொண்ட இந்த மரம் உறுதியானது என்பதால், பாலங்கள் கட்டுல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல் போன்றவைகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் பழங்களைக் கொண்டு ஒயின் தயாரிக்கப்படுகிறது.
மேலும், இதன் விதைகளில் 30 முதல் 54 % எண்ணெய்ப் பொருள் இருப்பதால், இவ்விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உயவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பட்டையில் இருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கப்படுகிறது. இந்தச் சாயத்தைப் பிரம்பு கூடை போன்றவற்றில் நிறமேற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றனர்.
அசாம் காடுகளில் இந்த மரத்தைப் புலிகள் தங்கள் எல்லைப்பகுதியை வரையறுத்துக் கொள்வதற்காகக் கால் நகங்களால் மரத்தின் பட்டையைப் பிறாண்டிக் கீறுகின்றன. இந்தக் கீறல்கள் கொண்ட மரப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் புலிகள், அந்த எல்லைக்குள் மற்ற புலிகளை அனுமதிப்பதில்லை என்கின்றனர்.
இம்மரங்களைத் தென்மேற்கு, நடு, கிழக்குச் சீனாவிலும், தைவானிலும் வாழும் மக்கள் புனித மரமாகக் கருதி வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.