

மார்ச் மாத கோடை காலம் ஆரம்பித்துவிட்டது . கோடை காலம் தர்பூசணி பருவமாக இருக்கிறது. சாலையோரங்களில் செல்லும்பொழுதும், பழக்கடைகளிலும் தர்பூசணிகள் குவிக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதில் இளம் பச்சை நிறத்தில்' கோடிட்ட தர்பூசணியும்', அடர் பச்சை நிறத்தில் இருக்கும் 'டிஸ்கோ தர்பூசணி' என விற்பனைக்கு வைத்திருக்கின்றனர். இதில் எந்த வகை தர்பூசணியை யார் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
கோடிட்ட தர்பூசணி மற்றும் டிஸ்கோ தர்பூசணி இரண்டும் ஒரே வகையைச் சேர்ந்தது .இரண்டும் லைகோபீன் கொண்டவையாக இருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியையும் நீர்ச்சத்தையும் வழங்குகின்றன. கோடிட்ட தர்பூசணி வணிக ரீதியாக 'சிவப்பு வகை' என்றும் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் தர்பூசணி 'சர்க்கரை ராணி' என்றும்' கருப்பு தர்பூசணி' என்றும் அழைக்கப்படுகிறது.
இரண்டு வகை தர்பூசணிகளும் அதனுடைய சுவை, இனிப்பு மற்றும் தோல் தடிமன் அடிப்படையில் ஓரளவு வேறுபடுகின்றன. கோடிட்ட தர்பூசணியின் உட்புறம் இளஞ்சிவப்பு நிறத்தில் சாப்பிடுவதற்கு அதிக இனிப்பு இல்லாமல், மொறுமொறுப்பான உணர்வுடன் ஜூசியாக இருக்கும். அதிக இனிப்பு பிடிக்காதவர்களுக்கு இந்த தர்பூசணி சிறந்த தேர்வாகும். மேலும் தோல் தடிமனாக இருப்பதால் நீண்ட தூரம் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது.
அடர் தர்பூசணியின் தோல் மெலிதாக இருப்பதோடு, உட்புறம் சிவப்பு நிறமாக அதிக இனிப்பு சுவையுடன் மென்மையாக இருக்கும். சர்க்கரை ராணி என்று அழைக்கப்படும் பெயருக்கு ஏற்ப இனிப்பு சுவையை விரும்புவர்களுக்கு அடர் பச்சை நிற தர்பூசணி மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.
இருவகை தர்பூசணியிலும் லைகோபீன் எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் சரும பொலிவிற்கும் மிகவும் நல்லது. தர்பூசணியின் உட்புறம் உள்ள சதைப் பற்று அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் லைகோபீன் உள்ளடக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
தர்பூசணி 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நீர்ச் சத்து கொண்டுள்ளதால் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் தாகத்தை தணிக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டை குறைக்கவும் சிறந்தது. மேலும் இரு வகை தர்பூசணிகளும் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்வதோடு, அது எப்படியான ஆற்றலையும் வழங்குகிறது.
ஆகவே, இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறைவாக இனிப்பு சுவை விரும்புபவர்களை பொறுத்து கோடிட்ட தர்பூசணி, டிஸ்கோ தர்பூசணியை தேர்வு செய்து கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்து உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.