
திருப்பதி ஏழுமலையான் கோவில் :
ஆந்திர மாநிலம் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வெங்கடாஜலபதி, வேங்கடேசன், வேங்கடேசுவரன், கோவிந்தன், சீனிவாசன், பாலாஜி என பல பெயர்களில் அழைக்கின்றனர். தாயார் பத்மாவதி அம்மையார். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோவிலாக திருப்பதி திருத்தலம் உள்ளது.
வைணவத்தில் மிகவும் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றான இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்ய வருகிறார்கள்.
வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது.
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் உற்சவங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் ஏப்ரல் 6-ந்தேதி பிரமாண்ட ராம நவமி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று காலை 9 முதல் 11 மணிக்குள் ரங்கநாயக்கர் மண்டபத்தில் உள்ள உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை ஹனுமந்த வாகன சேவை நடக்கிறது. அதன் பிறகு இரவு 9 முதல் 10 மணி வரை தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடக்கிறது.
7-ந்தேதி இரவு 8 முதல் 9 மணி வரை ராமர் பட்டாபிஷேகம் மற்றும் ஆஸ்தானமும், 8-ந்தேதி சர்வ ஏகாதசி வழிபாடும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 10-ம்தேதி முதல் 12-ந்தேதி வரை வசந்த உற்சவமும், 12-ந்தேதி தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவமும், சித்ரா பவுர்ணமி கருடசேவையும் நடைபெறுகிறது. ஏப்ரல் 23-ந்தேதி பாஷ்யங்கார்ல உற்சவம் தொடங்குகிறது. வரும் 24-ந்தேதி மதத்ரய ஏகாதசியும், 30-ந்தேதி பரசுராம ஜெயந்தியும், பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரமும், அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் :
ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் திருப்பதி நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்து வைணவக் கோயிலாகும்.
12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் கி.பி 1130 ஆம் ஆண்டு ராமானுஜரால் தென்கலை வைகானச மரபுகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இருப்பினும், கோயில் வளாகத்திற்குள் 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டமைப்புகள் உள்ளன.
இந்த கோவில் கோவிந்தராஜ சுவாமி என்று குறிப்பிடப்படும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தெய்வம் சாய்ந்த யோக நித்ரா நிலையில் கிழக்கு நோக்கி, வலது கையை தலையின் கீழ் வைத்து, இடது கையை நேராக உடலின் மீது வைத்துள்ளார். விஷ்ணுவின் மனைவியர்களான ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அவரது காலடியில் அமர்ந்துள்ளனர். இந்தக் கோவில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானங்களால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் வைகானச தென்கலை வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறது.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஏப்ரல் மாதம் நடக்கும் உற்சவங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 6-ந்தேதி ராமநவமியையொட்டி மாலை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத பட்டாபிராமசாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ந்தேதி பவுர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
18-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஆண்டாள் தாயார் ஊர்வலம் நடைபெற உள்ளது. 22-ந்தேதி சிரவண நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 23-ம்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பாஷ்யங்கார்ல உற்சவம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.