
“உங்களால் முடியும் என்று நம்புங்கள். நீங்கள் பாதி தூரத்தைக் கடந்திருப்பீர்கள்” என்றார் தியோடர் ரூஸ்வெல்ட். வாழ்வில் முன்னேறத்தேவை உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. உங்களுடைய தன்னம்பிக்கை குறைந்தால், உங்கள் மேலதிகாரி களுக்கோ, மற்றவர்களுக்கோ உங்கள் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்? ஆனால், ஒருவனின் தன்னம்பிக்கை குறைவதின் காரணம் என்ன? அதற்கான முதல் காரணம் நீங்கள் தான். உங்களின் அன்றாட பழக்கவழக்கங்கள், சிறுகச்சிறுக உங்கள் நம்பிக்கையைக் குறைக்கின்றன. அவற்றை மாற்றிக்கொண்டால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
மன்னிப்புக் கேட்பது – “சாரி” என்ற ஆங்கில வார்த்தை நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒன்று. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. அடிக்கடி மன்னிப்பு கேட்பது, மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். நீங்கள், அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலில் இருக்கிறீர்கள். அதில், உங்களுக்கு விளங்காத ஒன்றை அறிந்துகொள்ள, “சாரி, எனக்கொரு கேள்வி” என்பதற்குப் பதில் “எனக்கொரு கேள்வி” என்று சொல்லலாமே. அதேபோல, சற்று நேரம் கழித்து கலந்துரையாடலுக்கு சென்றால், “சாரி, தாமதமாக வந்ததற்கு” என்பதற்குப் பதிலாக, “எனக்காக காத்திருப்பதற்கு நன்றி” என்று கூறலாம்.
உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளுதல் – கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நீங்கள் உங்களை மற்றவர்களுடன் எத்தனை முறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டுள்ளீர்கள். கூடப் படித்த ஒருவருடனோ, அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர் ஒருவருடனோ நாம் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தவறுவதில்லை. அதுவும் சகஊழியர் ஒருவர் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுதல் பெற்றாலோ, பதவி உயர்வு பெற்றாலோ, அவர் நம்மைவிட உயர்ந்தவரா, ஏன் எப்படி என்று ஒப்பிட்டு நோக்குகிறோம். இவ்வாறு அதிகமாக நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் அடைந்த வெற்றிகள் மிகச் சாதரணமாகத் தோற்றமளிக்கின்றன. நம்முடைய திறமையின் மேல் நமக்கு சந்தேகம் தோன்றுகிறது. மற்றவர்களின் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிடுத்து, நாம் இதுவரை சாதித்தது, செய்ய வேண்டியது ஆகியவற்றில் நேரத்தைச் செலவு செய்வது நல்லது.
சாதனைகளைக் குறைத்து மதிப்பிடல் – உங்களின் சாதனைகளை மற்றவர்கள் பாராட்டும்போது, “இது பெரிய விஷயமில்லை. என்னுடைய அதிர்ஷ்டம்” என்று சொல்லாதீர்கள். இது தன்னடக்கம் என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுடைய சாதனைகளை நீங்களே குறைத்து மதிப்பிடும்போது, அது உங்கள் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. அதற்குப் பதில், “நன்றி. இதற்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது” என்று சொல்லுங்கள். இதனால், நீங்கள் தற்பெருமை அடித்துக் கொள்ளவில்லை.
ஆமாம் சாமியாக இருக்காதீர்கள் – குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய பணிக்காக கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கும் சமயம், யாரேனும் ஒருவர், அவர் வேலையில் உதவி கேட்டு வந்தால், “ஆமாம், அதனாலென்ன” என்று முக்கியமான உங்கள் பணியை விட்டு அவருக்கு உதவி செய்ய இறங்காதீர்கள். “இல்லை. என்னுடைய பணியை நான் முடிக்க வேண்டும். அதற்குப் பிறகு பார்க்கலாம்” என்று சொல்லப் பழகுங்கள். பலர், வாரக்கடைசியில் வீட்டு வேலைகள் பலவற்றை வைத்துக் கொண்டு, மற்றவர்கள் பார்ட்டிக்கு வருவதற்கு வற்புறுத்திக் கூப்பிட்டார்கள், செல்லவில்லை என்றால் தவறாக நினைப்பார்கள் என்று தாங்கள் காலத்தில் செய்ய வேண்டிய வேலையை செய்யத் தவறுகிறார்கள்.
எதிர்மறை எண்ணம் உள்ளவர்களைத் தவிருங்கள் – எதிலும் நேர்மறைச் சிந்தனை உள்ளவர்களிடம், உங்களுடைய எண்ணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எதிர்மறைச் சிந்தனை உள்ளவர்கள், “இது நடக்குமா”, “இதை உன்னால் செய்ய முடியுமா” என்று உங்கள் மனதில் சந்தேகங்களை விதைப்பார்கள். நம்மைச் சுற்றி ஆமாம் சுவாமிகள் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், நம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் கூட இருக்கும் போது தன்னம்பிக்கை உயர்கிறது.
உடல் நலத்தைப் பேணுங்கள் – தன்னம்பிக்கை என்பது மனம் மட்டுமல்ல. அதில் உடலும் சம்பந்தப்பட்டுள்ளது. சரியான தூக்கம் இல்லாமல், சுறுசுறுப்பு தரும் என்ற நம்பிக்கையில் காபியை அதிகமாகப் பருகி கண் விழித்து வேலை செய்யும்போது, “நீ தளர்ச்சியாக இருக்கிறாய்” என்று உடல் சொல்வதை நாம் அலட்சியப்படுத்துகிறோம். இதனால், “என்னால் இந்தப் பணியை செய்ய இயலாது” என்று மனம் நினைக்கத் தொடங்குகிறது. ஆனால், உடல் தருகின்ற சமிக்ஞைகளைப் புரிந்து கொண்டு, அதற்குத் தேவையான ஓய்வு கொடுத்து, பணிகளைச் செய்யும் போது தன்னம்பிக்கை உயருகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பார்கள். அதைப்போல ஆராக்கியமான உடல் பணிகளை எளிதாக்குகிறது.
உள்மனதுடன் உரையாடல் – நம்மில் பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. செய்கின்ற வேலையில் எதிர்பார்த்தது நடக்காத போது, நம்மை நாமே கடுமையாக குற்றம் சாட்டுவதுபோல “சொதப்பிட்டேன்”, “இப்படித்தான், கடைசி நேரத்திலே தவறு செய்கிறேன்” என்று சொல்கிறோம். இதற்குப் பதிலாக, “இந்த முறை தவறு நடந்துவிட்டது. ஆனால், அதை சரி செய்யும் முறை எனக்குத் தெரியும்” அல்லது “என்னால் இதைச் செய்யமுடியும்” என்று சொல்வதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உள்மனதை எதிரியாக பாவிக்காமல், நண்பனாக மதித்து உரையாடுங்கள்.
வெற்றிக் கதவின் திறவுகோல் தன்னம்பிக்கை. அதனை அதிகரிக்கச் செய்வது நம்முடைய நேர்மறையான பழக்கங்கள்.