

சுற்றுச்சூழல், பொருளாதாரம், மனித ஆரோக்கியம் ஆகியவற்றில் மலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய ஆதாரங்களாகவும், கனிம வளங்களை வழங்குவதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், சுற்றுலா நடவடிக்கைகளிலும் மலைகள் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றன. அந்த வகையில் மலைகளை அதிகம் கொண்ட முதல் 5 நாடுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
நேபாளம்: நம் அண்டை நாடான நேபாளம் மலைகளை அதிகம் கொண்ட நாட்டின் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் நேபாள நாட்டில்தான் அமைந்துள்ளது. அங்கு 7000 மீட்டருக்கு மேல் 100க்கும மேற்பட்ட மலைகள் உள்ளதால் உலகின் உயரமான சிகரங்களின் தாயகமாக நேபாளம் கருதப்படுகிறது.
இந்தியா: அதிக மலைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் நம்முடைய இந்திய இரண்டாம் இடத்தில் உள்ளது. நம் நாட்டில், பனி மூடிய சிகரங்கள் என ஏராளமான இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவின் பல பிரதேசங்களுக்கு இந்த மலைகள் பாதுகாப்பு அரணாகவும், வாழ்வாதாரங்களாகவும் திகழ்கின்றன.
சீனா: சீனா அதிக மலைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் 3ம் இடத்தில் உள்ளது. எவரெஸ்ட் சிகரம் நேபாளம் - சீனா எல்லையில் அமைந்துள்ளதோடு, இங்கு திபெத்திய பீட பூமி மற்றும் தியென் ஷான் ஆகிய மிகப்பெரிய மலைத் தொடர்கள் காணப்படுகின்றன. மேலும், சீனா பல உயரமான சிகரங்களை கொண்ட நாடாகவும் உள்ளது.
பாகிஸ்தான்: குறிப்பிடத்தக்க மலைத் தொடர்கள் மற்றும் சிகரங்கள் நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இருப்பதால் அதிக மலைகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் நான்காம் இடத்தில் உள்ளது. பிரபலமான கில்கிட் – பால்டிஸ்தான், K2 போன்ற மலைத் தொடர்கள் இங்கு உள்ளன. பாகிஸ்தானில் உள்ள கரகோரம் மலைத் தொடர் மலையேற்ற விரும்பிகளுக்கான முக்கியமான ஸ்பாட்டாக உள்ளது.
சுவிட்சர்லாந்து: ஐரோப்பாவின் கூரை என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் ஏராளமான மலைப் பகுதிகள் உள்ளதால் அதிக மலைத்தொடர்கள் உள்ள நாடுகளின் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மலைத் தொடர்கள் பனிச்சறுக்கு, மலையேற்ற ஆர்வலர்களுக்கு சொர்க்க பூமியாக திகழ்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் பெற்ற மலைகளை பாதுகாப்பதை ஒவ்வொருவரின் கடமையாக கொள்ள வேண்டும்.