
விருந்தோம்பல் என்பது நமது பாரம்பரியம்! விருந்துக்குச் சென்றாலும் சரி, விருந்து அளித்தாலும் சரி, இரண்டையுமே இங்கிதம் அறிந்து செயல்படுத்துபவர்கள் நாம். அப்படிச் செயல்படுத்துவதற்கான அறிவுரைகளையும் நம் இலக்கியங்கள் அதிகமாகவே பேசுகின்றன.
”வந்த விருந்தினரைத் திருப்தியுறச் செய்து வழியனுப்பி விட்டு, வரப்போகும் விருந்தினருக்காகப் பிரியமுடன் காத்திருப்பவர்கள் நம் நாட்டினர்! அவ்வாறு செய்பவர்கள் வானுலகில் தேவர்களின் விருந்தினர்களாக மிளிர்வார்களாம்!”
இது நான் சொன்னது இல்லைங்க; நம் தெய்வப் புலவர் சொல்லி வைச்சது!
விருந்தினர்கள் வந்தாலே வீட்டிலுள்ள சின்னஞ்சிறுசுகளுக்கு ஒரே குதூகலந்தான்! அதிலும் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விட்டதும், ஊரில் கோயில் திருவிழாக்கள் ஆரம்பித்து விட்டால், சொந்த பந்தம் என்று வீடுகள் உறவினர்களின் வருகையால் உற்சாகத்தில் மிதக்கும்!
வருகின்ற விருந்தினர்கள் கையை வீசிக்கொண்டு வர மாட்டார்கள்! வீட்டிலுள்ள பெரியவர்கள், சிறியவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானவற்றை வாங்கிக் கொண்டே வருவார்கள். எனது சின்ன வயதில் எங்கள் வீட்டிற்கு, கோடையில் வேலு மாமா வருவார். தலையில் சும்மாடு கட்டி அதில் பெரிதான ஒரு வெள்ளரிப் பழத்தை வைத்துக் கொண்டும், கையிலுள்ள சாக்குப் பையில் பச்சைக் காய்கறிகளையும் சுமந்து கொண்டு வருவார். அந்த வெள்ளரிப் பழமோ வெடிக்கும் பக்குவத்தில் இருக்கும்.
வெடித்த வெள்ளரிப் பழத்தில் நாட்டுச் சர்க்கரையையோ, சீனியையோ தூவி சாப்பிட்டால்… அப்பப்பா! அரை நூற்றாண்டுக்குப் பிறகும் நாவில் எச்சில் ஊறுவதைத் தடுக்க முடியவில்லை. இன்னமும் வேலு மாமா தலையில் வெள்ளரிப்பழத்துடன் மனதுள் குடி கொண்டிருக்கிறார்!
எதிர்பார்த்திருந்த விருந்தினர்கள் வந்தால் உற்சாகந்தான். சில சமயங்களில் எதிர் பாராத விருந்தினர்கள் வந்து விடுவதுமுண்டு. அப்படி ஓர் எதிர்பாராத விருந்தினர் திடீரென்று வந்து விட்டால்… அதுவும் நள்ளிரவில் வந்தால்… என்ன நடக்கும்?
குஜராத் மாநில அம்ரேலி மாவட்டத்தின் கோவயா கிராமத்தில் வசிக்கிறது மலுபாய் ராம்பாய் லக்கனோட்ரா குடும்பம். மூன்று நான்கு நாட்களுக்கு முந்தைய இரவு எப்பொழுதும் போலவே டின்னரை முடித்து விட்டு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அவர்கள் மட்டுமல்ல கிராமமே உறங்கி விட்ட நடுநிசி.
அந்த நேரத்தில்தான் அந்த எதிர்பாராத விருந்தாளி வந்து வீட்டை எட்டிப் பார்த்துள்ளார்! கதவைத் தட்டியோ, திறந்தோ வரவில்லை அவர். கூரையில் இருந்த ஓட்டை வழியாகத் தலையை உள்ளே நுழைத்து சமையல் அறையை நோட்டம் விட்டிருக்கிறார். பாவம்! வந்த விருந்தாளிக்குப் பயங்கர பசி போலும். வழக்கத்திற்கு மாறான சவுண்டைக் கேட்டு விழித்துக் கொண்ட மலுபாய் குடும்பத்தினர் எழுந்து பார்க்க, சிங்க ராஜா சிரித்த முகத்துடன் அவர்களை நோக்கி இருக்கிறார்.
அவ்வளவுதான்! அனைவரும் துண்டைக் காணோம்... துணியைக் காணோம்! என்று அரைத் தூக்கத்தில் ஆலாய்ப் பறந்திருக்கிறார்கள். கிராமத்தாரையும் எழுப்பிக் கொண்டு வர, ஒருவர் ப்ளாஷ் லைட்டை ராஜாவின் முகத்தில் அடிக்க, அவர் ஒளிரும் கண்களுடன் கூட்டத்தாரைப் பார்த்து உறுமியிருக்கிறார். சுமார் 2 மணி நேரத் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, எதிர்பாரா விருந்தினர் வேறு வழியின்றி, எதுவும் கிடைக்காமல், திரும்பிச் சென்றிருக்கிறார்.
அந்த ஊருக்குக் காட்டு ராஜா அடிக்கடி விசிட் அடிப்பாராம். கடந்த பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள், பாவ் நகர் - சோம்நாத் ஹைவேயில் அவர் பிரசன்னமாக, ட்ராபிக்கே ஸ்தம்பித்து விட்டதாம்! பக்கத்திலுள்ள பாலத்தை அவர் கடக்க ஏதுவாக, நெடுஞ்சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் இரு புறமும் அணி வகுத்து விட்டனவாம்! சுமார் 15 நிமிடங்கள் ஆயினவாம் ஃபாரஸ்ட் கிங் பாலத்தைக் கடக்க!
நாம் விலங்குகளைப் பார்க்க உயிரியல் பூங்காக்களை நாடிச் செல்கிறோம். சில சமயங்களில் அவர்களே நம்மை வீடு தேடி வருவது எதிர்பாராததே!
மீடியாக்கள் இவற்றைச் செய்திகளாக்கி நமக்குத் தெரிவித்து விடுகின்றன. நாமும் படித்து விட்டோ, பார்த்து விட்டோ எளிதாகக் கடந்து விடுகிறோம். அந்த இரவில் மலுபாய் குடும்பம் எவ்வளவு துயரையும், வலியையும் அனுபவித்திருப்பார்கள்? ஒரு சுதந்திர நாட்டில் இரவில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை என்பது எவ்வளவு மோசமான ஒரு நிலை. கண்டிக்கத் தவறுவது பத்திரிகைகளும் ஊடகங்களும் மட்டுமல்ல; நாமும்தான்! அரசுகளும் வனத்துறையும் வெட்கப்பட வேண்டிய செயல் அல்லவா இது?