'ராம்சர் இடங்கள்' என்றால் என்ன? தமிழ்நாட்டில் உள்ள 18 ராம்சர் இடங்கள் எவை?

Ramsar Sites
Ramsar Sites
Published on

ராம்சர் சாசனம் (Ramsar Convention) என்பது, ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு என்பவை தொடர்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதை ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பதுண்டு.

1971 ஆம் ஆண்டில் இவ்வொப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சர் என்னும் நகரில் ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறையால் ஏற்படுத்தப்பட்டு 1975 முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதனால், இந்த நகரின் பெயரைத் தழுவியே ராம்சர் சாசனம் என்னும் பெயர் ஏற்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தரப்பினரின் பேராளர்களின் மாநாடு நடைபெறும். இது 'ஒப்பந்தத் தரப்பினர் மாநாடு' எனப்படுகிறது.

ஈர நிலங்கள் மனித வாழ்வுக்கு மிக முக்கியமானவை. இவை உலகின் மிகக்கூடிய ஆக்கத்திறன் கொண்ட சூழல்களுள் அடங்குவன. எண்ணற்ற தாவர, விலங்கினங்களின் வாழ்வுக்காக நீரையும் பிற வளங்களையும் வழங்கும் உயிரியற் பல்வகைமையின் தொட்டிலாக இவை விளங்குகின்றன. நன்னீர், உணவு, கட்டிடப் பொருட்கள், உயிரியற் பல்வகைமை முதல், வெள்ளக் கட்டுப்பாடு, நிலத்தடிநீர் மறுவூட்டம், காலநிலைமாற்றத் தணிப்பு வரையான எண்ணற்ற நன்மைகளுக்கு ஈர நிலங்கள் இன்றியமையாதவையாக உள்ளன. எனினும், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஈர நிலங்களின் அளவும், தரமும் தொடர்ந்து குறைந்து வருவதைப் பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த நூற்றாண்டில், உலகின் 64% ஈரநிலங்கள் மறைந்து விட்டன. இதன் விளைவாக, ஈர நிலங்கள் மனிதருக்கு வழங்கும் சூழல் மண்டலச் சேவைகள் குறைவடைந்தும் விட்டன.

ஈரநிலங்களின் மேலாண்மை ஒரு உலகம் தழுவியப் பிரச்சினை. எனவே ராம்சர் சாசனத்தின் 169 ஒப்பந்தத் தரப்பினர், ஒற்றைச் சூழல் மண்டலத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தின் மதிப்பை உணர்ந்துள்ளன. ஈரநிலப் பாதுகாப்புக்காக, பன்னாட்டுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், உலகளாவிய ஈர நிலம் தொடர்பான பிரச்சினைகளை அலசுவதற்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமும், ஈரநிலங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான வசதியை இச்சாசனம் ஒப்பந்தத் தரப்பினருக்கு வழங்குகிறது.

இதையும் படியுங்கள்:
பேரிடரின் பின்னணி என்ன?
Ramsar Sites

இச்சாசனம் ஈர நிலம் என்பதற்கு ஒரு பரந்த வரைவிலக்கணத்தைத் தருகிறது. இதன்படி, ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர், சதுப்பு நிலங்கள், ஈரப் புல்வெளிகள், சேற்று நிலங்கள், பாலைவனச் சோலைகள், கழிமுகங்கள், வடிநிலங்கள், ஓதச் சமவெளிகள், அலையாத்திக்காடு அல்லது பிறவகைக் கரையோரப் பகுதிகள், பவளப் பாறைகள், மனிதர்களால் அமைக்கப்பட்ட மீன்வளர்ப்புக் குளங்கள், வயல்வெளிகள், நீர்த்தேக்கங்கள், உப்பு வயல்கள் என்பன ஈரநிலங்களுள் அடங்கும்.

இந்தியாவில் ராம்சர் இடங்கள் 85 ஆக உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் வரையில் 18 உள்ளது. தற்போது இந்தியாவில் அதிக ராம்சார் தளங்களை கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. அவை:

  1. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்

  2. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா

  3. காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்

  4. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

  5. கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்

  6. பள்ளிக்கரணை சதுப்புநிலம்

  7. பிச்சாவரம்

  8. கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்

  9. சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்

  10. உதயமார்த்தண்டபுரம் பறவைகள் சரணாலயம்

  11. வடுவூர் பறவைகள் சரணாலயம்

  12. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

  13. வேம்பனூர் சதுப்பு நிலம்

  14. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

  15. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

  16. லாங்வுட் சோலை காப்புக் காடு

  17. கழுவேலி பறவைகள் சரணாலயம்

  18. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com