இவ்வுலகில் இருக்கும் தாவரங்களில், ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்த பல தாவரங்கள் இருக்கின்றன. அவற்றுள் இங்கு, இரண்டு இலை மட்டும் உள்ள மரம், பெரிய இலை கொண்ட தாவரம் என 2 தாவரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
தாவரவியலில் வெல்விட்சியா மிராபிலிஸ் (Welwitschia Mirabilis) என்று அழைக்கப்படும் நீட்டேசியீ (Gnetaceae) எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஒற்றைத் தாவர இனமுள்ள பேரினம், தன்னுடைய ஆயுட்காலம் முழுவதும் இரண்டு இலைகள் மட்டுமே கொண்டு வாழும் தாவரமாக இருக்கிறது. நமீபியாவிலும் அங்கோலாவிலும் அமையும் நமீபு பாலநில அச்சுறுத்தல் இனமாகும். நீட்டோபைட்டா பிரிவில் உயிர் வாழும் மூன்று பேரினங்களாக, வெல்விட்சியா, நீட்டம், எபெடிரா ஆகியன அமைகின்றன. இது பொதுவாக "உயிர்வாழும் தொல்லுயிர் எச்சம்" என வழங்குகிறது.
இம்மரம் மிகச் சிறிய மரமாகும். இது தரையிலிருந்து சிறிது மட்டுமே மேல் நோக்கி வளர்ந்து வரும் மரமாகும் . பார்ப்பதற்கு மிகவும் விந்தை மிகு தோற்றம் கொண்டுள்ளது. தண்டுப்பகுதி சில சமயங்களில் 14 அடி சுற்றளவு கொண்டிருக்கும். இவற்றிலிருந்து இரண்டு இலைகள் மட்டுமே வளர்ந்து இருக்கும். இவ்விலைகள் 20 அடி (6.5மீ) நீளத்திற்கும், 20 செ.மீ அகலத்திற்கும் இருக்கும். இவை, தரையை ஒட்டியேக் கிடக்கும். இவ்விலைகள் சதைப்பற்றுடனும், தோல் வார் போன்று தடிப்பாகவும் இருக்கும். இலையின் நுனி இரண்டாக பிளவுபட்டு இருக்கும்.
மரத்தின் நடுவிலிருந்து பெண் கூம்பு மலர்கள் 5 செ.மீ. நீளத்திற்கு பச்சை நிறத்துடனும், ஆண் கூம்பு மலர்கள் 3 செ.மீ. நீளத்திற்கு பழுப்பு நிறத்துடனும் இருக்கும். இதன் வேர் 200 அடிகள் வரை நீண்டுக் காணப்படும். இம்மரம் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறது. இத்தாவரம் இருக்கும் இடங்களில் ஆண்டுக்கு, ஏறத்தாழ ஓர் அங்குலத்திற்கும் குறைவான மழையேப் பொழிகிறது.
இம்மரம் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பாலைவனப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இவற்றின் இலைகளில் பனித்துளி இரவில் தனித்துக் காணப்படுகிறது. இவற்றின் இலைகளில், பனித்துளி இரவு நேரங்களில் படிவதால் சில உயிரினங்கள் இங்கு குடியேறுகின்றன.
விக்டோரியா நீர் அல்லி இனத்தாவரங்களில் ஒன்றாக, விக்டோரியா அமோசானிகா எனும் தாவரப் பெயர் கொண்ட தாவரமாகும். இதன் மலரானது, தென்னமெரிக்காவின் கரிபியன் நாடான கயானாவின் தேசியமலர் ஆகும். உலகிலேயே பெரிய இலைகளை உடையதாக உள்ளது. நன்கு வளர்ந்த இதன் இலையானது, 3 மீட்டர் / பத்து அடிகள் வரை இருக்கும். நன்கு வளர்ந்த இலையானது, 40-45 கிலோகிராம் எடையைத் தாங்கும் இயல்புடையதாகும். இந்தியாவிலுள்ள கல்கத்தா நகரில் இருக்கும் தாவரவியல் பூங்காவின் ஏரிகளில் ஒன்றான, 'லேராம்' ஏரியில் இவ்வினம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.