உயிரியல் பூங்கா என்பது வன விலங்குகள் முதல் அனைத்து ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் பாதுகாப்பு அளித்து, அவற்றை மக்களிடம் காட்சிப்படுத்தும் ஓர் இடம், அதில் சில இனங்கள் வன உயிரியல் பூங்காக்களில் இருப்பதில்லை. அப்படி அவை இல்லாததற்கு பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் அதில் உள்ள நடைமுறை சவால்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ராட்சத ஸ்க்விட் (Giant Squid)
மிகவும் தனித்துவமான உயிரினங்களில் ஒன்று ராட்சத ஸ்க்விட் ஆகும். இந்த ஆழ்கடல் உயிரினம் அரிதாகவே காணப்படுகின்றன, மேலும், கடலில் அவை வாழ்கின்ற இடம் மிகவும் ஆழமானது என்பதால் அவற்றைப் பிடிப்பது சாத்தியமற்றது. அப்படி பிடிபட்டாலும், அவற்றின் இயற்கையான சூழலைப் பிரதிபலிப்பதிலும் அவற்றைப் பராமரிப்பதிலும் நிறைய சவால்கள் உள்ளன. ஆகையால் அவற்றை உயிரியல் பூங்காக்களில் வைப்பது நடைமுறைக்கு முடியாத காரியமாக கருதுகிறார்கள்.
சாயோலா (Saola)
பெரும்பாலும் "ஆசிய யூனிகார்ன்"(Asia Unicorn) என்று அழைக்கப்படும் சாயோலா வியட்நாம் மற்றும் லாவோஸ்(Laos) காடுகளில் காணப்படும் மிகவும் அரிதான பாலூட்டி வகை உயிரினம் ஆகும். அதன் தனித்துவமான வாழ்க்கை முறை மற்றும் அது ஆக்கிரமித்துள்ள அடர்த்தியான, தொலைதூர வாழ்விடங்கள், மிருகக்காட்சிசாலைகளில் அவற்றை பிடித்து காட்சிப்படுத்துவதை கடினமாக்குகிறது. இத்தகைய அரிய வகை உயிரினங்களைப் பிடிப்பதில் உள்ள நெறிமுறை சிக்கல்களும் ஒரு காரணமாகும், ஏனெனில், இந்த இனமே உலகில் குறைவாக தான் உள்ளதாம். அதாவது, அழிவின் விளிம்பில் உள்ளது. எனவே, இவற்றைப் பிடிக்க முயற்சிப்பது, மிச்சமிருக்கும் மொத்த கூட்டத்துக்கும் எதிர்மறையாய் மாறக்கூடும்.
நீல திமிங்கலம் (Blue Whale)
நீல திமிங்கலம், பூமியின் மிகப்பெரிய உயிரினம் மற்றும் உயிரியல் பூங்காக்களில் காணப்படாத மற்றொரு இனம். ஒரு நீல திமிங்கலத்தின் மொத்த அளவை பார்த்தால் அனைவரையும் பிரமிக்க வைக்கும். பின் அதை அடைத்து வைக்க வேண்டும் என்றால், ஒரு பெரிய கடல் போன்ற மாதிரியை உருவாக்க வேண்டும், அப்போது தான் அதனால் நீந்தவும், வாழவும் முடியும்.
நார்வால் (Narwhal)
நார்வால்கள், அவற்றின் தனித்துவமான தந்தங்கள் காரணமாக பெரும்பாலும் கடலின் யூனிகார்ன்கள்(Unicorn) என்று குறிப்பிடப்படுகின்றன, இதுவும் உயிரியல் பூங்காக்களில் காணப்படுவதில்லை. காரணம், இந்த ஆர்க்டிக் திமிங்கலங்களுக்கு குளிர்ந்த நீர் மற்றும் போதுமான இடவசதி தேவைப்படுகிறது, இதனால் அவற்றை சிறைபிடித்து பராமரிப்பது கடினம். இதையும் மீறி, சிறைப்பிடிக்கப்பட்டால், அந்த உரினங்களுக்குள் உண்டாகும் மன அழுத்தமே அதன் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கடுமையாக பாதித்துவிடுமாம்.
மலை கொரில்லா (Mountain Gorilla)
சாதாரண கொரில்லாக்கள் உயிரியல் பூங்காக்களில் காணப்பட்டாலும், மலை கொரில்லாக்கள் அப்படி இல்லை. காரணம் அவற்றின் குறிப்பிட்ட உணவுத் தேவைகள், மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நோய்கள். அவை வாழும் இயற்கையான வாழ்விடத்திற்கு வெளியே அவற்றின் ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது கடினமானது. இதனால் அவற்றை உயிரியல் பூங்காக்களில் வைக்க முயற்சிப்பதை விட்டு, அவற்றுக்கு தேவையான இயற்கையான சூழல்களைப் பாதுகாப்பதில் இயற்கை ஆர்வலர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த உயிரினங்கள் வாழும் இயற்கை சூழல்கள் மற்றும் அன்றாட நடத்தைகளை மதிப்பது, அவற்றின் நல்வாழ்வுக்கு மிக முக்கியமானது. எனவே இதை மனிதர்களால் பார்க்கவும், பராமரிக்கவும் முடியாவிட்டாலும், இந்த பூமியில் அவற்றுக்கான இருப்பை நிலைநிறுத்த அவற்றை சுதந்திரமாக வாழ விடுவதே சிறந்தது.