சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.
அதனாலேயே நகரின் பெயரைத் தழுவியே ’ராம்சர் சாசனம்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோள் ஆகும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ராம்சர் அடையாளப்படுத்துகிறது. ஈரநிலங்களின் மேலாண்மையை சிறப்பாக பேணும் பட்சத்தில் ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படும்.
ஈர நிலங்களான சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம்:
சதுப்பு நிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர்களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும்.
நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உயரும் கடல் நீரை உள்வாங்க, மாசு மற்றும் திடக் கழிவுகளைக் கட்டுப்படுத்த, கரியமில வாயு மற்றும் மீத்தேனை உறிஞ்ச, நீர் மகரந்தச் சேர்க்கை நடைபெற, மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்த, மண் அரிப்பைத் தடுக்க, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்தைத் திடப்படுத்தி வளப்படுத்த, புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்த, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க, சதுப்புநிலங்களின் இருப்பு மிக முக்கியமானது.
இத்தகைய சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களால் பொருளாதாரம் உயர்ந்து மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அந்தவகையில் சதுப்பு நிலங்களை நாட்டின் 'மூலதனம்' என்று சொல்லலாம்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது.
சதுப்பு நிலங்களை காத்து சரித்திர சாதனை படைப்போம்.