
உலகில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் மீன்கள்தான். கிட்டத்தட்ட 500 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே கண்டறியப்பட்ட உயிரினம். மீன்களில் மட்டுமே 20,000 முதல் 30,000 வகைகள் உள்ளன. அண்டார்டிகா கண்டம் தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் மீன்கள் உள்ளன என்கிறார்கள் பிலிப்பைன்ஸ் உலக நீர்வாழ் உயிரின ஆய்வு மைய விஞ்ஞானிகள்.
இக்தியாலஜி( ichthyology) என்பது மீன்கள் அமைப்பு, அவற்றின் வகைகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் படிப்பு.10 மி.மீ.க்கும் கீழேயுள்ள மீன்கள் முதல் 20 மீட்டர் நீளமுள்ள மீன்கள் வரை உள்ளன. மீனில் சராசரியாக 50 முதல் 70 சதவிகிதம் புரோட்டீனும், 2 முதல் 15 கொழுப்பு, 10 முதல் 12 சதவிகிதம் தாது உப்புக்கள், 6 முதல் 12 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. இதனைத் தவிர்த்து இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, டி, கேயும் உள்ளன.
பிரிஸ்டல் மவுத் எனும் வகை மீன்கள்தான் உலகளவில் அதிகம் காணப்படும் மீன். திமிங்கல சுறாதான் மீன்கள் இனத்தில் மிகப்பெரியது. கிட்டத்தட்ட 13 மெட்ரிக் டன் எடையுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆப்பிரிக்க யானைகளுக்கு சமம். மீன்கள் இனத்தில் மிகச் சிறியது ‘பிக் மை கோபை’ எனும் இனம்தான். இதன் நீளம் 5 செ.மீ.தான். ஒரு கிலோவுக்கு கிட்டத்தட்ட 20,000 மீன்கள் தேறும்.
மீன்களில் மர்லின் எனும் வகை மீன்கள் அதிவேகத்தில் நீந்தும் ஆற்றல் மிக்கது. இதன் வேகம் மணிக்கு 80 கி.மீ. மிக மெதுவாக நீந்தும் மீன்கள் கடற்குதிரை வகை மீன்கள்தான். இதன் வேகம் மணிக்கு 0.016 கி.மீ. வேகம்தான்.
‘ஹெச் செஸ்ட்’ எனும் வகை மீன்கள் பறக்கும் ஆற்றல் உடையவை. இவை 3 மீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் உடையவை. ‘பிரன்காஷ்’எனும் வகை மீன்கள் மூர்க்கத்தனமானது. இது மனிதனின் கை விரல்களை கேரட் கடிப்பதைப் போல கடிக்கும் குணமுடையது. ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் உள்ள சில வகை மீன்கள் ஒரு மாதம் வரை கூட சாப்பிடாமல் உயிர் வாழுமாம். ‘எலெக்ட்ரிக் ஈல்’ எனும் மீன் விசித்திரமானது. இது 400 முதல் 600 வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சும் குணமுடையது. இதனை மனிதர்கள் தொட்டால் அவ்வளவுதான் மரணம் நிச்சயம்.
மனித இனம் தோன்ற காரணமாக இருந்தது ‘சீலாகாந்த்’ (coelacanth) எனும் மீன்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள் பரிணாமக் கொள்கைக்கு ஆதாரமாக. கடலிலிருந்து நிலத்திற்கு குடியேற முயன்ற மூதாதையர் இனமாக இந்த மீன்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் முடிவு. இந்த மீன் 1938ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதி மடகாஸ்கர் அருகில் பிடிபட்டது. அப்போது அதன் நீளம் 5 அடி இருந்தது. அப்போது உலகில் அதிக விலைபோன மீன் அதுதான். காரணம் பரிணாமக் கொள்கைக்கு ஆதாரமாக இந்த மீன்கள் நுரையீரல் போன்ற சுவாசப் பைகளையும் கொண்டு இருந்ததுதான்.
உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேலான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கிறார்கள். கடைகளில் விற்கப்படும் மீன்களில் 25 சதவீதம் அவர்கள் பிடித்ததுதான். ஆண்டுக்கு சராசரியாக 12 கோடி டன் மீன்கள் வரை கடலில் இருந்து பிடிக்கப்படுகின்றது. அதில் அதிகம் பிடிக்கப்படும் மீன்கள் அலாஸ்கா பகுதியில் வாழும், ‘டெமெர்சால்’ (demersal) மீன் வகைதான். மீனவர்கள் பிடிப்பதில் 6 சதவீதம் இதுதான்.
பொழுதுபோக்கிற்காக மீன் பிடிக்க பிரிட்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்தான் ‘பிரெவ்ன் பிராட்’ ( Brown trout). இது 1899ம் ஆண்டு மிட் செல் என்பவரால் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அதை காஷ்மீர், டார்ஜிலிங், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் குளங்களில் வளர்க்க விடப்பட்டது.
பசிபிக் கடல் பகுதியில் கிடைக்கும் ‘டூனா’ வகை மீன்கள் அதிக புரதம் நிறைந்தது என்பதால் இது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதேபோல ‘சால்மன்’ வகை மீன்களும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. உலகில் எத்தனையோ வகை மீன்கள் இருந்தாலும், சால்மனுக்கு தனிச்சிறப்பு உண்டு. நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய மறுபடியும் தான் பிறந்த நன்னீர் நிலைக்கே திரும்பி வருபவை சால்மன். இது தனது 5 முதல் 7 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நீந்தும். சால்மன்கள் சலிக்காமல் பல்லாயிரக்கணக்கான தூரத்தை நீந்திக் கடப்பதற்கு ஏற்ப, அவற்றின் உடலில் 8 துடுப்புகள் இருக்கின்றன. சால்மன் வெகுதூரம் வலசை செல்கிற மீன் என்பதால், இவை சோர்ந்துபோகாமல் இருக்க இயற்கை இவற்றின் உடலில் சிறுசிறு நீர்ப்பைகளையும் கொடுத்திருக்கிறது. இவை மிதப்பதற்கு உதவுவதால், சால்மன் மீன்கள் சோர்ந்துபோகாமல் நீந்தும்.
கொய் மீன்கள் அவற்றின் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண வடிவங்களுக்குப் பெயர் பெற்றவை. அதன் நிறத்தால் அனைவரையும் வசீகரிக்கும். நிஷ்கிகோய் (Nishkigoi) பொதுவாக கொய் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகவும் விலையுயர்ந்த செல்லப்பிராணி மீன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கொய் மீன் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூபாய் 15 கோடிக்கு மேல்) விற்பனை செய்யப்பட்டது. இந்த அதிக விலைக்கு ஒரு முக்கியக் காரணம், இந்த மீன் ஒரே இனப்பெருக்கக் காலத்தில் 10,00,000 முட்டைகள் வரை இடும் என்பதுதான். கொய் மீன்கள் வலிமையானது, புத்திசாலித்தனமானது மற்றும் மீள்தன்மை கொண்ட உயிரினமாகக் கருதப்படுகின்றன. இந்தக் கொய் மீன்கள் 25 முதல் 40 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை.