
பொதுவாக பறவைகள் மனிதர்களைக் கண்டால் அருகில் வர அஞ்சும். தினமும் காக்கைக்கு சாதம் வைத்தாலும், வழக்கமாக வரும் காகம் சற்று தூர இருந்தே மனிதர்களை பார்த்து, அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னரே சாதத்தை எடுக்க வரும். ஆனால் புறாக்கள் அப்படியல்ல. அவை மனிதர்களோடு சற்றே நெருக்கமாக பழகக்கூடியவை. அது ஏன் என்பதற்காக காரணங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நகரங்களில் புறாக்கூட்டம்;
புறாக்கள் வட இந்திய நகரங்களிலும், பல்வேறு நகர்ப்புற அமைப்புகளிலும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் மக்களோடு நெருக்கமாக பழகுகின்றன. டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் செங்கோட்டை போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக புறாக்களைப் பார்க்கலாம்.
லோதி கார்டன் மற்றும் நேரு பூங்கா போன்ற பகுதிகளில் புறாக்களைப் பார்க்கலாம். அதேபோல ஜெய்ப்பூரில் உள்ள நகர அரண்மனை மற்றும் பிற மைய இடங்களிலும் பெரும்பாலும் நிறைய புறாக்களை பார்க்க முடிகிறது. குடியிருப்பு பகுதிகளில் கூட புறாக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதேபோல அமிர்த சரசில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் ஏராளமான புறாக்கள் காணப்படுகின்றன.
பண்டையைக் காலங்களில் புறாக்களின் நிலை;
புறாக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ப்புப் பறவைகளாக உள்ளன. ஆரம்பத்தில் அவைகள் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் தூது அனுப்பவும் பயன்படுத்தப்பட்டன. எகிப்தியர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களில் புறாக்களை அவற்றின் வேகம் மற்றும் விசுவாசத்திற்காக பயன்படுத்தினர்.
அவை நீண்ட தூரம் செய்திகளை எடுத்துச் செல்ல பயன்பட்டன. 19 ஆம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல கலாச்சாரங்களில் புறா பந்தயம் ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியது. இன்றும் புறாக்கள் செல்ல பிராணிகளாகப் போற்றப்படுகின்றன.
புறாக்கள் மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருப்பதன் காரணங்கள்;
1. உணவு;
புறாக்கள் பெரும்பாலும் நகர்ப்புற சூழல்களில் ஏராளமான குப்பைகளை கண்டறிகின்றன. அங்கு மக்கள் அவைகளுக்கு உணவளிக்கிறார்கள் அல்லது உணவுக்கழிவுகளை அவை உண்கின்றன.
2. கூடு கட்டுவதற்கான வாய்ப்புகள்;
கட்டிடங்கள் மற்றும் பிற மனித கட்டமைப்புகள் புறாக்கள் வீடு கட்டுவதற்கு வசதியான இடங்களை வழங்குகின்றன. தங்களை வேட்டையாடுபவர்கள் இடமிருந்து பாதுகாப்பதற்காக புறாக்கள் அவற்றில் கூடுகட்டிக் கொள்கின்றன. மனிதர்களுக்கு அருகாமையில் அவை பாதுகாப்பாக உணர்கின்றன.
3. சமூக நடத்தை;
புறாக்கள் இயற்கையாகவே சமூகப்பறவைகள் மற்றும் குழுக்களாக வளர்கின்றன. மனிதர்களைச்சுற்றி கூடுவதும் அவர்களோடு சமூக தொடர்பு கொள்வதும் அவர்களுக்கு எளிதாக இருக்கின்றன.
4. பொருந்தக்கூடிய தன்மை;
புறாக்கள் மிகவும் தகவமைக்கக்கூடிய உயிரினங்கள். பல்வேறு சூழல்களில் குறிப்பாக அவை நிலையான வளங்களை கண்டறிந்து செழித்து வளரக்கூடிய இயல்புடையவை.
5. உணர்ச்சிப் பிணைப்பு மற்றும் சமூக நுண்ணறிவு;
புறாக்கள் அதிகளவு உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் சமூக நடத்தையை வெளிப்படுத்துகின்றன. அவை தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு காலப் போக்கில் அவற்றை நினைவில் வைத்துக் கொள்கின்றன. மனித முகங்களை அடையாளம் காண்பது மட்டுமின்றி தனி நபர்களுடனான கடந்த கால தொடர்புகளையும் அவை நினைவில் வைத்திருக்கும்.
அவற்றை யார் மோசமாக நடத்தினார்கள், அல்லது யார் நன்றாக நடத்தினார்கள் என்பதை அவற்றால் நினைவு கூறமுடியும். இந்த பிணைப்புகளை உருவாக்கும் திறன் மனிதர்களின் அன்பான நடத்தைகள் போன்றவற்றால் நெருக்கமான தொடர்புகளை உண்டாக்குகின்றன.