
இந்தியாவில் பூச்சிக்கொல்லிக் கொள்கலன்களில் அதன் நச்சுத்தன்மை அளவினை அடையாளம் காண்பதற்காக, இந்திய அரசின் பூச்சிக்கொல்லிகள் சட்டம் - 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் - 1971 ஆகியவற்றின் படி, பூச்சிக் கொல்லிக் கொள்கலன்களில் நிறுவனத்தின் பெயர், உற்பத்தியாளரின் பெயர், தற்செயலான நுகர்வு ஏற்பட்டால் மாற்று மருந்தின் பெயர் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். நச்சுத்தன்மையின் அளவை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக ஒரு வண்ணக் குறியீடு மூலம் உணர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதன்படி, சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை என்று நான்கு நிறங்களிலான நச்சுத்தன்மை முத்திரைகள் (Toxicity Labels) பூச்சிக் கொல்லிக் கொள்கலன்களில் ஒட்டப்படுகின்றன. இவற்றுள்;
1. சிவப்பு நிறக் குறியீடு:
மோனோக்ரோடோபாஸ், துத்தநாக பாஸ்பைடு, எத்தில் மெர்குரி அசிடேட் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டது. இவை மிகவும் நச்சு கொண்டவை. 1 மில்லி கிராம் முதல் 50 மில்லி கிராம் வரை வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.
2. மஞ்சள் நிறக் குறியீடு:
எண்டோசல்பன், கார்பரில், குயினல்போஸ் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டது. இவை அதிக நச்சு கொண்டவை. 51 மில்லி கிராம் முதல் 500 மில்லி கிராம் வரை வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.
3. நீல நிறக் குறியீடு:
மாலதியோன், தீரம், கிளைபோசேட் மற்றும் பிற பட்டியலிடப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டது. இவை மிதமான நச்சு கொண்டவை. 501 மில்லி கிராம் முதல் 5000 மில்லி கிராம் வரை வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.
4. பச்சை நிறக் குறியீடு:
மான்கோசெப், ஆக்ஸிஃப்ளூர்பென், கொசு விரட்டும் எண்ணெய்கள் மற்றும் திரவங்கள் மற்றும் பிற வீட்டு பூச்சிக்கொல்லிகள். இவை சிறிய அளவிலான நச்சு கொண்டவை. 5000 மில்லி கிராமுக்கு மேல் வாய்வழி உட்கொண்டால் மரணம் ஏற்படுத்தும் தன்மையுடையவை.
மேற்காணும் நச்சுத்தன்மையின் நிறக் குறியீட்டு அடிப்படையிலான வகைப்பாடு, இந்தியாவில் விற்க அனுமதிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளுக்கு மட்டுமேப் பொருந்தும். வகைப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் சில மாநில அரசுகளின் முடிவால் தடை செய்யப்படலாம். 2011 ஆம் ஆண்டின் எண்டோசல்பன் போராட்டங்களைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் சில சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் குறியீட்டிலான பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.