
உலகில் சில வகை உயிரினங்கள் பிறவியிலேயே பற்கள் இல்லாமல் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட 10 வகை உயிரினங்கள் மற்றும் பற்களின்றி அவற்றின் வாழ்வியல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஜயன்ட் ஆன்ட்ஈட்டர் (Giant Anteater): இந்த விலங்கு மத்திய மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் வாழ்ந்து வருகிறது. எறும்புகளும் கரையான்களும் இதன் உணவாகும். ஜயன்ட் ஆன்ட்ஈட்டரின் நாக்கு சுமார் இரண்டு அடி நீளம் கொண்டது. பிசின் போன்று ஒட்டும் தன்மையுடைய நாக்கை ஒரு நிமிடத்திற்கு 150 முறை வெளியே நீட்டி உள்ளே இழுத்துக்கொள்ளும். இதற்கு சுத்தமாக பற்களே கிடையாது. அதற்குப் பதில் தசைகளாலான இதன் வயிறு உணவை அரைத்து ஜீரணமாகச் செய்துவிடும். உணவை அரைப்பதற்கு உதவியாக அவ்வப்போது சிறு கற்களையும் மணலையும் விழுங்கிக்கொள்ளும். ஒரு நாளில் சுமார் 30,000 பூச்சிகளைக் கூட விழுங்கும் திறமை கொண்டது.
2. ஆமை (Turtle): உலகின் எல்லாப் பகுதியிலும், நீரிலும் நிலத்திலும் வாழ்வது ஆமை. அது சார்ந்த இனத்தைப் பொறுத்து, வெஜிட்டேரியன், நான்-வெஜிட்டேரியன் மற்றும் இரண்டு வகைகளையும் உண்ணக்கூடியவைகளாக இருக்கும் ஆமைகள். ஆமைகளுக்கு, பற்களுக்குப் பதில் கூர்மையான அலகு போன்ற அமைப்பு வாயில் உண்டு. அதைக் கொண்டு உணவை உடைத்து, நசுக்கி கிழித்து உட்கொண்டுவிடும். நீர்வாழ் ஆமைகள் மீன் மற்றும் பூச்சிகளை சப்பி, உறிஞ்சி விழுங்கிவிடும். ஸ்னாப்பிங் டர்டில் போன்றவற்றிற்கு வலுவான தாடை உண்டு. அதைக் கொண்டு எலும்புகளை உடைத்துவிடும்.
3. பறவைகள்: பறவைகள் உலகம் முழுக்க வாழ்கின்றன. இவை பூச்சிகள், மீன், தேன், மாமிசம் போன்றவற்றை உட்கொள்ளும். இவற்றின் அலகு உணவுப் பழக்கத்திற்கு ஏற்றவாறு தனித்துவம் கொண்டு அமைந்திருக்கும். ஹம்மிங் பேர்ட் தேன் குடிக்க ஏற்றபடி நீண்ட அலகு வைத்திருக்கும். பருந்து உணவை கிழிப்பதற்கு ஏதுவாக வளைந்த அலகு பெற்றிருக்கும். எலி, தவளை போன்றவற்றை கிழித்து அப்படியே விழுங்கிவிடும். அவ்வப்போது விழுங்கும் கற்கள் மற்றும் வயிற்று தசைகளும் உணவை அரைக்கப் பயன்படும்.
4. பாம்புகள்: அண்டார்டிக்கா தவிர, உலகின் எல்லா பகுதிகளிலும் பாம்புகள் வசிக்கின்றன. பாம்பு, பூச்சிகள், கொறித்துண்ணி, முட்டை, தவளை, சிறு பறவை போன்றவற்றை உண்டு வாழும். விரிந்து கொடுக்கும் தன்மை கொண்ட தாடைகளை உபயோகித்து, எவ்வளவு பெரிய உணவாயினும் அப்படியே விழுங்கிவிடும். மலைப் பாம்பு அதன் தலையைப் போல ஐந்து மடங்கு பெரிய விலங்கையும் விழுங்கிவிடும்.
5. பென்குயின்: பென்குயின், மீன், ஸ்குயிட் (Squid), கிரில் (Krill) போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும். பென்குயினுக்குப் பற்கள் கிடையாது. நாக்கு மற்றும் வாயின் உள்பக்க மேற்பகுதியில் வரிசையாக வளர்ந்திருக்கும் முதுகெலும்பையும் பயன்படுத்தி வாயில் வைத்திருக்கும் மீன் நழுவி விடாமல் பாதுகாத்து விழுங்கிவிடும்.
6. ஸீ ஹார்ஸ் (Sea Horse): ஸீ ஹார்ஸ் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒட்டு மீன்கள் மற்றும் கடலின் அலை மீது மிதந்து கொண்டிருக்கும் சிறு சிறு உயிரினங்களை உட்கொண்டு வாழும். இதற்கு பல்லும் கிடையாது, வயிறும் கிடையாது. முகத்திலிருக்கும் நீண்ட மூக்கு போன்ற அமைப்பை பயன்படுத்தி இரையைப் பிடித்திழுத்து அங்கேயே ஜீரணமாக்கிக்கொள்ளும். இரைப்பை என்று ஒன்று இல்லாதலால், ஒரு நாளில் சுமார் 3000 முறை இரை பிடித்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
7. ஆக்டோபஸ்: உலகமெங்குமுள்ள கடல்களில் இது வாழ்கிறது. கடலில் வாழும் நண்டு, மீன் மற்றும் மட்டி (Clam) போன்ற உயிரினங்களை உட்கொண்டு வாழ்கிறது ஆக்டோபஸ். இதற்கு பற்கள் கிடையாது. அதற்கு பதில் வலுவான, கூர்மையான அலகு உள்ளது. இந்த அலகு 'கைட்டின்' (Chitin) எனப்படும் புற வன் கூட்டுப்பொருளால் ஆன ஒரே ஒரு கடினமான பகுதியாகும். ஒரு வகை ஆக்டோபஸ், இரையைப் பிடிக்கும் முன், அதன் மீது விஷத்தை செலுத்தி அதை செயலிழக்கச் செய்துவிட்டு, பின் அதை நசுக்கி கசக்கி முழுங்கிவிடும்.
8. பேரட் ஃபிஷ் (Parrotfish): இது வெப்ப மண்டலக் கடல்களில் உள்ள பவளப் பாறைகள் மீது வாழும் ஒரு வகை மீன். பவளங்கள் மீது படிந்திருக்கும் பாசி (Algae)யைப் பிரித்தெடுத்து பவளத் துண்டுகள் மற்றும் கற்களோடு சேர்த்து, தனது தொண்டைப் பகுதியில் உள்ள பிளேட் போன்ற அமைப்பு கொண்ட தாடைகளால் அரைத்து விழுங்கிவிடும். நொறுங்கிய பவளப் பவுடரும் மற்றும் மணலும் கழிவுகளாக வெளிவரும். இவ்வாறு, ஒரு வருடத்தில், ஒரு பேரட் ஃபிஷ் மூலம் வெளியேற்றப்படும் மணல் நூற்றுக்கணக்கான பவுண்ட் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
9. பட்டாம்பூச்சி (Butterfly): பட்டாம்பூச்சி உலகெங்கும் காணப்படுகிறது. இது பூவிலுள்ள தேன், மரச்சாறு (Tree sap), அழுகிய பழம் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இதற்கு பற்களோ, தாடைகளோ கிடையாது. அதற்குப் பதில் சுருள் வடிவில் ஸ்ட்ரா போன்ற ஓர் அமைப்பு (Proboscis) உள்ளது. அதன் வழியாக திரவ உணவுகளை உறிஞ்சிக்கொள்ளும். சில வகைப் பட்டாம்பூச்சிகள் குளம் குட்டைகளில் உள்ள மண்ணில் கலந்திருக்கும் கனிமச் சத்துக்களையும் உறிஞ்சிக் குடிக்கும் திறமை கொண்டிருக்கும். பட்டாம்பூச்சி தனது கால்கள் மூலம் உணவின் சுவையை அறிந்துகொள்ளும்.
10. இலையட்டை (Slug): தோட்டம், காடு, வயல்வெளி போன்ற ஈரப்பதமுள்ள இடங்களில் இது காணப்படும். அழுகிய இலை, பூஞ்சைகள், பாசி (Algae) போன்றவற்றை இது உணவாகக் கொள்ளும். இதற்குப் பற்கள் கிடையாது. அதற்குப் பதில் புற வன் கூட்டுப்பொருளால் ஆன ரடுலா (Radula) எனப்படும் ரிப்பன் போன்ற நாக்கு உண்டு. சில வகை இலையட்டைகளுக்கு ரடுலா மீது 27,000 நுட்பமான (Microscopic) பற்கள் போன்ற அமைப்பு உண்டு.