

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைப்பிரதேசங்கள் மற்றும் காடுகளில் வசித்து வரும் விலங்கினங்கள் சிலவற்றிற்கு, அவை தங்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், இனப்பெருக்க நேரங்களில் போட்டியாளருடன் மோதி ஜெயிக்கவும் என சில வகையான காரணங்களுக்காக, இயற்கையாகவே மிக நீளமான, வலிமைமிக்க கொம்புகள் அமைந்துள்ளன. அவ்வாறான ஐந்து வகை விலங்குகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. கிரேட்டர் குடு ஆன்டிலோப் (Greater Kudu Antelope): கிரேட்டர் குடு ஆப்பிரிக்க காடுகளில் வசித்து வரும் மான் வகையை சேர்ந்த விலங்கு. சிங்கம் மற்றும் சிறுத்தை போன்ற அபாயகரமான மிருகங்களிடமிருந்து தப்பிக்க இவை அடர்ந்த புதர்கள் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து வசித்து வருகின்றன. ஆண் குடு சுமார் 300 கிலோ எடையுடன், சுருள் சுருளான வடிவம் கொண்ட நான்கு அடிக்கும் மேலான நீளமும் கூர்மையும் கொண்ட கொம்புகளைக் கொண்டுள்ளது.
2. ஓய்ல்டு வாட்டர் பஃபலோ (Wild Water Buffalo): உலகிலேயே மிக நீளமான கொம்புகளை உடைய விலங்குகளில் ஒன்று இது. அதிக உடல் பருமனும் எட்டடி நீள கொம்பும் கொண்ட இந்த பஃபலோ தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
3. பிக்ஹார்ன் ஷீப் (Bighorn sheep): வட அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய அளவிலான வன விலங்கு இது. சுமார் 14 கிலோ எடை கொண்ட இதன் கொம்புகள் முகத்தினருகே வளைந்து தோற்றமளிக்கிறது. எதிரிகளின் நடமாட்டத்தை கணிப்பதற்கு தகுந்தவாறு கூர்மையான பார்வை, கேட்கும் திறன் மற்றும் வாசனை அறியும் சக்தியும் கொண்ட ஷீப் இது. இது தனது வலுவான கொம்புகளை எதிரிகளுடனும், இனப்பெருக்க காலங்களில் போட்டியாளருடனும் முட்டி மோதி சண்டையிடுவதற்கு பயன்படுத்துகிறது.
4. சேபிள் மான் (Sable Antelope): இந்த வகை மானின் கம்பீரமான, நீண்ட, பின் நோக்கி வளைந்த கொம்புகள், சிங்கம் போன்ற வலிமையான எதிரிகளுடன் கூட ஆக்ரோஷமாக சண்டையிட்டு ஜெயிக்க உதவி புரிபவை. ஆப்பிரிக்காவில், புல்வெளிகளும் புதர்களும் நிறைந்த சாவன்னா காடுகளில் இந்த மான்களைக் காண முடியும்.
5. அட்டாக்ஸ் ஆன்டிலோப் (Addax Antelope): சஹாரா பாலைவனத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவ்வகை மான்களின் கொம்புகள் சுமார் மூன்றடி நீளமுடன் வளைந்த தோற்றம் கொண்டுள்ளன. திறந்தவெளிப் பரப்பிலும் எதிரிகளை தைரியமுடன் எதிர்கொண்டு சண்டையிட இதன் கொம்புகள் சிறந்த முறையில் உதவி புரிகின்றன.