
விளா மரம் மணமுள்ள சிறகுக் கூட்டிலைகளையும் ஓடுள்ள நறுமணம் மிக்க சதை கனிகளையும் உடைய முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். தமிழகமெங்கும் கனிகளுக்காகத் தோட்டங்களில் இது வளர்க்கப்படுகிறது. கருவிளம் என்றும் இது குறிப்பிடப்படுகிறது. கருவிளங்காய், கருவிளங்கனி, கருவிளமரம் என்றும் இதனைக் கூறுவர். பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் விளா மரத்தின் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
விளா மரத்தின் பயன்பாடுகள்:
விளா மரத்து இலை: விளா மர இலைக்கு பசியை உண்டாக்கும் தன்மை உண்டு. அதேபோல், வாயுவை நீக்கும் பண்பும் உண்டு. அதன் கொழுந்து இலையைக் கசக்கி அந்தச் சாறை பால் அல்லது தயிருடன், கற்கண்டு பொடி சேர்த்து உட்கொண்டால் அழல் நீங்கிவிடும். கொழுந்தை குடிநீர் செய்து குடித்தால் வாயு நீங்கி, பசியை உண்டாக்கும். கோடையில் வேர்க்குருவின் மேல் அந்த இலையின் சாற்றைத் தடவினால் வேர்க்குரு மறையும். அதன் சாற்றில் சிறிதளவு பாலும் சர்க்கரையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளின் வயிற்று உபாதைகள் மற்றும் பித்தம் நீங்கும்.
காய்: விளாங்காயை பச்சடி செய்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் உள்ளழலையை நீக்கும். அந்தக் காயின் தோலை நீக்கி விட்டு சதைப்பற்றை சாப்பிட்டால் வயிற்றை சுத்தப்படுத்தும். வயிற்றுப்போக்குக்கு இது நல்ல மருந்து. துவையல் செய்து சாப்பிட்டாலும் நல்லது.
பழம்: விளாம்பழம் நல்ல மணமூட்டியாகவும், குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உடையதாகவும் இருக்கிறது. ஆதலால், அந்தப் பழத்தை சாப்பிட்டால் தொண்டைப் புண், பல் ஈறுகளில் உண்டாகும் புண் ஆகியவற்றை குணப்படுத்தலாம். உடலுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும். பித்த நோய்களையும் போக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வைட்டமின் சி பற்றாக்குறையை இது நீக்கும்.
குழந்தைகளின் பசியைத் தூண்டுவதாகவும், உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கும் இந்தப் பழம் பயன்படுகிறது. இந்தப் பழத்தை எருமை மோரில் வேக வைத்து, தயிரில் கலந்து அருந்தினால் நீரிழிவு குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இருமல், இரைப்பு, நீர் வேட்கை, கண்டபடி பிதற்றுகின்ற வெறி நோய் போன்றவற்றையும் போக்கும் தன்மை விளாம்பழத்திற்கு உண்டு. ஆனால், அதை நன்கு விவரம் அறிந்த சித்த மருத்துவரின் உதவியுடன் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
பிசின்: விளாம்பழத்தின் பிசினை வாயில் அடக்கி, அதன் சாற்றை விழுங்கினால் வறட்டு இருமல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை நீங்கும்.