
நவீன வரலாற்றில் முதல் முறையாக ஒரு நாட்டின் தலைநகரம் தண்ணீர் பற்றாக்குறையினால் வறண்டு போய் உள்ளது. பண்டைய பாரதத்தின் ஒரு பகுதியாக இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலுக்குதான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. காபூலை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் வீதி வீதியாக தண்ணீரைத் தேடி அலைகிறார்கள்.
தங்களது வேலைகளைத் துறந்து தண்ணீர் லாரிகள் எப்போது வரும் என்று ஆண்கள் காலி தண்ணீர் கேன்களுடன் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். தண்ணீர் லாரி வந்ததும் முண்டியடித்துக் கொண்டு தண்ணீரை நிரப்பிச் செல்கின்றனர். ஒவ்வொரு கேன் தண்ணீரும் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. அரசாங்கம் தண்ணீர் விநியோகத்தைப் பற்றி கவலைப்படுவது இல்லை. தனியார் வாகனங்களில் தண்ணீர் விற்கப்படுகிறது. மிகவும் வறுமையில் வாடும் நாடான ஆப்கானிஸ்தானில் அவர்கள் தண்ணீருக்கு மிகவும் அதிகப்படியான பணத்தினை செலவு செய்ய வேண்டி உள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆப்கான் தலைநகரம் பேரழிவை நோக்கிச் செல்வதாக மெர்சி கார்ப்ஸ் என்ற தனியார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காபூல் விரைவில் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டுபோய், நவீன உலகின் முதல் வறண்ட தலைநகராக மாறக்கூடும் என்று கூறியுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சம் ஏற்கெனவே வீழ்ந்துபோயுள்ள பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றம், தலைநகரில் குவிந்துள்ள மக்கள் தொகை, தொடர்ச்சியான எண்ணெய் எடுப்பு ஆகியவை நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. ஏற்கெனவே காபூலில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போயுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
30 வருடங்களுக்கு முன்பு காபூலில் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. 2001ம் ஆண்டு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும், காபூலில் வளர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் தாலிபான்களின் தொல்லையினால் , பாதுகாப்பிற்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்கள் தலைநகருக்கு குடி பெயர்ந்தனர். அதனால் காபூலில் மக்கள் தொகை அதிகரித்து தண்ணீருக்கான தேவையும் அதிகரித்தது.
ஹிந்து குஷ் மலைகளிலிருந்து பனிப்பாறைகளில் உருகி வரும் தண்ணீர், ஒவ்வொரு ஆண்டும் 44 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் மட்டத்தை நிரப்புகிறது. சரியான நீர் மேலாண்மை இல்லாததாலும் அதிகப்படியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டதாலும், கடந்த பத்தாண்டு காலத்தில் முன்பு இருந்ததை விட 30 மீட்டருக்கும் கீழே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
முன்பு நகரில் உள்ள பெரிய மசூதிகளின் தண்ணீர் கிணறுகள்தான் மக்களின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்தது. தற்போது மசூதிகளில் நசுங்கிய காலி கேன்களுடன் ஆப்கானியர் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். சிலர் பல மாதங்களாக வாயையும் வயிற்றையும் கட்டி பணம் சேர்த்து வீட்டுக்கு அருகில் ஆழ்துளை கிணறுகளை தோண்டுகிறார்கள். சில இடங்களில் 120 மீட்டர் ஆழம் வரை தோண்டியும் நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. மாசுபாடு நிறைந்த தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டியுள்ளது.
தண்ணீருக்கு நீண்ட நேரம் காத்திருப்பதால் பல ஆப்கானியர் வேலை இழந்துள்ளனர். பல சிறுவர்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்த்து காத்திருப்பதால் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. பெண்கள் மற்றும் சிறுமியர் வீட்டை விட்டு வெளியே செல்ல கடுமையான கட்டுப்பாடு உள்ளதால் தண்ணீர் தேட அவர்கள் மறைந்து ஒளிந்து மலையேறுகின்றனர். ஒருவேளை இவர்கள் யார் கண்ணில் பட்டாலும் துன்புறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம். தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2030ம் ஆண்டுக்குள் காபூலில் நிலத்தடி நீர் வற்றிவிடும் என்று யுனிசெஃப் கணித்துள்ளது.