
இந்தியாவிலுள்ள மொத்த பறவை இனங்களில் 1,393 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஒப்பிடுகையில் இது 12 சதவிகிதமாகும். இந்த 1,393 வகைகளில் 84 வகையிலான பறவைகள் இந்தியாவில் மட்டுமே காணப்படுபவைகளாக உள்ளன. பறவைகளில் புறா, காக்கை, குருவி, மைனா மற்றும் மயில் போன்றவற்றை நாம் சாதாரணமாக நம் குடியிருப்புப் பகுதிகளிலோ அல்லது மிருகக்காட்சி சாலைகளிலோ சுலபமாகக் காண முடியும். அழிவின் விளிம்பில் இருக்கும் சில வகைப் பறவைகள் மிக அரிதாகவே நம் கண்களில் தென்படும். இந்தியாவிலுள்ள 10 அரிய வகை பறவைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சோசியபிள் லாப்விங் (Sociable Lapwing): கஜகஸ்தானின் திறந்த புல்வெளிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வருவது இந்த சோசியபிள் லாப்விங் பறவை. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மட்டுமே இவை காணப்படுகிறது. கஜகஸ்தானின் திறந்தவெளிப் பகுதி மற்றும் விவசாய நிலங்களில் முட்டையிட்டு விட்டு குளிர் காலத்தைக் கழிக்க இடம் பெயர்ந்து இந்தியா வருகின்றன.
2. கிரேட் இந்தியன் பஸ்டார்ட் (Great Indian Bustard): இவை இந்தியாவில் மட்டுமே காணப்படும் பறவை இனம். தரையில் வாழும் பறவைகளில் மிகப்பெரிய உருவம் கொண்டவை. இதற்கு பறக்கவும் முடியும். சுமார் ஒரு மீட்டர் உயரம் மற்றும் 15 கிலோ எடை கொண்டது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் தேசியப் பறவை. வாழ்வாதார நெருக்கடி மற்றும் அதிகளவில் வேட்டையாடப்படுவதாலும் எண்ணிக்கையில் இவை குறைந்து வருகின்றன.
3. ஒயிட் பெல்லீட் ஹெரான் (White-bellied Heron): ஹெரான் இனத்தில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய உருவம் கொண்ட பறவை இது. வடகிழக்கு இந்தியாவில் இமயமலையின் அடிவாரப் பகுதிகளை இருப்பிடமாகக் கொண்டது. அடர் கிரே நிறத்தில், தொண்டைப் பகுதியும் அடி வயிறும் வெள்ளை நிறம் கொண்டுள்ளது. வாழ்வாதார நெருக்கடி மற்றும் மனிதர்களின் இம்சை போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
4. ஃபாரஸ்ட் அவுலெட் (Forest Owlet): இந்தியாவின் மத்திய வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஆந்தை இனத்தைச் சேர்ந்த பறவையினம் இது. ஒரு காலத்தில் இது முற்றிலும் அழிந்துவிட்ட இனமாகக் கருதப்பட்டு, இப்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுவதே இதன் எண்ணிக்கை குறைவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
5. ஸ்பூன்-பில்டு சாண்ட் பைப்பர் (Spoon-billed Sandpiper): வடகிழக்கு ரஷ்யாவில் இனப்பெருக்கத்தை முடித்துவிட்டு, குளிர் காலங்களில் இடம் பெயர்ந்து வந்து வெஸ்ட் பெங்கால், கேரளா, தமிழ்நாடு, ஒரிசா போன்ற மாநிலங்களின் கடலோர, ஈர மணற்பாங்கான, சகதியான, தாவரங்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் வாழ்ந்து வரும் பறவை இது.
6. ஸ்ட்ரைப் பிரெஸ்டட் உட் பெக்கர் (Stripe breasted wood pecker): மேற்கு மலைத் தொடர்ச்சி மற்றும் நீலகிரி மலைப் பகுதி, குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இவற்றைக் காணலாம். அடர்ந்த வனப் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலுள்ள இந்தப் பறவையை காண்பது அரிது.
7. பேல் ரோஸ்ஃபிஞ்ச் (Pale Rosefinch): இமயமலையின் உயரமான இடங்களில், குறிப்பாக உத்தர்கண்ட், ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களின் மலை உச்சிப் பகுதிகளில் காணப்படும் பறவையினம் இது. இவை அழிவின் விளிம்பில் உள்ளதாகக் கருதப்படும் பறவை இனத்தில் இதுவும் ஒன்று.
8. சைனீஸ் ஃப்ரான்கோலின் (Chinese Francolin): ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இப்பறவையைக் காணலாம். மனிதர்களால் வேட்டையாடப்படுதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் இப்பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பு உருவாகி வருகிறது.
9. சுவாம்ப் ப்ரினியா (Swamp Prinia): சுவாம்ப் ப்ரினியாவை உத்தரபிரதேஷ், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சதுப்பு நிலக் காடுகள், புல்வெளிகள் மற்றும் ஈரமான நிலப் பரப்புகளில் காணலாம். இப்பறவைகள் வாழ்ந்து வரும் பகுதிகள் அதிகம் மாசடைந்து வருவதாலும், ஈர நிலங்கள் நீர் வற்றி காய்ந்து போவதாலும் இந்த இனப் பறவைகளும் முற்றிலும் அழிந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
10. வங்காள புளோரிகன் (Bengal Florican): இது அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் புல்வெளிகள் நிறைந்த உயரமான இடங்களில் காணப்படும் பறவை. ஆண் பறவை கருப்பு நிறத்திலும் பெண் பறவை பழுப்பு நிறத்திலும் காணப்படும். இந்தப் பறவை இனம் அழிவின் விளிம்பில் இருப்பதால், மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்தாபரா தேசிய பூங்காவில் இதனைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை செயலாக்கமும் பெற்று வருகின்றன.