
ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ் என்பது தமிழ் முதுமொழி. ஆனால், ஒரு நாடு முழுக்க ஆறுகளே கிடையாது என்றால் அந்த நாடு எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்? ஆனால், அந்த நாடு இன்று உலக பெரும் பணக்கார நாடாக உள்ளது. அந்த நாட்டில் நீருக்கு பதில் பெட்ரோலியம் ஆறாக பூமிக்குள் ஓடி செழிப்பாக்கியுள்ளது.
ஒரு நாட்டின் இயற்கை செல்வம் என்பது எப்போதும் நீர்தான். நீர் இருந்தால்தான் மக்கள் அங்கு குடியமர்வார்கள். அந்தப்பகுதியில் விவசாயம் செழித்து வளரும், அதனால் வியாபாரம் பெருகி நாடும் செல்வவளம் மிகுந்து காணப்படும். உலகில் நதிகளே இல்லாத ஒரு நாடு என்றால் அது சவூதி அரேபியாதான், பெட்ரோலியம் கிடைக்கும் முன்னர் வரை பல நூற்றாண்டுகள் வறுமையின் பிடியில்தான் இருந்தது.
நதிகள் இல்லாத காரணத்தினால் அந்த நாடு முழுக்க மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. நீரில்லாத காரணத்தினால் பரந்த அந்த நாடு முழுமையான பாலைவனமாக காட்சியளிக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் செய்ய இயலாது. சவுதியில் மிகக்குறைவான அளவில் எப்போதாவது மழை பொழிவது உண்டு. பெரும்பாலான நேரங்களில் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது.
மேலும் பிரம்மாண்டமான பாலைவனங்கள் ஆறு உருவாவதைத் தடுக்கின்றன. சவூதி தனது நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலத்தடி நீர்நிலைகளை நம்பியுள்ளது. பாலைவனங்களில் ஆங்காங்கே காணப்படும் சிறிய குட்டைகளில் தேங்கியுள்ள நீர்களை வைத்து தங்களது தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய சவாலாக குடிநீர் விநியோகம் உள்ளது. அரிதாக கிடைக்கும் நிலத்தடி நீர், மழை நீர், கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் போன்றவற்றைதான் தங்களின் குடிநீர் ஆதாரமாக சவூதியர்கள் வைத்துள்ளனர். சவூதி அரேபியாவில் எப்போதும் மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலையே உள்ளது. மழைப்பொழிவு இங்கு அரிதான ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
அதுவும் தொடர்ச்சியாக ஆறுகள் அல்லது குட்டைகள் உருவாகக் காரணமாகும் அளவுக்கு தொடர்மழை பெய்வது இல்லை. பெரும்பாலும் சிறிய அளவில் பெய்யும் துறல்களை அங்குள்ள வறண்ட நிலங்கள் உறிஞ்சி விடுகின்றன. இதனால் அந்த பகுதிகளில் ஆறுகள் அல்லது ஏரிகள் உருவாகுவது கடினமாக உள்ளது.
சவுதி அரேபியா உலகின் மிகப்பெரிய பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளது. பாலைவனத்தின் வெப்பம் சுற்றியுள்ள பகுதியில் நீர்நிலைகள் இருப்பதைத் தடுக்கிறது. அங்கு நிரந்தரமாக ஆறுகள் இல்லாவிட்டாலும் கூட, வறண்டபோன ஆற்றுப்படுகைகள் இன்றும் உள்ளன. அவை அரிதான மழைக்குப் பிறகு சிறிது நேரம் தண்ணீர் நிரப்பப்பட்டு சிறிது தூரம் பயணித்து விரைவிலேயே காய்ந்து விடுகிறது.
மற்ற நாடுகளைப்போல இயற்கையின் கொடையாக ஆறுகளை உருவாக்கும் பெரிய ஊற்றுக்கள் அந்த பகுதியில் இல்லை. கிணறு போன்ற ஆழத்தில் நீர் சில இடங்களில் கிடைக்கிறது. பாலைவன சோலைகள் எங்காவது தென்படும், அதன் நடுவில் சிறிய குட்டை போன்ற நீர்நிலை இருக்கிறது.
நதிகள் எதுவும் இல்லாததால் சவூதி கடல்நீரை சுத்திகரித்து அதை குடிநீராக மாற்றி விநியோகம் செய்கிறது. இயற்கையில் உருவான வறண்ட தாவரமான பேரீட்சை மரங்களை தவிர மற்ற விவசாயப் பணிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அல்லது சிறிய குட்டைகளை நம்பியுள்ளது. சில நேரங்களில் ஆழ்துளை கிணறுகளில் ராட்சஸ மோட்டார்கள் மூலம் நீரை இறைக்கிறது. சவூதி பொருளாதார வளத்தை வைத்து நீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. எதிர்காலத்தில் உலகின் பெட்ரோலிய தேவை குறையும்போது நீர் மேலாண்மைக்கு அது திண்டாட வேண்டி இருக்கும்.