பிண வாசனை கொண்ட பிண மலர் பற்றித் தெரியுமா?

Titan Arum
Titan Arum
Published on

டைட்டன் ஆரம் (Titan Arum) அல்லது அமார்ஃபோஃபாலஸ் டைட்டனம் (Amorphophallus Titanum) என்பது உலகின் மிகப்பெரியப் பூக்களைக் கொடுக்கும் கிளையிலாத் தாவரமாகும்.

பண்டைய கிரேக்க மொழியில், அமார்ஃபோஸ் என்றால் ‘உருவாகாத’ அல்லது ‘நடக்காத’ என்று பொருள். இதே போன்று, ஃபாலஸ், டைட்டன் என்பன ‘பெரிய’ என்று பொருள் தரும். இந்த மலரின் மணம் அழுகிய விலங்கின் மணத்தினை ஒத்திருக்கும். இதனால், டைட்டன் ஆரம் பிண மலர் (Corpse Flower) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் மழைக்காடுகளில் காணப்படும் இம்மலரின் வாசம், பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.

இது ஒரு செடி. என்றாலும் மரம்போல 20 அடி உயரம் வரை வளரும். கிளைகளுடனும், இலைகளுடன் 15 அடி அகலத்துக்குக் குடை போல அகன்று இருக்கும். இது தன் இலைகளின் மூலமாக ஒளிச்சேர்க்கை செய்து பூப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தண்டில் சேமித்து வைத்துக் கொள்ளும். இச்செடி வளர்ந்த 12 முதல் 18 மாதங்களில் இலைகள் மடிந்து செடியும் செயலற்ற தன்மைக்குச் சென்றுவிடும். இவ்வேளையில், இது இலைகள், கிளைகள் அற்ற மரம் போலக் காணப்படும். தாவரம் செயலற்ற தன்மையில் இருக்கும் போது சுமார் 100 கி.கி எடையுள்ள மிகப்பெரிய பாளைத் தண்டு உருவாகும். பின்னர் தண்டில் இருந்து மொட்டு உருவாகிறது. இந்த மொட்டு விரைவாக வளர்ந்து, பூவாக மலருகிறது.

இதையும் படியுங்கள்:
தேசிய புவியியல் அந்தஸ்து பெற்ற பாரம்பரிய ஏரி எது தெரியுமா?
Titan Arum

உலகிலேயேப் பெரிய மலர் என்ற பெயர் பெற்ற இம்மலர் தன்மகரந்தச் சேர்க்கை செய்து கொள்வதில்லை. இருப்பினும், இம்மலரிலிருந்து வீசும் பிண வாடையானது, காடுகளில் இறந்த விலங்குகளில் ஒட்டியுள்ள வண்டுகளையும், வியர்வை ஈக்களையும் கவருவதின் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை நடத்திக் கொள்கிறது. இப்பூ மலர்ந்த பின்னர் 24 மணி நேரத்தில் வாடிவிடுகிறது. இதன் பிறகு செடியின் பாளைத் தண்டில் இருந்து பெர்ரியின் தோற்றத்தை ஒத்த கனிகள் உருவாகின்றன. இந்தக் கனிகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என படிப்படியாக நிறமாற்றம் அடைந்து பழுக்கின்றன. இந்தக் கனிகளை இருவாய்ச்சி போன்ற பறவைகள் உண்டு, இதன் விதைகளைப் பல பகுதிகளுக்குப் பரப்புகின்றன. இந்த விதைகள் வழியாக புதிய செடிகள் முளைக்கின்றன. இந்தச் செடியில் இருந்து இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ உருவாகிறது. ஒரு செடியானது நான்கு முதல் ஆறு பூக்கள் பூத்த பிறகு மடிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com