
ஜென் பிரிவில் உள்ள முக்கியமான ஒரு அம்சம் ஜாஜென் (ZAZEN). அதாவது உள்ளார்ந்த தியானம். நாம் அனைவருமே ஞானோதயம் பெற்றவர்கள்தாம். ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் அதை அறிவதில்லை. ஒரு விழிப்புணர்ச்சியை ஊட்டி நம்மை ஞானோதயம் பெற்றவர்களே என்று அறியச் செய்யும் வழிதான் ஜாஜென். வெறும் வார்த்தைகளை நம்பாதே; நீயே உண்மையைக் கண்டுபிடி என்று கூறுகிறது ஜென் பிரிவு.
சந்திரனைப் பிடித்துக் கொண்டு வா!
ஒரு ஜென் மாஸ்டர் நாய் ஒன்றை வளர்த்தார். அந்த நாய் அவருடன் மாலை நேர நடைப் பயிற்சியின்போது கூடவே செல்வது வழக்கம்.
ஒரு குச்சியைத் தூக்கி மாஸ்டர் தூர எறிவார். அதை ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுத்து விட்டு அடுத்த விளையாட்டிற்காக அது காத்திருப்பது வழக்கம்.
ஒரு நாள் மாலையில் மாஸ்டரின் சீடன் ஒருவன் அந்த நடைப்பயிற்சியில் இணைந்தான். அவன் கூரிய புத்தி உடையவன்.
ஜென் பிரிவின் ஏராளமான புதிய புதிய வார்த்தைகள் அவனை வெகுவாகக் குழப்பின.
அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்ற மாஸ்டர், நீ எதற்கும் கவலைப்படாதே. வார்த்தைகள் உனக்கு வழியைக் காட்டும் வழிகாட்டிதான். அது உண்மையைக் காட்டும் வெறும் அடையாளமே தவிர, அதுவே உண்மை அல்ல” என்று கூறிவிட்டுத் தன் நாயின் பக்கம் திரும்பினார்.
தனது குச்சியைச் சந்திரனை நோக்கிக் காட்டினார்.
பின்னர் தனது நாயைப் பார்த்து, சந்திரனைப் பிடித்துக் கொண்டு வா” என்றார். நாய் குச்சியின் நுனியையே பார்த்தவாறு நின்றது.
தன் சீடனிடம், நாய் இப்போது எதைப் பார்க்கிறது” என்று கேட்டார்.
“உங்கள் குச்சியின் நுனியைப் பார்க்கிறது” என்றான் சீடன்.
“அதுவேதான்! இந்த நாயைப்போல இருக்கக் கூடாது. குச்சியின் நுனியை, அது சுட்டிக் காட்டப்படும் சந்திரனுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. நமது பெரியவர்கள் கூறும் அனைத்து வார்த்தைகளும் வழிகாட்டிகள்தாம். அதை வழியாகக் கொண்டு நாம்தான் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். காண்பிக்கும் குச்சியையே சந்திரனாக நினைக்கும் நாய்போல இருக்காதே.” என்றார் குரு.
கான்மியோவின் குட்மார்னிங்!
கான்மியோ (Gonmyo) என்று இன்னொரு குரு. அவர் காலையில் எழுந்தவுடன் தனக்குத்தானே குட்மார்னிங் சார்” என்று சொல்லிக் கொள்வார்.
பின்னார், நீ நலமா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்வார். “ஆஹா! இந்தக் காலை நேரத்தில் மிகவும் நான் அருமையாக இருக்கிறேன்” என்று சொல்வார்.
பின்னர், அருமையாகவா? உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே” என்று சொல்லிக் கொள்வார்.
அருமையாக நலமாக இருப்பது என்பது அற்புதமான கொள்கை. அந்த அமைதியையும் லயத்தையும் உண்மையாக நீ கண்டுபிடி.
கண்டுபிடித்ததாக போலியாக நினைத்துக்கொண்டு உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே என்பது அவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் அறிவுரை!
அதை எங்கேயோ தேடி ஓடி அலையாதே; உன்னுள்ளேயே இங்கேயே இருக்கிறது அது என்பதுதான் உண்மை!
ஓரிடத்தில் அமர்ந்து உள்முகமாகத் திரும்பி தியானம் செய்து நமது உண்மைநிலையைக் கண்டுபிடிப்பதே ஜாஜென்!