
‘வெயிலின் அருமை நிழலில் தெரியும்’ என்பார்கள். அப்படி நிழல் தருவதில் தன்னிகரற்று சில மரங்கள் விளங்குகின்றன. அதுபோன்ற மரங்களை நிழலுக்காக கல்விச்சாலை, சாலையோரம் மற்றும் வீடுகளில் வளர்ப்பது உண்டு. அவற்றைப் பற்றிய சில குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
பூவரசு: பூவரசு என்ற உடன் ‘பூவரசம் பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு’ என்ற பாடலும், அதன் இலைகளில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவதும்தான் பலரது நினைவிற்கு வரும். இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் மியான்மர், மலேசியா, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன. பூவரசு மிகப்பெரிய பசுமை மாறா மரமாகும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், மணி வடிவத்திலும் பூத்து ஒரு அலங்கார மரமாகவும், நிழல் தரும் மரமாகவும் பயன் அளிக்கிறது. இதன் காய்கள் சிறிய பம்பரம் போல் காட்சியளித்து சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருளாகப் பயன்படுகிறது. இதன் பூக்கும் மற்றும் இலையின் தன்மையை கருத்தில் கொண்டு பூவரசு மரங்கள், பெரிய பூங்காக்களிலும், சாலையோரங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் நிழலுக்காக வளர்க்கப்படுகின்றன.
இம்மரம், மரச் சாமான்கள் செய்வதற்கும், இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், வேரிலிருந்து கிடைக்கும் கசாயம் மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. பூவரசு மரத்தினை விதை மற்றும் குச்சிகள் மூலம் நட்டு பயன்படுத்தலாம். அனைத்து வகையான மண் வகைகளிலும், குறிப்பாக உவர் மற்றும் களர் நிலங்களுக்கு ஏற்றதாக இருப்பதால் கடற்கரைப் பகுதிகளில் இம்மரங்களை நிழலுக்காக மட்டுமின்றி காற்று தடுப்பானாகவும் நட்டு பயன்படுத்தப்படுகிறது.
வேம்பு: இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயற்கையாகவே வளரும் தன்மை கொண்ட மரம் வேம்பு. இம்மரம் நடுத்தர மற்றும் மிகவும் உயரமாக வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் இளம்பச்சை நிறத்திலும், பூக்கள் சிறியதாகவும், வெளிர் மஞ்சள் நிறத்திலும், நறுமணம் கொடுக்கும் தன்மை கொண்டுள்ளதால் அனைவராலும் இது விரும்பப்படக்கூடிய மரமாகும். இம்மரத்தில் இலைகள் அதிகளவு உள்ளதால் ஒளிச்சேர்க்கையின் மூலம் அதிக அளவு கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியேற்றுகின்றன. ஆகையால், சாலையோரங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், தொழிற்சாலை நிறைந்த பகுதிகளிலும், பூங்காக்களிலும், தரிசு நிலங்களிலும் நடப்படுகின்றன. இம்மரத்தின் அனைத்து பாகங்களும் நல்ல பயனைத் தருவதால் நிழலுக்காக மட்டுமின்றி, மனிதப் பயன்பாட்டிற்காகவும் இம்மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.
இம்மரத்தின் தடிகள் மரச்சாமான்கள் செய்வதற்கும், விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் சோப்பு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பதற்கும், இதன் புண்ணாக்கு மிகச்சிறந்த இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. வேப்ப மரங்களை விதைகள் மூலம் உற்பத்தி செய்து பயன் பெறலாம்.
முள் முருங்கை: இது வேகமாக வளரக்கூடிய மிகச் சிறிய மரமாகும். இதன் கிளைகள் மிக அடர்த்தியாகவும், மரத்தண்டுகள் மென்மையான பட்டைகளையும் கொண்டு இருக்கும். முள்முருங்கை மரத்தின் காய்கள் 6 முதல் 12 அங்குலம் வரை வளரக்கூடியது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இம்மரம் இலையுதிர்த்து பூக்கத் தொடங்கிவிடும்.
இம்மரத்தின் பூக்கள் மிக அழகாக இருப்பதால் கல்வி நிறுவனங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் அதிக அளவு வளர்க்கப்பட்டு வருகிறது. இம்மரத்தின் தண்டுகள் தீக்குச்சி உற்பத்திக்கும், பெட்டிகள் செய்வதற்கும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. முள் முருங்கை மரத்தினை விதை மூலமாகவும், குச்சிகள் மூலமாகவும் நட்டு பயன் பெறலாம்.
புங்கம்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட புங்க மரம் மிக உயரமாகவும், அகலமாகவும் மிகவும் அதிகமான இலைகளைக் கொண்ட மரமாகும். இம்மரத்தின் பூக்கள் ஊதா கலந்த வெள்ளை நிறத்தில் ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும் தன்மை உடையது. இம்மரம் ஆண்டு முழுவதும் இலைகளைக் கொண்டிருப்பதால் வெப்பத்தினை தணித்து நல்ல நிழல் கொடுக்கும் தன்மை உடையது.
இம்மரத்தின் இலைகள் பசுந்தாள் உரமாகவும், விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய் உயிரி எரிபொருள் உற்பத்திக்கும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது. விதைகள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் வளர்க்கப்பட்டு நிழலுக்காகவும், அலங்காரத்திற்காகவும், சாலை ஓரங்களிலும், கல்லூரி நிறுவனங்களிலும் மற்றும் தரிசாக உள்ள பொது நிலங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.