
நம் நாட்டில் 3500க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள், செடி, கொடிகள் மற்றும் மரங்கள் இந்திய வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. நம் முன்னோர்கள் காலம் காலமாக அவற்றைப் பயன்படுத்தி இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை புரிந்து மருத்துவ குணம் நிறைந்த இதுபோன்ற மரங்களைத் தக்க சமயத்தில் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வந்து உள்ளார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
சந்தன மரம்: சந்தன மரம் பல்வேறு நோய்களைப் போக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது. இம்மரத்துக்கு உடலேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வை பெருக்கி, வெப்பம் உண்டாக்கி, அழுகல் மனம் அகற்றி, குளிர்ச்சி உண்டாக்கி என பல பண்புகள் உள்ளன. சந்தனம் அறிவு மற்றும் மன மகிழ்ச்சி கொடுக்கவல்லதாக கருதப்படுகிறது. இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் 'சாண்டலால் 'என்ற தைலம் மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் தயாரிப்பதற்கும், வாசனை திரவியங்கள், எண்ணெய் மற்றும் சோப்பு உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணையை தலையில் தேய்த்து குளிக்கும் பட்சத்தில் உடல், கை கால் வலி, கண் எரிச்சல் போன்ற நோய்கள் குணமடையும். மேலும், இதன் விதையில் இருந்து எடுக்கப்படக்கூடிய எண்ணெய் சொறி மற்றும் சிரங்குகள் குணமாகப் பயன்படுகிறது.
நாவல்: இதன் விஞ்ஞான பெயர் ‘சைசீசியம்’ என்பதாகும். பொதுவாக கிருமிகளை கட்டுப்படுத்தம் திறன் நாவல் மரத்தின் பட்டை, தண்டு, இலை, மொட்டு, பூ போன்ற பாகங்களில் உள்ளது. இலை துவர்ப்பு பண்புடையது. நாவல் கொழுந்தை ஏலத்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப் பாலுடன் கலந்து உட்கொண்டால் செரியா கழிச்சல் நீங்கிவிடும். சீதக்கழிச்சலும் கட்டுப்படும். பட்டையை முறைப்படி குடிநீர் செய்து உட்கொள்ள நீரிழிவு குணமாகும். வாய்ப்புண் குணமாகும். குடிநீரை கொப்பளிக்கலாம். அடிபட்ட வீக்கம், கட்டி ஆகியவை அமுங்கிட இப்பட்டையை அரைத்துப் பூசலாம். நாவல் பழ விதை தோலுடன் மாம்பருப்புத் தூளையும் சேர்த்து உட்கொண்டால் சிறுநீர் கூடுதலாகப் போகும்.
இலுப்பை: இதன் இலைச் சாம்பல் களிம்பு, தீப்புண், வெந்த புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். பூக்கள் குளிர்ச்சியுண்டாக்கி, வெப்பம் உண்டாக்கி, உரமாக்கி ஆகிய பண்புகளைக் கொண்டது. பூவை குடிநீர் செய்து கொடுக்க இருமல், நீர் வேட்கை ,தீச்சுரம் ஆகியவை தீரும். காய்ந்த பூவை வதக்கி வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்கலாம். மார்புச்சளி, இருமல், இளைப்பு ஆகிய நோய்களுக்கு பாலுடன் அரைத்து கொடுக்கலாம். இதன் பட்டை எண்ணெய் கால் கடுவனைப் போக்கும் மற்றும் மண்டை கொதிப்பையும் தணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பருப்பை நசுக்கி வதக்கி ஒத்தடம் கொடுத்தால் வாயு பிடிப்பு நீங்கும். இலுப்பை எண்ணெயை சூடுபடுத்தி இடுப்பு வலிக்கு தேய்த்தால் வலி நீங்கும். உடலும் வலிமை பெறும். மூல உபத்திரவம் உள்ளவர்களுக்கு மலமிளக்கியாகவும் பயன்படும். கடுகு எண்ணெய் மற்றும் பசு நெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றை நீரிலிட்டு கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் போன்ற கலவையை நெஞ்சில் தடவினால் மார்புச்சளி, ஜலதோஷம், மார்பு வலி ஆகியவை குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு: இந்த மரத்திலிருந்து எடுக்கும் பாலை பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்குத் தடவலாம். இதன் கனியை உலர்த்தி பொடி செய்து 14 நாட்கள் நீரில் கலந்து குடித்தால் ஆஸ்துமா நோய் குணம் பெறும்.
ஆல்: இதன் பாலை பித்த வெடிப்புகளுக்குத் தடவலாம். இதன் வேர் பட்டையை நீரிலிட்டு பாலுடன் சேர்த்து குடித்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். இதன் விழுது நுனிகளை இஞ்சியுடன் அரைத்து எலும்பு முறிவுக்கு பூசுவார்கள்.
நுணா: இந்தக் காயை முறைப்படி புடம் போட்டு பொடித்து பல் துலக்கினால் பல் சொத்தை, பல் அரணை நீங்கும். காயை பிழிந்து சாறெடுத்து தொண்டையில் பூச தொண்டை நோய் நீங்கும். நுணா காய் ஊறுகாய் செய்து கற்பமுறையாக தினந்தோறும் உண்டால் எல்லா நோய்களும் நீங்கி உடல் வலுக்கும் என்று கூறுகிறது இதன் மருத்துவக் குறிப்பு.
இதுபோல் என்னற்ற மருத்துவப் பயன்கள் இதுபோன்ற மரங்களில் கிடைக்கும் இலை, வேர், பட்டை காய், கனி என்று அனைத்திலும் நிறைந்து இருக்கின்றன. இவற்றை தகுந்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் பயன் பெற்று இன்புறலாம்.